தேவ மகிமையை மாற்றாதே!

வழிபாட்டுக்குரியவர் தேவனே. அவருக்கே மகிமை செலுத்தப்படல் வேண்டும். ஆனால் புறஜாதியார் தேவ மகிமையைத் தாமே உருவாக்கிய விக்கிரகங்களுக்குக் கொடுத்துள்ளனர். சிருஷ்டிப்பினூடாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவ வெளிப்படுத்தலை ஏற்றுக்கொண்டு தேவனை மகிமைப்படுத்தாதவர்கள், தங்கள் வீணான சிந்தனைகளின்படி தங்களுக்கு விக்கிரகங்களை உண்டுபண்ணி, அவற்றை வழிபட்டார்கள். இவ்விதமாக, அவர்கள் தேவ மகிமையை மாற்றியுள்ளனர்.

இவர்கள் உலக ஞானத்தையுடையவர்களாயிருந்தாலும்கூட தேவனுடைய பார்வையில் ஞானமற்றவர்களாகவே இருக்கின்றனர். மட்டுமல்ல, ‘மெய்யான தேவனிடம் வரமுடியாத ஞானம் மெய்யான ஞானமாயிருக்க முடியாது. இதனால்தான், தேவனை அறியாத புறஜாதி மக்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரராக அதாவது அறிவற்றவர்களாக இருக்கின்றனர். அதனால்தான் இவ்வுலக ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாகவே இருக்கின்றது (1கொரிந்தியர் 1:19-21).

தங்களை ஞானிகளாக கருதியவர்கள், தங்கள் வீணான சிந்தனைகள் காரணமாக, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.(ரோமர் 1:23) புறஜாதி மக்களுடைய பைத்தியக்காரத்தனத்தை இதில் நாம் காணலாம். தேவனால் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலை ஏற்றுக்கொண்டு தேவனுக்கு செலுத்த வேண்டிய மகிமையை செலுத்தாமல் தங்களுடைய கற்பனைகளின்படி உருவாக்கப்பட்ட விக்கிரகங்களுக்கு அதை செலுத்துபவர்கள் உண்மையிலேயே பைத்தியக்காரத்தனமாகவே நடந்துகொள்கின்றனர்.

விக்கிராராதனைக்காரர் தேவனோடு எவ்வித தொடர்பும் அற்றவர்களாக வீண் மாயைக்குள் வாழ்கின்றார்கள். அவர்கள் அழிவில்லாத அதாவது என்றென்றும் இருக்கும் தேவனை வழிபடாமல், அழியக்கூடிய விக்கிரகங்களை வழிபடுகிறார்கள். விக்கிரக வழிபாட்டின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றி வேதாகமம் பின்வருமாறு கூறுகின்றது:

‘அவர்களுடைய விக்கிரகங்கள் வௌ்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். (சங்கீதம் 115:4-8) என வேதாகமம் கூறுகின்றது. (ஏசாயா 40:19-20, 44:9-20, எரே 16:20, 10:2-5)

தங்களை ஞானிகளாக அறிவாற்றல் மிகுந்தவர்களாக கருதும் மக்கள் தேவனை ஒரு மரத்துண்டாக, கல்லாக, மண்ணாக, உலோகமாக மாற்றியுள்ளார்கள். இதுவே அவர்கள் ஞானமற்றவர்கள் என்பதைக் காட்டுகிறதல்லவா? தேவ வெளிப்படுத்தலை நிராகரித்து தங்கள் கற்பனைகளின்படி தேவர்களை உருவாக்குவது பைத்தியக்காரத்தனமான செயலாகும். ‘பைத்தியக்காரத்தனத்திற்கு முதன்மையான ஆதாரம் விக்கிர வழிபாடேயாகும்’ (வில்சன்)

புறஜாதி மக்கள் தேவனுக்குக் கொடுக்கவேண்டிய மகிமையை விக்கிரகங்களுக்கு கொடுத்துள்ளது சத்தியத்தைப் பொய்யாக மாற்றியச் செயலாகும். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள் (ரோமர் 1:25) என பவுல் கூறுகிறார். இவர்கள் தேவனால் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலின்படியான தேவ சத்தியத்தை நம்பாமல், அதற்குப் பதிலாக பொய்யை நம்பியுள்ளார்கள். இதனால்தான் தேவனை வழிபடாமல் அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவைகளை வழிபடுகிறார்கள்.

சத்தியத்திற்குப் பதிலாக பொய்யை நம்பி, தேவனல்லாத விக்கிரகங்களைத் தேவன் என்று சொல்லி அவற்றை வழிபடுகின்றனர். அவர்கள் சத்தியத்திற்குப் பதிலாக பொய்யை ஏற்றுக்கொண்டுள்ளனர். உண்மையில், ‘புறஜாதியாருடைய மதங்களில் சத்தியம் இல்லை. அவர்கள் சத்தியத்தைப் பொய்யாக மாற்றியுள்ளனர். இதனால் அவர்களுடைய மார்க்கங்களில் பொய்யே உள்ளது’ இதனால்தான் அவர்கள் சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவிக்கின்றனர்.

விக்கிரகங்கள் தெய்வங்கள் அல்ல என்பதனால் (1கொரி 8:4, எரே 6:20) அவற்றை வழிபடுகிறவர்கள் தேவனை வழிபடவில்லை. மாறாக, விக்கிரகத்தை தெய்வம் என்றுசொல்லி பொய்யையே வழிபடுகின்றார்கள் (லின்ஸ்கி).

தேவனே மக்களுடைய தொழுகைக்கும் வழிபாட்டுக்கும் உரியவர். அவருக்கே மகிமையும் ஸ்தோத்திரமும் செலுத்தப்படல் வேண்டும். இதனால் ‘அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.’ (1:25) என்கிறார் பவுல்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்ல. தேவன் என்றென்றும் நித்திய காலமாய் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். எனவே நாம் எப்பொழுதும் அவருக்கே மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்த வேண்டும்.

புறஜாதி மக்களைப் போல, தேவனைப் பற்றி நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கிவைக்கக்கூடாது. தேவ வெளிப்படுத்தலை மறுதலித்து அவருடைய மகிமையை வேறெதற்கும் மாற்றக்கூடாது. நாம் என்றென்றும் நித்தியகாலமாய் அவரை மகிமைப்படுத்தி நம்முடைய துதி ஸ்தோத்திரத்தை அவருக்கு மட்டுமே செலுத்தவேண்டும்.

எம். எஸ். வசந்தகுமார் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *