இன்று நித்திரை வரவில்லை, ஆக முகப்புத்தகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன். ஒரு சிறந்த எழுத்தாளனாக அல்ல. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களமே என்பதை உணர்ந்த அன்றாட மானிடனாக. இது கதையல்ல. வாழ்வின் அனுபவம்.

ஆம், வெகு நாட்களாகவே என்னிடம் ஒரு கண்ணாடி மீன்தொட்டி இருந்தது. சில வாரங்களுக்கு முன்புதான் ஒக்சிஜன் இயந்திரம் வாங்கினேன். அவரிடமிருந்து நான்கு கோல்ட் நிற அழகிய மீன்கள் பரிசாக கிடைத்தன. நகர்புற நெரிசல் மத்தியில், சந்தோஷத்துடன் மீன்களை வளர்க்கத் தொடங்கினேன்.

ஒரு சில நாட்களே கடந்தன. தொட்டியில் நாற்றம் வீசத் தொடங்கியது. நல்லவேளை எந்த மீன்களும் செத்துப்போய்விடவில்லை. ஆனால் நாற்றம் ஏன்? சிந்தித்தேன், எதை மாற்றலாம் என்று. மீன் தொட்டியையா? மீன்களையா? அல்லது தண்ணீரையா?

மீன்கள் வாழ்வதற்கான உலகம் மீன்தொட்டி. இல்லாவிட்டால் அதற்கேது உலகம்? உரிமை? பாதுகாப்பு? அழகு மீன்கள் இல்லாவிட்டால் எதை ரசிப்பது? கடைசியாக புத்தி சொல்லியது… மாற்ற வேண்டியது தண்ணீரைத்தான் என்று!

நான் வாழும் இறைவன் படைத்த இவ்வுலகத்தை என் மனம், மீன்தொட்டிக்கு ஒப்பிட்டது. என்னுடன் கூடவே பல மீன்கள் இவ்வுலகில் உயிர்வாழ்கின்றன. என்ன சொல்வது புரிகிறதா? நான் உங்களைத்தான் சொல்கிறேன். அது சரி, மீன்தொட்டி நாற்றமெடுத்தால் என்ன செய்ய வேண்டும்? தொட்டியை சுத்தம்பண்ணி தண்ணீரை மாற்றலாம். மீன்களை? அதுவும் வாழவேண்டும். நானும் வாழ (தொழில், அந்தஸ்து, உறவுமுறை குடும்பம், சபை, நட்பு போன்றவை) நாறாமல் இருக்க வேண்டுமே?

தண்ணீரில்லாமல் மீன்களால் வாழமுடியாது என்பது உண்மைதான். அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். எனது வாழ்க்கைச் சூழலை எப்போது இறைவா மாற்றுவாய் என நான் இன்று கேட்கப் போவதில்லை.

காரணம், எனது மீன் தொட்டியில் தண்ணீரை மாற்றுவதற்காக இப்போதே இன்னொரு பாத்திரத்தில் சிறுதுளிகளை சேகரித்து வைத்துவிட்டேன். நேரம் வந்தவுடன் மாற்றிட வேண்டியதுதான் மிச்சம்! நிச்சயமாக நான் வாழும் சூழலையும்கூட நேரம் வந்தவுடன் மாற்றி, புதிய தண்ணீருக்குள் வாழும் மீனைப் போல வாழவே விரும்புகின்றேன்…

அதுவரை…. அவசரப்பட்டு நாற்றமெடுக்கும் தண்ணீரிலிருந்து வெளியே பாய்ந்து உயிரை விட்டுவிட நான் தயாரில்லை. மீன்களை வளர்க்கும் எஜமானுக்கு நன்குத் தெரியும், எதை, எப்போது, எப்படி செய்ய வேண்டுமென்று. உயிர்வாழும் மீனைப் போல, நமது ஜீவனோபாயத்திற்காக இறைவன் செயற்படும்வரை காத்திருப்பதைத் தவிர கிறிஸ்தவனுக்கு வேறு வழியில்லை!

மூன்று உண்மைகள்: ஒன்று, இறைவன் நாம் நடக்கவேண்டிய பாதையை அவரேதான் தெரிந்தெடுக்கிறார். (ஒரு மீனாக தொட்டி, தண்ணீர்) இரண்டு, நம்மீது அவர் மட்டுமே அக்கறை காட்டுகிறார். (சக மீன்கள் எப்படி ஒன்றுக்கொன்று உதவ முடியும்?) மூன்று அவரது நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். (அவர் ரசிக்கும்படி வாழ்வதா?)

சரி, உங்கள் கருத்து என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *