எமது ஆதித் தகப்பனான ஆதாம் இன்றும் உயிரோடிருந்தால், இன்று அவரது வயது ஏறத்தாள 6000 பூர்த்தியாகி இருந்திருக்கும். ஆனால் அவர் பிறந்தநாளைக் கொண்டாட இப்பூமியில் இன்றில்லை. ஏனென்றால், அவர் தேவனுடைய பிரதான கட்டளையை மீறிவிட்டார். அதனால் சரீர  மரணமடைந்து விட்டார். அன்று, ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார். (ஆதியாகமம் 2:16-17). ஆண்டவருடைய இந்தக் கட்டளையை ஆதாம் மீறிவிட்டார். இதனால் அவர்  சரீரப்பிரகாரமான மரணத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது.

அன்று ஆதாம் ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால், இன்று பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பாரா? இல்லையா? தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம், பாவம் செய்ததுபோலவே இன்றும் மனிதர்களின் அக்கிரமும் பாவமும் பூமியிலே பெருகிவருகின்றது. பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது பரிசுத்த வேதாகமம் (ரோமர் 6:23). ஆம், பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் கிருபை வரமோ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நித்திய ஜீவனாகும். அந்த நித்திய வாழ்வு இயேசு கிறிஸ்துவினாலேயே நமக்குக் கிடைக்கின்றது.

அன்று ஆதாமையும் ஏவாளையும் தேவன் படைத்தபோது, நித்திய ஜீவனை உடையவர்களாக வாழ்ந்தார்கள். எப்பொழுது கட்டளையை மீறி பாவம் செய்தார்களோ, அப்பொழுது பாவத்தின் விளைவான மரணத்தை பெற்றுக்கொண்டனர். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது (930) வருஷம்; அவன் மரித்தான்.(ஆதி 5:5)

மனிதர்களின் பாவம் பூமியிலே பெருகியதைக் கண்ட ஆண்டவர், ‘என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்’ என்றார். தேவன் கூறியபடியே, கர்த்தருடைய ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; மனிதன் என்பவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷமானது. (ஆதி 6:3).

எனினும், மனிதனுடைய பாவம் குறைந்தபாடில்லை. மனிதனுடைய ஆயுசு சக்கரம் இன்று மிகவும் குறைந்துவிட்டமைக்கு காரணம் யார்? சிந்தித்ததுண்டா? “எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன  துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்” என்ற சங்கீத வார்த்தை எத்தனை உண்மை? தற்போது மனிதனின் வயது இதையும்விட குறைந்துவிட்டது ஏன்? பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். (சங் 90:10)

இன்று பிறந்தநாளைக் கொண்டாடுவது ஒருபுறமிருக்க, மரிக்கும் நாளை மனிதன் எண்ணிக்கொண்டிருக்கின்றான் என்பதே உண்மை. பாவத்தின் சம்பளம் மரணம் என்ற சட்டத்திட்டத்திற்குள் பிறந்தநாளைக் கொண்டாடும் மனிதன் தோற்றுவிட்டான்! எனினும், ஆறறிவுள்ள மனிதன் தனது நிலையை உணர்ந்தபாடில்லை!

மத்தேயு எழுதுகின்றபடி, ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் பண்ணி, ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாளாம் (மத்தேயு 14:6). நடந்தது என்ன தெரியுமா? அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக ஏரோது ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். விளைவு, அவளது தாய் சொல்லிக்கொடுத்தபடியே, யோவான்ஸ்நானனுடைய தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். ஏரோது தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; சிறையில் இருந்த யோவானின் தலையை ஏரோது வெட்டச் செய்தான். பார்த்தீர்களா? புறஜாதியானாகிய ஏரோது தன் பிறந்தநாளைக் கொண்டாடிய விதத்தைக் கவனித்தீர்களா? புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் (எரே 10:2) ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் இவற்றைக்குறித்து சிந்திக்க வேண்டுமல்லவா!

எனினும், ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்! நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை இவ்வுலகம் கொண்டாடினாலும், தேவன் அந்த நாளை வேத புத்தகத்தில் எழுத வைத்திட உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்று நாம் எமது பிறந்தநாளைக் கொண்டாடுவது சரியா? அல்லது பிழையா என்பதை காட்டிலும், ஆண்டவரைப் பின்பற்றுகிறோமா? அல்லது உலகத்தைப் பின்பற்றுகிறோமா என்பதை சிந்திப்பதே அவசியமானதாயிருக்கிறது.

ஒரு நாள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இல்லாமல்போகும் நாள் வரும். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.” (வெளி 21:1) அவ்வாறே, பாவத்தின் விளைவான மரணமும் ஜெயமாக விழுங்கப்படும் (1கொரி 15:54). எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். (1கொரி 15:52) ஆக மொத்தத்தில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.(1கொரி 15:57)

ஆகவே, இன்றே நாம் சிந்திப்போம்! தேவன் அருளிய கட்டளைகளைக் கைக்கொள்ளுவோம். இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். (உபாகமம் 11:26-28)

ஏசாயா தெளிவாக கூறுகிறார்: நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, அவன் உயா;ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும். உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும். (ஏசா 33:15-17)

ஆம், பிரியமானவர்களே, எமது ஜென்ம சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.(1கொரி 15:46) அந்த ஆவிக்குரிய சரீரத்தை பெற வாஞ்சிப்போம். மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். (1கொரி 15:49) கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

நன்றி – யோகநாதன் ஜோன்சன் – ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *