மனிதன் படைக்கப்பட முன்பாகவே தீமை வெளிப்பட்டு விட்டது. பாவமானது சாத்தான் என அழைக்கப்படும் லூசிபாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. லூசிபர் என்பவன் உண்மையில் தேவனால் நேர்த்தியாகப் படைக்கப்பட்ட ஒரு விஷேசித்த தேவ தூதன் என வேதாகமம் கூறுகின்றது. தேவனுக்கு முன்பாக கலகத்தை ஏற்படுத்தியதினால் லூசிபர் பாவம் செய்தான். கடவுளுக்கு எதிராக கலகம் செய்தான். இந்த பாவத்தின் விளைவாக, லூசிபர் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டான்.
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. (ஏசாயா 14:12-14)
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேரூபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். (எசேக்கியேல் 28:14-16).
இந்தப் பூமியிலே, லூசிபர் (சாத்தானாக மாறியவன்) தேவனுக்கெதிராக கலகம் செய்வதைத் தொடருகின்றான்.
ஆதாம், ஏவாள் என்ற முதலாவது மனிதர்களை தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களையும் சாத்தான் தேவனுக்கு எதிராக பாவத்தில் வழிநடத்தினான். இந்த கலகமானது ‘வீழ்ந்துபோன மனிதன்’ எனவும் அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தமானது, நீதியிலிருந்து பாவத்திற்குள் மனிதன் விழுந்துவிட்டான் என்பதாகும். இறைவனின் சுவாசம் மனிதனில் இருந்தபோதிலும் சாத்தான் மனிதரை வஞ்சித்தான். இவற்றை நீங்கள் ஆதியாகமம் இரண்டாம் மூன்றாம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அதாவது மனிதர்கள் பாவம் செய்தார்கள்.
பாவத்திற்கான தண்டனை சரீரத்திலும் ஆவிக்குரிய ரீதியிலும் மரணமாக இருக்கும் என தேவன் ஆதாமையும் ஏவாளையும் எச்சரித்திருந்தார். ஆவிக்குரிய மரணமானது தேவனுடனான உறவு துண்டிக்கப்பட்டு அவரை இழந்து விடுவதாகும். சரீர மரணமானது உண்மையிலேயே நமது சொந்த உடலில் அதாவது சரீரத்தில் ஏற்படுகின்ற மரணமாக இருக்கின்றது.
ஏனெனில் ஆதாம் மற்றும் ஏவாளுடைய பாவத்தின் காரணமாக மரணம் அனைத்து மனிதர்களுக்கும் வந்தது. பாவத்தின் சம்பளம் மரணமாயிற்று. இறைவனின் ஜீவ சுவாசத்தை உடைய மனிதன் கறைபடிந்தவனானான்.
இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. (ரோமா; 5:12) முதல் மனிதனின் பாவத்தினால் முழு மனித குலமும் பாவ தன்மை உடையதாயிற்று.
முதலாவது மனிதர்களின் வீழ்ச்சியின் காரணமாக, பாவமானது அனைத்து மனிதர்களுக்குள்ளும் கடத்தப்பட்டது. இதன் அர்த்தமானது, பிறக்கின்ற ஒவ்வொருவரும் இயற்கையாகவே பாவ சுபாவத்தை பெற்றுக்கொள்கின்றார்கள். இறைவன் தந்த ஜீவ சுவாசத்தைப் பற்றிய அறிவை இழந்துவிடுகின்றனர்.
சரீர தோற்றம் கடந்தப்படுவதுபோலவே, ஆவிக்குரிய அடிப்படை தோற்றமாகிய பாவத்தின் சுபாவத்தையும் அவர்கள் சுதந்தரித்துக் கொள்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனும் பாவிகள். அவர்கள் ஆவிக்குரிய ரீதியிலும் சரீர ரீதியிலும் மரண தண்டனைக்குரியவர்கள்.
உலகத்திலுள்ள அனைத்து பாவங்களுக்கும் சாத்தானே உத்தரவாதி. தேவனுக்கெதிரான அவனுடைய கலகமானது இன்னமும் தொடருகின்றது. அவன் மனிதனை பாவத்தில் விழ சோதிக்கின்றான். மனிதனுடைய இருதயத்திலும் சிந்தையிலும் ஆத்துமாவிலும் இன்னமும் ஆவிக்குரிய உலகத்தின் யுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே பாவ சுபாவத்தை சுதந்தரித்துள்ளான். இந்த இயற்கையான பாவ சுபாவத்தின் காரணமாக ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட ரீதியாக பாவம் செய்கின்றனர். தேவனுக்கு எதிராக கலகம் செய்கின்றனர். இறைவனை விட்டு துாரமாக்கப்பட்டுள்ளனர்.
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். (யாக்கோபு 1:14-15)
அனைவரும் பாவிகள், இந்த பாவத்தின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியை ஏற்படுத்தினார். செத்த பாவ கிரியைகளிலிருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் பாவத்தின் தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
இயேசு மாத்திரமே சாத்தானின் தீமையிலிருந்தும் பாவத்தினால் வரும் மரணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றி நித்திய வாழ்வை தருபவர். அவரை கிட்டிச் சேருவோர் நரகத்திற்கு தப்பித்துக் கொள்வார்கள்.
இன்றே இயேசுவை நம்பி – அவர் மனுகுலத்தின் மீட்புக்காக செய்த பலியை ஏற்றுக்கொள்வோம். அவரால் காப்பாற்றப்படுவோமாக.
தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் காப்பாற்றி இரட்சித்து வாழ்வளிப்பாராக. –
christawan.com