நாடுகளை இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம், இந்து என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவுதியும் கஞ்சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முஸ்லீம் நாடுகள்; வல்லரசான ஜப்பானும் வறுமையால் விபச்சார விடுதியாகிப்போன தாய்லாந்தும் பௌத்த நாடுகள்; உலக மேலாதிக்கவாதி அமெரிக்காவும் அதனால் நசுக்கப்படும் நிகராகுவாவும் கிறித்தவ நாடுகள் என்று வகை பிரிக்க முடியுமா ?
இவ்வாறு பிரிப்பது அமெரிக்காவைப் போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்குத்தான் பெரிதும் பயன்படும் என்பதை சொல்லத் தேவையில்லை. பணக்காரன் ஏழையைப் பார்த்து நீயும் நானும் ஒரு சாதி என்பதும், முதலாளி தொழிலாளியிடம் நீயும் நானும் ஒரு மதம் என்று சொல்வதும் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதற்கல்ல, பாதுகாத்துக் கொள்வதற்குத்தான், “நீயும் நானும் முஸ்லீம் நாடு” என்று பேசுவதும் இந்த ரகம் தான். நீயும் நானும் கிறிஸ்தவ நாடு என்று பேசுவதும் இந்த ரகம்தான். நீயும் நானும் பௌத்த நாட என்று பேசுவதும் இந்த ரகம் தான்.
ஆக மொத்தத்தில், நாடுகளை மத அடிப்படையில் பிரிப்பது தவறானது என்பதே கல்விமான்களின் கருத்தாக இருக்க முடியும்.