கத்திப் பேசுதல்

வாழ்க்கைக்கு அவசியமான பல விடயங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது செல்போன் என்ற கைபேசி. இன்று நாம் இதனை நல்ல நண்பனாக பயன்படுத்துகிறோமா? அல்லது அழைப்பு சத்தம் கேட்டவுடனே, எரிச்சலடைந்து, “ஆன்” செய்த உடனேயே உரத்து கத்துகிறோமா?

இப்போதெல்லாம் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும்கூட செல்போனில் கத்தி பேச பழகிவிட்டார்கள். ‘மறுமுனையில் இருப்பவர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல்” எவ்வித குற்றவுணர்வுமின்றி, கத்திப்பேசுவது தவறென்று அவர்கள் உணருவதில்லை. கன்னாபின்னாவென தேவையற்ற நேரத்தில் பேசுவது, வைக்கவிடாமல் தொடர்ந்து பேசுவது, சாலை விதிகளைக்கூட மதிக்காமல் பேசிக்கொண்டே கடப்பது, வாகனம் ஓட்டும்போதும் பேசுவது, வாய்க்கு வந்தப்படி பேசுவது, உரத்து கத்துவது இதெல்லாம் இன்றைய ‘செல்போன்’ உலகில் வெளிப்படையாகவே பலரிடம் காண முடிகின்றது.

கத்திப் பேசுதல்

சமீபத்தில் திருமணமான ஒரு பெண் தன் கணவனோடு சண்டைபோட்டு, பெட்டியோடு தனது அம்மா வீட்டுக்குப் புறப்பட்டாள். பாதி வழியில் செல்போன் கிணுகிணுத்தது. அவளைச் சமாதானப்படுத்த அழைத்த கணவர், திரும்பவரும்படி அழைத்தார். அவளோ, நடுத்தெருவில் நின்றுகொண்டு கணவன் மீது சத்தமாக தொடர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே உரத்து கத்தி பேசினாள். ‘உன்னோடு வாழ முடியாது’ என்ற அவளது உரத்த குரலாது, கணவனுக்கு மிகுந்த அவமானமாகத் தோன்றியது. ஆத்திரமடைந்த அவனோ ‘சரி, இனி திரும்பி வராதே. நான் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறேன். விரைவில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறேன்” என கூறி செல்போனை வைத்துவிட்டான்.

குடும்ப உறவுகளை கட்டியெழுப்ப வேண்டிய  நாம், உறவுகளை இணைக்க வேண்டிய சாதனமான செல்போனின் தவறான உபயோகத்தால், அவளது குடும்பமே பிரிந்துபோனது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது, அதை பொது இடங்களில், மற்றவர்களுக்கு முன்பாக கொட்டி விடுகிறார்கள். எதிர்முனையில் இருப்பவர் மட்டுமே நினைவில் தெரிகிறார். சுற்றியிருக்கும் சூழல் மறந்து போகின்றது.

உரத்து கத்தும் குணாதிசயம் கொண்டவர்கள் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை உணராமலே பேசி விடுகிறார்கள். செல்போன் ஒரு தகவல்தொடர்பு சாதனம். அதனை வைத்துக்கொண்டு சுற்றியிருக்கும் உலகத்தையே மறந்து கூச்சல் போடுவதை எப்படியும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் செல்போனில் பேசுவதை பதிவாகிவிடவும் செய்கிறார்கள். பிறகு அதை வைத்துக்கொண்டு மிரட்டவும் செய்கிறார்கள். இவர்களைக் குறித்து எச்சரிப்புடன் இருப்பது நல்லது.

சில நேரங்களில் தவறான அழைப்பு வந்து நம்மை தொல்லைப்படுத்தக்கூடும். அந்நேரத்தில், பொறுமையாக அதை நிராகரிக்கப் பழகுங்கள். நாம் தவறாக யாருக்காவது போன் செய்தால், மன்னிப்பு கோருங்கள். கைப்பேசியை நமது துணையாக வைத்திருக்க பழகுங்கள். அதை வினையாக மாற்றிவிடாதிருங்கள். செல்போனில் கத்தும் நபராக நீர் இருந்தால் இன்றே சுய பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கு அருகில் இருப்பவர்களை முகம்சுழிக்க வைத்துவிடாதிருங்கள்.

பேசுவது ஒரு கலை. அதை சிறப்பாக செய்யுங்கள். உங்களுடைய கணவன், மனைவி, மாமியார், மாமனார், பிள்ளைகள் அனைவரிடமும் பாசமாக பேச பழகுங்கள். கனிவுடன் பேசுவதால் உறவுகள் அறுபடாது. பெயரும் கெட்டுப்போகாது.

கத்திப் பேசுதல்

டென்ஷன் தலைக்கேறியவுடன் உரத்து கத்திபேசி தமது தொழிலை இழந்தவர்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். வீட்டிலே அன்பாக பேசி, உறவுகளோடு மென்மையாக அன்பைப் பகிர்ந்து கொள்ளும்போது தொழில் செய்கின்ற இடத்திலும்கூட உங்களால் இதமாக நடந்துகொள்ள முடியும். அன்பை விதைக்க முடியும். ஆகவே, செல்போன் பாதிப்பு உங்களை தாக்காதபடி, பேசும்போது மெதுவாக பேசுங்கள். அன்பை காட்டுங்கள்.

நீங்கள் செல்போனில் கத்தும்நபர் யாரையாகிலும் சந்திப்பீர்களாயின், ஓரிரு நிமிடம், உங்கள் பொறுமை உங்களை ஆட்கொள்ள இடமளியுங்கள். மனதிற்குள் அமைதிகாத்து நில்லுங்கள். அவர்களும் தமது தவறை திருத்திக்கொள்ள சந்தர்ப்பமளியுங்கள். இது உங்களுடைய வாழ்க்கை. இது உங்களுடைய பேச்சு. இது உங்களுடைய வார்த்தை. அது கருணை நிறைந்ததாகவே இருக்கட்டும்.

இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *