சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட்டம்காண செய்யமுடியாதிருக்கிறது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்திருக்கும் அடியே. இருந்தபோதும் ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தை இன்றுவரை காப்பாற்றி வைத்திருப்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கட்டமைக்கப்பட்ட மகாசங்கமேயாகும். இச்சங்கம் ராஜபக்சக்களை தூக்கி எறிவதற்கோ அல்லது அவர்களை முற்றாக கைவிடுவதற்கோ தயாரில்லை.

இலங்கை பௌத்த மகாசங்கமும் – ஆட்சி கவிழ்ப்பு முயற்சியும்

இலங்கை ஒரு பௌத்த நாடு என்றவகையில், பௌத்த பீடங்களே அதன் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.

பௌத்த மகாசங்கமானது இந்திய எதிர்ப்புவாதத்தையும் – தமிழின அழிப்புவாதத்தையும் – இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்புணர்வையும் – கிறிஸ்தவ நற்செய்திக்கு எதிரான சித்தாத்தங்களையும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சியாம், இராமாணிய, அமரபுர ஆகிய மூன்று நிகாயங்களைக் கொண்டது. இதில் சியாம் நிகாயமானது மொத்த பிக்குக்களில் 93% சதவீதத்தினரைக் கொண்டதாகவும், சிங்கள உயர்சாதிக் கட்டமைப்பான கொவிகம சாதியை 100% சதவீதம் கொண்ட கட்டமைப்பாகவும் உள்ளது. இந்த சியாம் நிகாயத்தில் மல்வத்த, அஸ்கிரிய என்ற இரண்டு உயர் பீடங்கள் உள்ளன.

இன்று இவ்விரு பீடங்கள்தான் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வழிநடத்தும் கட்டமைப்பாகும். இவைதான் பௌத்த பேரினவாதத்தின் மத்தியிலும், அரசியலிலும் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவை. இப்பீடங்களைச் சேர்ந்தவர்கள் சூரிய மஞ்சள் நிற ஆடையை உடுத்திருப்பார்கள். இந்த நிகாயம் அடிப்படையில் இந்திய எதிர்புவாதம், தமிழின அழிப்புவாதம் – இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்புணர்வையும் – கிறிஸ்தவ நற்செய்திக்கு எதிரான சித்தாந்தங்களை பல்லாண்டுகளாக பேணுகின்றன.

Ramana nikaya

அடுத்துள்ள நிகாயங்களான இராமணிய, அமரபுர நிகாயங்கள் மொத்த பிக்குகள் தொகையில் வெறும் 7 வீதத்தினைரைக் கொண்ட கட்டமைப்பாகும். இது சிங்கள கொவிகம தவிர்ந்த ஏனைய கரவ, துரவ, சலாகம ஆகிய சாதிக் கட்டமைப்புக்களைச் சார்ந்த பிக்குகளைக் கொண்டவை. இந்த இராமணிய அமரபுர நிகாயங்களால் தனித்து முடிவெடுக்க முடியாது. காரணம் கொய்கம தவிர்ந்த ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு அடிப்படையில் இந்த பௌத்த பீடங்கள் விரும்புவதில்லை. அந்தவகையில் ஜேவிபி இயக்கமானது கரவ, துருவ, சலாகம சாதியினரின் ஆதரவுத் தளத்தையே கொண்டு இருப்பதால் இவர்களும் ஆட்சிக்கு வர மகா சங்கத்தின் முன் தகுதி இழக்கின்றன. மகா சங்கத்தினரினால் தமிழ் எதிர்ப்புணர்வு காரணமாக தமிழர்களும் ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் போன்ற உயர் அரசியல் பதவிகளைப் பெற தகுதி இழந்தவர்களாக இருப்பதே இலங்கையில் எழுதப்படாத சட்டமாக உள்ளது.

siyam nikaya

உயர்சாதி கட்டமைப்பால் கட்டமைக்கப்பட்ட உயர்பீடங்களான அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இன்று மௌன ஆதரவினை வழங்கி வருகின்றன. அத்துடன் இன்றைய சூழலில் ராஜபக்ச குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பினாலும் ராஜபக்ச அன்கோவினால் அவர்களின் குடும்பத்தினர் தரப்பில் 600 பேர் உயர் பதவிகளில், நிர்வாக அதிகாரிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இவை அரசியல் நியமனப் பதவியாகும். எனவே கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பினாலும் அவர்களின் குடும்பங்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கும் குடும்ப ஆட்சியை கண்டுபிடித்து அவர்களையும் அனுப்புவது தற்போதைய நிலையில் இலகுவானதல்ல. ராஜபக்ச குடும்பத்தினரை எதிர்கொள்ள தகுதி இல்லாத தலைவர்களாகவே எதிரணியில் உள்ள தலைவர்கள் உள்ளனர். எதிரணிக்கு பௌத்த மல்வத்த, அஸ்கிரிய உயர் பீடங்களின் ஆதரவு பெற்ற தலைவர்கள் இல்லாமல் இருக்கின்றனர்.

Amarapura nikaya

அடுத்து இராணுவத்தினை எடுத்துக்கொள்வோமாக இருந்தால் கொவிகம அற்ற சமூகத்தை (Non Goigama) வைத்துக்கொண்டுதான் ராஜபக்ச குடும்பம் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னான 17 வருடங்களில் தன் ஆதரவாளர்களை கோப்ரல் பதவிக்கு மேல் உயரதிகாரிகள் வரை அவர்களை நியமித்து தம்மைச்சுற்றி அரணமைத்தனர். இன்று சலாகம சாதியினரைச் சேர்ந்த சவேந்திர டி சில்வாவை இராணுவத் தளபதியாக்கியமையைக் கூறலாம். இதனால் இராணுவப் புரட்சிமூலம் ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சிக்கவிழ்பு செய்வதும் சாத்தியமற்றதொன்றாகிவிட்டது. இராணுவத்தின் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதும் சாத்தியமாகியுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகை அடிப்படையில் தமிழ் மக்கள் 12% ம், கொவிகம தவிர்ந்த ஏனைய சிங்கள சாதியினர் 22%ம், கிறிஸ்தவ சமூகத்தினர் 7%ம், உள்ளனர். இதில் ரோமன் கத்தோலிக்கர் அல்லாத திருச்சபையினர் 2% குறைவு மட்டுமே . இதனால்தான் கத்தோலிக்க திருச்சபை மல்கம் ரஞ்சித் ஆண்டகையினுடைய குரலை மகாசங்கமும், ராஜபக்ச குடும்பத்தினரும் கணக்கிலெடுப்பதில்லை.

இப்போது இலங்கையில் மக்களுக்கு அடிப்படை தேவைகளுடன் எரிபொருள், வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி போராடினாலும், மாபெரும் வெகுஜன எழுச்சி Mass uprising இன்னும் ஏற்படவில்லை. ஒரு மாபெரும் வெகுஜன எழுச்சி ஏற்படும்போது இறுதிச்சக்தியான இராணுவம் வன்முறையை கையிலெடுக்கத் தயங்காது. மகாசங்கம் இவற்றை அங்கீகரிக்காது.

எனினும் கிறிஸ்தவர்கள் மற்றும் அதன் தலைவர்கள் இந்த சிங்கள பௌத்த இனவாத வல்லமைக்கும் துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிராக எழுந்து நிற்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

2022 April

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *