ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் ஊழியத்திற்காய் சென்று கொண்டிருந்தேன். எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு முன்னே வருவதை நான் பார்த்த போது, அவரைப் பார்த்து புன்னகையோடு வாழ்த்தினேன். ஆனால் நடந்தது என்ன? அந்த நபர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றுவிட்டார். அந்த ஒரு நொடியில் என் மனதில் இருந்த மகிழ்ச்சியையும், முகத்தில் காணப்பட்ட புன்னகையையும் அந்த நபர் நொறுக்கிவிட்டு சென்று விட்டார்.

இப்படிப்பட்டவர்களைத்தான் குப்பை வண்டிகள் என்று அழைக்க வேண்டும். இந்த குப்பை வண்டிகள் தங்கள் மனதில் ஆயிரம் காயங்கள், விரக்தி, எரிச்சல், கோபம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற குப்பைகளை நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த குப்பைகள் நிரம்பி வழியும் போது, அவர்கள் தன்னை சந்திப்பவர்கள் மீதெல்லாம் அந்த குப்பைகளை கொட்டிவிடுவார்கள்.

உங்கள் வாழ்க்கையிலும் இது போன்ற பலரை நீங்கள் சந்தித்திருக்கலாம். நிந்தனையான வார்த்தைகளை பேசி மனதை புண்படுத்திவிட்டு கடந்து போய்விடுவார்கள். காரணமில்லாத சாபங்களை விடுவார்கள். தேவையில்லாமல் நம்மை பகைப்பார்கள். அடிக்கடி கோவித்துக் கொண்டு நம்மோடு பேச மறுப்பார்கள். நாம் சிரித்தாலும் பதிலுக்கு முறைப்பார்கள்.

இவைகள் நம் சமாதானத்தை நொறுக்கி, அந்த நாளையே கெடுத்துப் போடுகின்றது. அதையே நினைத்து நினைத்து நாம் வருத்தப்பட்டு நம்மையே வருத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன? வேதத்தில் சவுல் ராஜாவான போது, சிலர் இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனை அசட்டைபண்ணினார்களாம். ஆனால் சவுலோ காதுகேளாதவன் போல இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. (1 சாமு 10:27).

குப்பை வண்டிகள் தங்கள் மனதின் குப்பைகளை உங்கள் மீது கொட்ட வரும் போது, நீங்கள் காது கேளாதவர்கள் போல இருந்தால், அவர்களால் அந்த குப்பைகளை உங்கள் மீது கொட்ட முடியாது.

உங்கள் வீட்டிலோ, சாலையிலோ, பணி புரியும் இடத்திலோ அல்லது சபையிலோ, யார் உங்களை காரணமில்லாமல் நிந்தித்தாலும், உங்கள் மேல் எரிந்து விழுந்தாலும், அதை காதில் வாங்காமலும், பதிலுக்கு எந்த வார்த்தையும் பேசாமலும், புன்னகையோடு அமர்ந்திருங்கள். அப்பொழுது அவர்கள் குப்பை உங்களை அசுத்தப்படுத்தாது. உங்கள் மன சமாதானத்தை கெடுக்கவும் முடியாது.

எனவே இப்படிப்பட்ட குப்பை வண்டிகளுக்கு ஜாக்கிரதையாயிருங்கள்!

குப்பை வண்டிகளுக்கு செவிகொடுத்து, நம் சமாதானம் கெட்டுப் போனால், நாமும் பிறருக்கு குப்பை வண்டியாய் மாறிப் போவோம்.

தேவன் நம்மை குப்பை வண்டியாய் அல்ல, சமாதான வண்டியாய் பிறரை ஆசீர்வதிக்கவே அழைத்திருக்கின்றார். நாம் செல்லுகிற இடமெல்லாம் நம் மூலமாய் சமாதானமும் சந்தோஷமும் உண்டாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *