மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மாற்கு 8:36.
இன்று அநேகமான மக்கள் கிறிஸ்தவத்தைக் குறித்தும், தேவ இராட்சியத்தையும் அதன் நீதியையும் குறித்தும் விளங்கிக்கொள்ள மனதற்று வாழ்வதனால், தேவனின் மானிடப் படைப்பின் நோக்கத்தை அறியமுடியாமலும், அதன் முக்கியத்துவத்தை உதாசீனம் செய்வதும் மிகவும் வேதனைக்குரியது. அதன் விளைவு வெட்கமும் நித்திய அழிவுமே ஆகும். இந்த அழிவில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும்படியாக, தேவன் தனது கிருபையான வார்த்தையின்மூலம் உங்கள் இருதயத்தில் பேசவிரும்புகிறார். இந்த உண்மையை விளங்கிக்கொள்ள பின்வரும் வேதப்பகுதியை தியானத்துடன் வாசிப்போம்.
பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து, ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்த மாகவும் தன்ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு இலாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள (தேவனைவிட்டு மனம்விரும்பும் வாழ்க்கை வாழும்) இந்தச் சந்ததியில் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த துாதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார். மாற்கு 8:34-38.
கிறிஸ்தவ வாழ்க்கையானது இயேசு கிறிஸ்த்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலை பெற்று வாழும் வாழ்கை ஆகும். எனினும் கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன? இதற்கான விடையை பலர் அறிய முற்படுவதில்லை. காரணம் எதற்கும் ஏன் என்று கேட்கும் ஓர் பழக்கம் எம்மத்தியில் இல்லாததினாலேயே. அதன் விளைவு தேவன் அற்ற வாழ்வு.
தேவன் அற்ற வாழ்வு என்றால், நித்திய ஜீவனையும், தேவனால் வரும் நன்மைகளையும், பாதுகாப்பையும் இழந்து வாழும் ஓர் வாழ்க்கையாகும். எமது தெரிவுதான் எமது வாழ்க்கையின் நோக்கத்தைத் தீர்மானிக்கிறது.
அண்மைக் காலங்களில் ஆபிரிக்காவின் பல நாடுகளில், ஈரான், ஈராக், சிரியா உட்பட பலமத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மதக்கலவரங்கள் நடைபெறுவதை நாம் காணக் கூடியதாக உள்ளது. இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று வாழும்போது ஏழை மக்களின் வாழ்கை வளமுள்ளதாகவும், சுபீட்சமுள்ளதாகவும் மாற்றம் அடைகிறது. இதனை பொறுக்க முடியாதவர்கள் மதக்கலவரத்தை தூண்டி அந்த ஏழை மக்களின் அடிப்படை வசதிகளை அழிக்கிறார்கள். இந்த உண்மையை நாம் தினசரி ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
அதாவது பாருங்கள்… மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்குடனான உன்னதசெயல், இருதயகடினம் என்னும் சுயபுத்தியினால் எவ்வளவு அழிவைக் கொண்டுவருகிறது. தேவனை அறிந்து வேதத்தை நேசித்து தேவனை ஆராதிக்கும் இந்த ஏழையின் தெரிவு அவனுக்கு மட்டுமல்ல, அவனின் குடும்பத்திற்கு மாத்திரமல்ல, அவனைச் சார்ந்த பலருக்கு ஆசீர்வாதமாக மாறியது. போராட்டத்தினால் வரும் விடுதலையைவிட தேவனால் வரும் விடுதலை, அமைதியான ஆசீர்வாதமான வாழ்வைத் தரும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த உண்மையை நாம் உபாகமம்30:15-20 வரையில் காணலாம். இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். நீ பிழைத்துப் பெருகும் படிக்கும், நீ சுதந்தரிக்கப் போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்பு கூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்ட ளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து (சுயபுத்தியை சார்ந்து), அவர்களைச் சேவிப்பாயானால், நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்து போவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் புமியையும் இன்று சாட்சி வைக்கிறேன், ஆகையால், நீயும் உன்சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக, அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
தேவனுக்கு பிரியமான நேயர்களே, இன்று நாம் இவ்வுலக வாழ்க்கையை மகிழ்ச்சியாக, உல்லாசமாக வாழ பலஅநீதியான வழிகள் நமக்கு முன் உள்ளது. அவற்றைக் கொண்டு நாம் பணத்தை, புகழை, பெயரையும் சம்பாதிக்கலாம்;. ஆனால் இந்த உலகத்தைப் படைத்த, அதனை ஆண்டுகொள்ளும் தேவனால் தேற்றப்படும் வாழ்வோ, பாதுகாக்கப்படும் வாழ்வோ நமக்கு கிடையாது. ஏமாற்றுத் தன்மை கொண்ட மாய்மாலமான எமது வாழ்க்கையால் எம்மைச் சூழவு ள்ள மக்களை ஏமாற்றி வாழ்ந்து விடலாம். ஆனால் தம்மை ஆராதித்து, தமது வழியில் நடந்து, ஆறுதலை, நன்மையை அடைந்து கொள்ளும்படி நம்மை உருவாக்கிய தேவனை ஏமாற்றிவிட முடியாது. அப்படி ஏமாற்றி வாழ்வோமாகில் அது நமது ஜீவனுக்கு நஷ்டத்தை, அழிவை, வேதனையை ஏற்படுத்தும்.
இன்று தேவன் எம்மிடம் கேட்கும் கேள்விக்கு நமது பதில் என்ன? இந்த உலகம் முழுவதையும் எமது திறமையால் அல்லது, எமது முயற்சியால் நாம் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தேவன் எமக்குத்தந்த இந்த ஜீவனை நஷ்டப்படுத்தினால் நமக்கு வரும் இலாபம் என்ன? என்று. எமது வாழ்வின் ஓட்டத்தின் நோக்கம், உலகமும், அதன் அழிவினால் வரும் வெட்கமுமா? அல்லது, தேவனைத் தேடுவதனால் வரும் நித்திய ஜீவனும், தேவபாதுகாப்புமா? எதற்கு எமது முக்கியத்துவம்? இந்த சொற்பவேளையில் உனது நோக்கத்தை அறிக்கையிடு. அந்த நோக்கம் தேவனைப்பற்றியதாக இருக்கட்டும். அந்த நோக்கத்தை இந்த ஜெபத்துடன் தேவனிடம் அறிக்கைபண்ணு.
சிறிய ஜெபம்- அன்பின் இயேசு சுவாமி, இன்று நீர் எனக்கு உலகத்தின் தெரிவிற்கும் தேவனின் தெரிவிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தியதற்காக உமக்கு நன்றி அப்பா. நான் இதுவரை உலகத்தையும் அதன் இச்சைகளையும் நேசித்து வாழ்ந்ததன் பலனையும் வெட்கத்தையும் நீர் உணர்த்தியதற்காக உமக்கு நன்றி அப்பா. இன்றிலிருந்து தேவனையும் தேவ இராட்சியத்தையும் நேசித்து வாழ எனக்கு உதவிசெய்யும். என்னையும் எனது குடும்பத்தையும் உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். காத்துவழி நடத்தும் பிதாவே, ஆமென்.
நன்றி: சகோதரன் பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை – டென்மார்க். (ரெகொபோத் ஊழியங்கள்) – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.