இன்று கர்த்தர் இலங்கை தேசத்தில் என்ன செய்கின்றார் என்று பல கிறிஸ்தவர்கள் சிந்திப்பதில்லை. இலங்கை தேசத்தினை இரண்டு அந்தகார சக்திகள் ஆளுகின்றன அல்லது இலங்கை தேசத்து மக்கள் நற்செய்தியை அறியவிடாதபடி இரண்டு அந்தகார வல்லமைகள் செல்வாக்கு செலுத்தி வந்தன. அவற்றை இன்று கர்த்தர் அசைக்கின்றார் என்ற உண்மையை இக்கட்டுரைக்கூடாக அறியத்தருகின்றேன்.

பொருளாதார நெருக்கடி மற்றும் பௌத்த மத சங்கம் என்ற கடந்த இரு கட்டுரைகளில் நான் கூறியதுபோல இலங்கை அரசாங்கத்தின் ராஜபக்க்ஷ குடும்பத்தை அரசியலிலிருந்து அகற்றிவிடுவது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு வாழ் மக்களுடன் வீதிக்கு பலர் வந்து (மக்கள் கட்சிகள் இயக்கங்கள் ஒன்றிணைந்து) போராடினாலும் போராடாவிட்டாலும் ஒரு கிறிஸ்தவனின் கடமையானது நற்செய்தியை அறிவிப்பதாகவே இருக்க வேண்டும். ஏனெனில் எமது நித்திய வசிப்பிடம் பரலோகமாகும். அங்கு இலங்கை மக்களை நாம் சேர்க்க வேண்டும்.

பொருளாதார பார்வையில் இலங்கை
இலங்கை நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனித வாழ்க்கை நெருக்கடியை (humanitarian crisis) நோக்கி செல்கின்றது. மக்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை வாங்க முடியாத நிலை ஏற்படலாம். இலங்கை அரசிடம் கையிருப்பில் உள்ள பணம் குறைவடைகின்றது. இனவாதம் பேசிய அரசாங்க அதிகாரிகள் தடுமாறுகிறார்கள். இலங்கைக்கு வருமானம் ஈட்டித் தருகின்ற சுற்றுலாத் துறை நஷ்டமடையத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் யாவும் அடகு வைக்கப்படகின்றன. எனினும் ராஜபக்சேக்கள் பதவியிழக்கும் சாத்தியம் இல்லை. காரணம் இந்திய மற்றும் சீனர்களின் நிதி உதவி மற்றும் மானியங்களே. இதில் உலக வங்கியும் கூட உறுதியான ஆட்சி ஏற்படுத்த உதவிபுரியவே செய்யும். அத்துடன் இந்தியா மற்றும் சீனாவின் கடன் மற்றும் மானியங்களை கையேந்தும். மக்கள் வீதியில் இறங்கி போராடினாலும், மாபெரும் வெகுஜன எழுச்சி (Mass uprising) இன்னும் ஏற்படவில்லை. ஒரு மாபெரும் வெகுஜன எழுச்சி ஏற்படும்போது இறுதிச்சக்தியான இராணுவம் வன்முறையை கையிலெடுக்கத் தயங்காது.

பௌத்த மதவாத பார்வையில் இலங்கை
இன்று இலங்கை அரச தலைவர்கள் வெவ்வேறு சோதிடர்களை நாடுகின்றனர். மந்திர செயல்களில் பில்லிசூனியங்களில் இரகசிய யாகங்களில் ஆறுதல் தேடுகின்றனர். எனினும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை இன்றுவரை காப்பாற்றி வைத்திருப்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட மகாசங்கமேயாகும்.
பௌத்த மத சங்கங்களில் சியாம், இராமாணிய, அமரபுர ஆகிய மூன்று நிகாயங்கள் இருந்தாலும் சியாம் நிகாயமானது மொத்த பிக்குக்களில் 93% சதவீதத்தினரைக் கொண்டதாகவும், சிங்கள உயர்சாதிக் கட்டமைப்பான கொவிகம சாதியை 100% சதவீதம் கொண்ட கட்டமைப்பாகவும் உள்ளது. இந்த சியாம் நிகாயத்தில் மல்வத்த, அஸ்கிரிய என்ற இரண்டு உயர் பீடங்கள் உள்ளன. இந்த உயர்சாதி கட்டமைப்பால் கட்டமைக்கப்பட்ட உயர்பீடங்கள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இன்று மௌன ஆதரவினை வழங்கி வருகின்றன
ராஜபக்ச குடும்பத்தினரை எதிர்கொள்ள தகுதியோ திராணியோ ஆற்றலோ இல்லாத நிலையிலேயே எதிரணியில் உள்ள தலைவர்கள் உள்ளனர். அதாவது எதிரணிக்கு பௌத்த மல்வத்த, அஸ்கிரிய உயர் பீடங்களின் ஆதரவு பெற்ற தலைவர்கள் இல்லாமல் இருக்கின்றனர்.

தேவனுடைய பார்வையில் இலங்கை
இலங்கை தேசத்து மக்கள் நற்செய்தியை அறியவிடாதபடி செல்வாக்கு செலுத்திவருகின்ற தெய்வமாக இன்று பணம் காணப்படுகின்றது. பணத்தை நம்புகின்ற மக்கள் தெய்வத்தை தேடவதில்லை. பொருளாதார பணம் என்ற ஆதிகாரம் இன்று மக்கள் மத்தியில் வீழ்ச்சியடையும் போது மக்கள் தெய்வம் எங்கே என்று தேடுகினறார்கள். பொருளாதார பண பலம் இலங்கை தேசத்தில் வீழ்ச்சியடைகின்ற நிலையில் தெய்வம் இலங்கை மக்களின் கண்களைத் திறக்கின்றார். எப்படியெனில் இதுவரை காலமும் பணத்தினால் கண்கள் குருடாக்கப்பட்டிருந்த மக்கள் இப்பொழுது எவ்வளவு பணம் கொடுத்தாலும் தேவையான பொருளை வாங்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது மக்கள் தானாகவே நற்செய்தியை தேடி வருவார்கள்.

இலங்கை தேசத்து மக்கள் நற்செய்தியை அறியவிடாதபடி செல்வாக்கு செலுத்திவருகின்ற இன்னொரு தெய்வமாக பௌத்த மத சங்கங்கள் காணப்படுகின்றன. இதை நம்புகின்ற அரசியல்வாதிகள் அவர்களின் கால்களில் விழவும் தயங்குவதில்லை. இன்று இனவாதம் மதவாதம் பேசிய அரசியல் சார்புள்ள பௌத்த துறவிகளை மக்கள் துரத்துகின்றனர். பௌத்த விகாரைகளிலிருந்து சில துறவிகள் மக்கள் பயத்தினால் ஓடி ஒளிகின்றனா். இலங்கை தேசத்தில் பௌத்த மத சங்கங்கள் வீழ்ச்சியடைகின்ற நிலையில் மக்களின் கண்கள் திறக்கப்படுவது உறுதி. அரசியல் பலத்திற்காக மத வைராக்கியமாக இருந்த துறவிகளை இனி மக்கள் நம்பத் தயாரில்லை என்ற நிலை வரும்போது மெய்யான தெய்வம் யார் என்பதை அறிய மக்களின் கண்கள் நிச்சயமாக திறக்கப்படும்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் மக்களை அரசாங்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ திசை திருப்புவதை நிறுத்திக்கொள்வதோடு அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராக வெளியிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் எமது தேசத்தில் பண துரைத்தனத்தை பௌத்த மத துரைத்தனத்தை தேவன் அசைத்திருப்பதினால் அக்கட்டில் சிக்குண்ட மக்களை கிறிஸ்தவர்களாகிய நாம் விடுவிக்க முன்வரவேண்டும்.

இலங்கை தேசத்து கிறிஸ்தவர்கள் இனியாவது நற்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாவப்பட்ட தள்ளாடுகின்ற துன்பப்படுகின்ற மக்களுக்கான வெளிச்சம் அதுவே. நற்செய்தி தரும் சமாதானத்தை இலங்கை மக்கள் அனுபவிக்க வேண்டும். பௌத்த மத சங்கங்களின் செல்வாக்கினால் குருடாக்கப்பட்ட மக்களுக்கு தமத கையிலுள்ள பணத்தின் செல்வாக்கினால் சிக்குண்ட மக்களுக்கு மெய்யான வெளிச்சம் இயேசு தருகின்ற சந்தோஷம் சமாதானம் விடுதலை நீதி என்பவற்றை எடுத்துரைக்க வேண்டும்.

இன்றே இலங்கை தேசத்தின் திருச்சபை (Denormination) ஊழிய நிறுவனங்கள் (Organizations) கிறிஸ்தவ ஊழியர்கள் பண தெய்வத்தையும் மத தெய்வத்தையும் எதிர்த்து சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். இலங்கை தேசத்து கிறிஸ்தவர்கள் தேவன் அருளிய வரங்களையும் தாலந்துகளையும் நான்கு சுவர்களுக்குள்ளே மட்டும் பயன்படுத்தாமல் சந்தைவெளியில் மக்கள் மத்தியில் உலாவந்து நடமாட வேண்டும். மக்களிடத்தில் தேவனின் வல்லமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஆக இன்றைய காலத்தில் இலங்கை தேசத்தினை கட்டிவைத்திருந்த பௌத்த மத சங்கங்களின் வீழ்ச்சியையும் பொருளாதார மேட்டிமைகள் வீழ்ச்சியடைவதையும் நாம் காண்கின்ற நேரத்தில் சுவிசெஷத்திற்கூடாக மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கிறிஸ்தவனிடமும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *