🍒 “…கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.” 🍒 – 2 கொரிந்தியர் 8:11

👉 இவ்வுலகிலே கொடுப்பதற்கு வாய்ப்பு அதிகம் பெற்றவர்கள் கிறிஸ்தவர்களே. உலக மக்களோ பணம் மீதி இருந்தால், வாய்ப்பிருந்தால் மட்டுமே புண்ணியம் கிடைக்குமென எண்ணி கொடுக்கிறார்கள். 

👉 கொடுப்பதற்கு நாம் பணக்காரர்களாய் இருக்கவேண்டிய அவசியமுமில்லை, மாத வருமானம் மீதமிருக்க வேண்டிய அவசியமுமில்லை, யாராயிருந்தாலும் எந்த நிலைமையிலிருந்தாலும் தேவனுக்கென்று கொடுக்க அழைக்கப்படுகிறோம்.  நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல; தேவன் மேலுள்ள அன்பினால் எவ்வளவு தியாகம் செய்து கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.  ஏழைகளுக்கு கொடுக்கிறவர்கள் கர்த்தருக்கே கடன் கொடுக்கிறார்களே.

👉 “தேவ பணிக்காய் நூற்றாண்டு காலமாய் மக்கள் கொடுக்கின்றனர்.  மக்கெதோனியா சபையாரோ மிகுந்த உபத்திரத்திலே இருக்கையில் கொடிய தரித்திரமுள்ளவர்களாக இருந்தும் முழு இருதயத்தோடும், சந்தோஷத்தோடும் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்தார்களாம்.  

“தனக்கு மிஞ்சி தானம்” என்ற நம்முடைய பழமொழியை அவர்கள் பொய்த்துப்போகச் செய்துவிட்டார்கள். ஆம், அவர்கள் தங்கள் திராணிக்கு மிஞ்சி கொடுத்தார்கள்.  “கொடு அப்போது உனக்கு பலமடங்கு கிடைக்கும்” என்ற பிரசங்கத்தைக் கேட்டு உணர்ச்சிப் பெருக்கெடுத்தவர்களாக கொடுக்கவில்லை.  மாறாக தாங்களே மனதாரக் கொடுத்தார்கள் என்பதற்கு பவுலே சாட்சி!

👉 எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாவது தங்களை தேவனுக்கு பிரியமான பலியாக ஒப்புக்கொடுத்துவிட்டு, பின்பு தங்களுக்குள்ளவைகளை அவர் பணிக்கென கொடுத்தார்கள்.

👉 “பிரியமானவர்களே! பெரும் பணக்காரர்கள் பெரிய தொகையை கொடுத்துவிட்டால், ஊழிய திட்டங்களை எளிதாக நிறைவேற்றிவிடலாம் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் வேதத்திலும், சரித்திரத்திலும் பார்ப்போமானால், அநேகமாக வறுமையிலுள்ளோரைக் கொண்டே தேவராஜ்யம் கட்டப்பட்டிருப்பதைக் காணமுடியும்.  

🍒 இரண்டு காசுகளைப்போட்ட ஏழை விதவை அன்பின் பெருக்கினால் உள்ளதைக் கொடுத்தாள். 🍒

🍒 சாறிபாத் விதவை சாவதற்காக வைத்திருந்த உணவில் முதற்பங்கை கொடுத்தாள். 🍒

👉 இன்று தேவனுக்கும் அவரது பணிக்கும் அவரது ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்ற வாஞ்சையாயிருக்கிறது, ஆனால் கொடுக்க ஒன்றுமில்லையே என்று நினைக்கிறீர்களோ!

தொகை சிறியதாயினும் தேவனுடைய பார்வையில் உங்கள் உள்ளமே மிக முக்கியம். இல்லை, இல்லை என்று கண்பிதுங்காமல், உள்ளதை கொடுப்போம்.  உங்கள் சபைக்கு உங்கள் தசமபாகங்களை கொடுங்கள். சக ஊழியங்களுக்கும் கொடுங்கள். ஊழியர்களுக்கும் ஊழிய காரியங்களுக்கும் காணிக்கை கொடுப்போம். பலனை இம்மையிலும், மறுமையிலும் காண்போம்.

கர்த்தர் நல்லவர். அவரை ருசிபார்த்தவர்களுக்கே அது தெரியும். மனமிருந்தால் இடமுண்டு. கர்த்தர் தனது குமாரனாகிய இயேசுவையே நமக்காக கொடுத்தார். நான் அவருக்காக எதைக் கொடுப்பேன் என சிந்திப்போம்.

கொடுங்கள். கொடுத்துக்கொண்டே இருங்கள். உலகில் நிரந்தரமாக வாழப் போவது யாருமில்லை. நித்தியத்தை எண்ணி கொடுங்கள். கர்த்தர் உங்களோடு இருப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *