ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் நல்ல பொருத்தம் தேடுவது என்பது கூட பெரிய பாரம் இல்லை. matrimonial இணையதளங்களும் பெருகி விட்டன.
ஆனால் திருமணத்துக்காக பணம் சேர்ப்பதே இன்றைக்கு பெரிய பாடாக இருக்கிறது.
ஒரு பெண்ணாக பிறந்து விட்டால், அவளுடைய பெற்றோரும், சகோதரரும் கடன் சுமைக்கு கழுத்தை நீட்டியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
நான் இந்துவாக இருந்தபோது வரதட்சணை, சீர், மாப்பிளைக்கு பைக்/கார் வாங்கி கொடுக்க மக்கள் படும் அவதிகளை கண்டு இருக்கிறேன். சில குடும்பங்களில் இப்படி கடன்பட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோரையும் பார்த்து இருக்கிறேன்.
சரி இயேசுவை அறிந்த கிறிஸ்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என பார்த்தால் இங்கே இரண்டு மடங்கு நாறுகிறது.
ஏனென்றால் இயேசுவை அறிந்தோம் என சொல்லுகிறார்கள், செயல்களிலோ மறுதலிக்கிறார்கள். இதில் யூதாஸ் எவ்வளவோ மேல் என தோன்றுகிறது. ஏனென்றால் அவன் தவறு செய்ததை அறிந்து கதறினான். இவர்கள் தவறு செய்வதை அறியாமல் வாழ்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய சபைகளில் 80 பவுன் முதல் 200 பவுன் வரை போட்டால் தான் திருமணம் நடக்குமாம்.
பெருமைக்காக எல்லாவற்றையும் விற்றாவது கடன் வாங்கியாவது நகையை போடுவார்களாம்.
பணம் இல்லாத நான் எப்படி திருமணம் செய்வேன் என ஏங்கும் உங்களுக்கு தேவன் கொடுத்த ஞானத்தால் எனக்கு தெரிந்ததை சொல்ல விரும்புகிறேன்.
தீர்வு 1: நீங்கள் மறுபடி பிறக்கவேண்டும்
இன்று 1 பவுன் விலை ரூ. 30,770. அதாவது ஒரு நடுத்தர தமிழனின் 2 மாத சம்பளம்.
50 பவுனுக்கு ஒருவர் எத்தனை மாதம் உழைக்க வேண்டும். 100 மற்றும் 200 பவுனுக்கு. நினைத்தாலே தலை சுற்றுகிறது அல்லவா ?
தங்கத்தின் மீது பற்று வருவது எல்லா பெண்களுக்கும் இயல்பானதே. உயர்வான பொருட்களால் தன்னை அலங்கரிப்பது ஜென்மசுபாவத்தில் ஊறிப்போன ஒன்று.
ஆனால் கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வரும்போது, கிறிஸ்து சிந்தித்த வண்ணம் சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.
மனிதர்களுக்கு பிரியமாய் வாழ்வதை அழித்து விட்டு தேவனுக்கு பிரியமானது என்னவென்று நிதானிக்க ஆரம்பிக்கிறோம்
மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. (லூக்கா 16:15)
மறுபடி பிறந்த எல்லாருடைய மனதும், தங்கத்தால் தன்னை அலங்கரிக்க நாடாது, பேதுரு சொன்னது போல “சாந்தமும், அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் உள்ள குணங்களினாலே அலங்கரிக்க நாடும்” ( 1 பேதுரு 3:4)
ஏனென்றால் மறுபடி பிறந்தவர்கள் மனுஷரை பிரியப்படுத்த வாழாமல் தேவனை பிரியப்படுத்த வாழ்கிறோம். தேவன் இருதயத்தையே காண்கிறார்.
தேவனுடைய பார்வையில் விலையேறப்பட்டது தங்கம் அல்ல, நம்முடைய குணங்களே ஆகும்.
உலகத்திலும், உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள் என நீங்கள் வாசித்து இருக்கிறீர்களே.
வானமும், பூமியும் ஒழிந்து போகும் என்றும் தேவனுடைய வார்த்தையோ ஒழிந்து போகாது, அது என்றென்றும் இருக்கும் எனவும் வாசித்து இருக்கிறீர்களே !
எனவே என்றென்றும் இருக்கும் அந்த வசனத்துக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்
,_________________
தீர்வு 2: அந்நிய நுகத்தில் சிக்காமல் இருங்கள்
நீங்கள் இரட்சிப்பை பெற்று இருந்தாலும், மறுபடி பிறந்து இருந்தாலும், உங்களுக்கு வரும் துணை சரியாக இல்லாவிட்டால் காலம் முழுக்க வேதனை தான்.
கிறிஸ்துவுக்குள் நற்சாட்சி பெற்றவர்களை மட்டுமே திருமணம் செய்யுங்கள். அப்படிப்பட்ட வரனை கர்த்தர் தர ஜெபியுங்கள். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்.
என்னை கிறிஸ்துவுக்குள் அழைத்து வந்த சகோதரன் பெந்தகொஸ்தே சபையில் ஒரு சாதாரண விசுவாசி. திருமணம் ஆன போது பெண் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக 85 பவுன் போட்டு திருமணம் செய்தார்கள். பெண் இரட்சிப்பை பெற்று இருந்தாலும் மறுபடி பிறந்த அனுபவம் இல்லை.
ஒரு வருடம் கழித்து அவர்கள் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்பட்ட போது நகை வேண்டாம் என தவிர்க்க ஆரம்பித்தார்கள்.
உடனடியாக அந்த சகோதரன் மொத்த நகை ஆபரணங்களையும் மாமியார் வீட்டுக்கே அனுப்பி விட்டார். அவருக்கு அவைகள் அருவருப்பாக இருந்ததால், தன் வீட்டில் அவை இருப்பதை விரும்பவில்லை.
பின்னர் அவர்களுடைய வேலையிலும் உயர்வு கிடைத்தது, வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டை வாங்கினார்கள், ஆடம்பர பொருள் என வாங்கி குவிக்காமல் ஏழை சிறுவர்களின் நலனுக்காக நடத்தப்படும் ஊழியங்களுக்கு வருவாயில் பெருந்தொகையை அனுப்புகிறார்கள்.
கர்த்தர் இப்படிப்பட்ட நகை/ பணத்தை விரும்பாத எத்தனையோ பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கிறார். திருமணத்தை நடத்த பணம் தாரும் என கேட்பதை விட, பணத்தை விரும்பாத நல்ல வரனுக்காக கர்த்தரிடம் ஜெபிப்பது நல்லதல்லவா ?
,_________________
- உபதேசத்தை செயல்படுத்தும் சபைக்கு மாறுங்கள்
கத்தோலிக்கர்கள் வேதத்தை கைக்கொள்வது இல்லை. கிறிஸ்துவின் ஆவிக்கு இடங்கொடுப்பதும் இல்லை. அதே போல 80% சபைகள் திருமண சுமைகளில் இருந்து குடும்பங்களை விடுவிக்காமல், யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்த கூடாது என்றே இருக்கின்றன. அதினால் தான் இன்னும் வரதட்சணை/ நகை ஆபரணம் போன்றவை கிறிஸ்தவத்தில் நுழைந்து பாடுபடுத்துகின்றன.
இப்படிப்பட்ட ஊழியர்கள் தேவனை பிரியப்படுத்தாமல், மனுஷரை பிரியப்படுத்துகிறார்கள். என்னிடம் கேட்டால் இவர்கள் ஊழியர்களே இல்லை என்பேன்
என் திருமணத்தில் என் போதகர் காணிக்கையை கூட வாங்க வில்லை. திருமணத்தை கர்த்தருக்கேற்ற முறையில் நடத்த மட்டுமே பெரும்பாடு பட்டார், திருமணத்தின் போது இருவருக்கும் உண்டான உடன்படிக்கை (திருமணம்) கர்த்தரால் நடக்கிறது, ஒரு சடங்காச்சாரம் அல்ல என்பதை இருவருக்கும் அறிவுறித்தினார்.
இது போல ஊழியர்களும் எல்லா இடத்திலும் இருக்கவே செய்கிறார்கள்.
நீங்கள் அப்படிப்பட்ட சபைகளுக்கு மாறுங்கள், தவறான சபைகளில் இருந்து வெளியேறுவது தவறே அல்ல.
,_________________
தீர்வு 4. உங்கள் நம்பிக்கையை கர்த்தர் மேல் வையுங்கள்
எரிகோவுக்கு முன் நின்ற போதும், சிவந்த சமுத்திரத்துக்கு முன் நின்ற போதும் தேவஜனம் கர்த்தர் என்ன செய்வார் என எதிர்ப்பார்த்தார்கள்.
சொந்தமாக ஒன்றையும் செய்யவில்லை. அது போல உங்கள் சொந்த புத்தியினால் எதையும் முடிவெடுக்காமல், சொந்த பெலத்தை பயன்படுத்தாமல்…..தேவன் தன் பெலத்தை கொண்டு செய்யும்படி அவருக்கு அடங்கி இருங்கள்.
வாலிபத்தின் இச்சைகளால் மோசம் போகிறவர்களாக இல்லாமல், முழங்காலில் தேவனுக்கு காத்திருக்கிறவர்களாக இருங்கள்.
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
என வேதம் சொல்லுகிறது (நீதி 14:12)
கிறிஸ்துவுக்குள் எனக்கு தெரிந்த நிறைய சகோதரிகள் இந்து மாப்பிளையை கிறிஸ்துவுக்குள் கொண்டு வருவேன் என சவால் விட்டார்கள். இன்று கோயிலில் பூஜை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கர்த்தருக்கு ஊழியம் செய்த பெண்கள் / ஆண்களும் விதிவிலக்கல்ல
எனவே கர்த்தருக்கு காத்திருங்கள், அப்போது நீங்கள் வெட்கப்பட்டு போக மாட்டீர்கள்.
காலம் முழுக்க ஏன் நான் மாட்டிக்கொண்டேன் என அழுவதை விட, இன்று தேவனுக்குள் முன்பாக சரீரத்திலும், இருதயத்திலும் சுத்தமாய் காத்துக்கொள்ள அழுவது எவ்வளவோ மேல் !
மற்றவர்கள் காமவிகார இச்சையால் உலகத்தோடு சந்தோஷப்படுகிறார்கள். நாம் தேவனுக்குள் சந்தோஷப்படுவோம்.
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் 37:4,5