பல நாடுகளில், ஆங்காங்கே கிறிஸ்தவ திருச்சபைகள் பல தாக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில், இலங்கையிலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுதாக்குதல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு அன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல், இராணுவ, வெளிநாட்டு தூதரக செயற்பாடுகள் மற்றும் இஸ்லாமிய தற்கொலை தீவிரவாத கடும்போக்கைக் குறித்து எழுதாமல் தவிர்த்து வந்த நான், இலங்கை கிறிஸ்தவ தலைவர்கள் மத்தியில் காணப்படுகின்ற கிறிஸ்தவ சமய தலைவர்களுக்கிடையிலான வகிபாகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டேன்.

உண்மையில், தமிழ் சிங்களம் ஆங்கிலம் என மும்மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கிறிஸ்தவ மத தலைவர்கள் மத்தியில் காணப்படும் பலவித சிந்தனா கொள்கை வேறுபாடுகளை கண்டு நான் சற்று ஆச்சரியப்படுவதுண்டு. இதுவரை றோமன் கத்தோலிக்க திருச்சபைக்குள்ளே பேரினவாத கொள்கையும், சிறுபான்மையின கொள்கையும் மோதிக்கொள்வதை அவதானித்து வந்துள்ளேன்.

தற்போது இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாத தற்கொலை தாக்குதல்களின் விளைவாக அவர்களின் அச்சத்தையும், திருச்சபை ஆராதனை தவிர்க்கப்பட்டதையும், பேராயர் மெல்கத்தை தவிர ஏனைய தலைவர்கள் ஊடகங்களினால் தவிர்க்கப்பட்டதையும், அவர்களும் நாட்டு மக்களிடையே தலைகாட்டாமலும் இருந்ததைக் கண்டு திகைப்புக்குள்ளானேன். உண்மையில், இறைவன் மீதுள்ள பயத்தைவிட, உயிர் மீதுள்ள பயத்தை மக்கள் மீது திணித்த திருச்சபை தலைவர்களின் போக்கையும் அவதானித்தேன்.

மக்கள் இறைவனை வழிபட முடியாதபடி கிறிஸ்தவ வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டன. ஆங்காங்கே பல சிறிய கிறிஸ்தவ தேவாலயங்களில் அச்சமின்றி ஆராதனை முன்னெடுக்கப்பட்டன. அவை பெரும்பாலும் துணிச்சல் மிக்க தமிழர் பகுதிகளிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் ஞாயிறு வழிபாடுகள் தடையின்றி நடைபெற்றனஎனினும், பெரும்பாலான திருச்சபை தலைமைகள் தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக, அல்லது ஆலய கட்டிடங்களை பாதுகாப்பதற்காக, அச்சத்தின் விளைவாக திருச்சபைகளை மூடச் செய்தனர். குறிப்பாக, பேராயர் ரஞ்சித் மெல்கம் றோமன் கத்தோலிக்க திருச்சபைகளையும் பாடசாலைகளையும் காலவரையறையின்றி மூடச் செய்தார்.

திருச்சபையானது தனக்குரிய பாதுகாப்பு வரம்புகளை கொண்டிராத படியினாலும், பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை பேணி வராதபடியினாலும் பல திருச்சபைகள் முன்ஜாக்கிரதையாக வழிபாட்டு தளங்களை மூடச் செய்தன.  

நாட்டினை பாதுகாக்க வேண்டிய இராணுவமும் சட்டங்களும் மக்களும் வேடிக்கை பார்த்த அதேநேரம், ஒரு தனி மனிதனாக, இறை வழிபாட்டு தளங்களை இவ்வாறு மூடியதைக் குறித்து இருவேறு கருத்துக்கள் கிறிஸ்தவர்களிடையே உண்டு. குறிப்பாக சிங்கள பேரினவாத கிறிஸ்தவர்கள் அவர் செய்ததை சரியெனவும், தமிழ் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அவர் செய்த செயல் பிழையெனவும் கூற தலைப்பட்டனர். ஒருசில மாற்று கருத்துக்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, இன்னும் எத்தனை நாட்களுக்கு கிறிஸ்தவ பாடசாலைகளும், கிறிஸ்தவ வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டிருக்கும் என்பதைக் குறித்து அரசாங்கமோ, இராணுவமோ தமது வாயை திறக்கவில்லை. இது இலங்கை கிறிஸ்தவ சமுதாயத்தினரிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தி விட்டதோ? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தீவிரவாத சம்பவம் நடைபெற்றபோது, இலங்கை பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால், “சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் என்ற செய்தியானது பொறுப்பு வாய்ந்த உரையாக இலங்கை வாழ் சமய தலைவர்கள் பலராலும் அரசியல்வாதிகள் பலராலும் மதிக்கப்பட்டது. அது இலங்கையிலுள்ள அனைத்து இனத்தவரையும் பேராபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது என்பதை அனைவரும் அறிந்துள்ளார்கள்.

ஒருவேளை அவ்வாறான செய்தி கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், பெரும் இனக்கலவரம் நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடும். இதனை அனைத்து சமயத்தவர்களும் வாயாரப் புகழாத சந்தர்ப்பமில்லை. அவருக்கு நோபல் பரிசுகூட வழங்கப்பட வேண்டுமென இலங்கை அரச அமைச்சர்களான அமிர்அலி, வி. இராதா கிருஷ்ணன் போன்றோர் முன்மொழிந்துள்ளனர். வேறு மத தலங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் விளைவு ஒருவேளை பேரழிவாக இருந்திருக்கும் என்பது பல ஆய்வாளர்களின் ஊகமாயுள்ளது

குண்டுதாக்குதல் நிகழ்ந்த அந்த நேரத்தில், நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ சமுதாயத்தினரான கிறிஸ்தவர்கள் பேராயர் மெல்கமின் கருத்திற்கு செவிகொடுத்தனர். உண்மையில் என்ன செய்வதென அவர்களுக்கு சிந்திக்க முடியவில்லை. அதற்கான நேரமும் இருக்கவில்லை. இது எதிர்பாராத அனர்த்தமாக இருந்தது அதுமட்டுமல்ல, புரட்டஸ்தலாந்து திருச்சபை தலைவர்களும்கூட, அவரது கட்டளைக்கு இணங்க, அடுத்துவந்த இரண்டு மூன்று வாரங்களாக ஞாயிறு வழிபாட்டு ஆராதனைகளை, பொது கூட்டங்களை தவிர்க்கவே செய்தார்கள். கொழும்பில் பிரபல ஜீசஸ் லிவ், கல்வாரி போன்ற புரட்டஸ்தலாந்து தேவாலயங்கள் மூடப்பட்டிருந்தன.

தற்போதைய நிலையின்படி, பேராயர் மெல்கம் அவர்கள் மத தலைவர் என்ற தனக்குரிய ஆசனத்தை விட்டு விலக விருப்பமற்றவராகவே உள்ளார். எனினும், நாட்டிலுள்ள பௌத்த மத துறவிகளின் மதவாத அரசியல் கருத்துக்களை நன்கு அறிந்தவராக இருப்பதினாலும், இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்புக்களை, மௌலவிகளை, அரசியல்வாதிகளை அறிந்திருப்பதினாலும், தமது உரைகளுக்கூடாக ஒரு சமநிலை பேணும் கிறிஸ்தவ மத தலைவருக்குரிய நிலையிலிருந்து சற்றே விலகி, அரசியல் பேசுபவராக, நாட்டிலுள்ள பிரதமரைவிட, அதி மேதாவி தனத்தை காட்டுபவராக பேசுபொருளாக மாறிவிட்டார் என்பதே நிதர்சனம்.

காரணம், இவர் சார்ந்த பேரினவாத கோட்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடுகின்றது. றோமன் கத்தோலிக்க பாடசாலைகளில் இவரது முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும், அதேநேரம், இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொடிய அழுக்கான பக்கத்தையும், இஸ்லாத்தின் தர்மத்தையும், சமுதாயத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளையும் பயமின்றி எடுத்துரைப்பவராக இருந்தாலும், பேரினவாதிகளின் செல்லப்பிள்ளையாக இருந்து இனக்கலவரத்தை தவிர்ப்பதில் அவரது வகிபாகம் பேரினவாதிகளினாலேயே மெச்சப்படுகின்றது.

சிங்கள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரது சிந்தனை இவ்வாறு இருக்க, சிறுபான்மை தமிழ் றோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர்களின் சிந்தனையோ சற்றே வித்தியாசமானதாகவே உள்ளது. பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் கூறுகின்ற சகிப்பு தன்மையும், சமூக நல்லிணக்கமும் உண்மையில் சிறுபான்மை கிறிஸ்தவ தலைவர்களினாலே பல தடவைகள் நிரூபித்து காண்பிக்கப்பட்டுள்ளதுபுலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கம் ஈடுபட்டபோது, இரு தரப்பினரிடமும் தமது சகிப்பு தன்மையை, பொறுமையை, நல்லிணக்கத்தை பல தடவைகள் தமிழ் றோமன் கத்தோலிக்க ஆயர்கள், பேராயர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் சமாதான முயற்சிகளை சற்றேனும் உதறியதில்லை.

யுத்த நேரத்தில், மக்கள்,  தஞ்சம் புகுவதற்காக இன வேறுபாடின்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் அடைக்கலம் புகுந்தமையை வரலாறு மறக்காதுஅந்த நேரத்தில் எந்தவொரு ஆயர்களும், இலங்கை ஒரு பௌத்தநாடு என்றோ, இஸ்லாமிய நாடு என்றோ, சிங்கள தேசம் என்றோ, தமிழரின் தேசம் என்றோ அரசியல் பேசியதில்லை. உயிர்காக்கும் கருவறையாக புனித ஸ்தலங்கள் கருதப்பட்டன. இன்று நிலைமை அவ்வாறு இல்லை 

யுத்தமற்ற நிலையில், கிறிஸ்தவர்கள்கூட, திருச்சபைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. இந்த வன்செயலுக்கு பின்னால், முன்னால் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய இருப்பதாகவும், அமெரிக்க யூத கைகூலிகளின் செயலாக இருக்கக்கூடுமெனவும், ஐஎஸ் தீவிரவாத குழுவின் செயற்பாடாக இருக்கலாம் எனவும் போதைவஸ்து குழுக்களில் தாக்கமாக இருக்கக்கூடுமெனவும் பலவித கருத்துக்கள் இலங்கை மக்களிடையே அவதானிக்க முடிகின்றது. எனினும், இக்கட்டுரையின் நோக்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றி இலங்கை கிறிஸ்தவ தலைவர்கள் மத்தியிலான சிந்தனாவாதங்களை முன்வைப்பதாகும்.

இதைக் குறித்து றோமன் கத்தோலிக்கரல்லாத புரட்டஸ்தலாந்து கிறிஸ்தவ திருச்சபை தலைவர்களின் மத்தியிலே, மூன்றுவிதமான கருத்தோட்டங்கள் உண்டென்பது எனது நிலைப்பாடு. அவற்றை, பேரினவாத சிங்களம் பேசுகின்றவர்களும், சிறுபான்மை தமிழ் பேசுகின்றவர்களும், ஆங்கிலம் பேசுகின்ற பறங்கி இன கிறிஸ்தவர்களிடையே கொள்கை ரீதியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டென்பதை வெளிப்படையாக கூறவேண்டும்.

சிங்கள கிறிஸ்தவ றோமன் கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் மத்தியில், பெரும்பாலும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆதிக்கம் செலுத்துகிற நபராக இருக்கின்ற படியினால், அவர் அதே திருச்சபையிலுள்ள சிறுபான்மை கிறிஸ்தவ தமிழரின் தலைமைத்துவத்தை உருவாக்க இடமளிக்க மாட்டார். அவர்களை அவர் சற்றேனும் மதிப்பவருமல்ல. ஒருவிதத்தில், இந்துத்துவவாதி என கருதப்படும் முன்னால் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எப்படி கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் எதிராக வடக்கில் தமது பதவியை பயன்படுத்தினாரோ, அவ்வாறே, தமிழ் கிறிஸ்தவர்களுக்கு இரக்கம் காட்டாதவராகவே பேராயர் மெல்கம் ரஞ்சித் செயற்பட்டு வருகின்றார் என்கின்றனர் இலங்கை தமிழர்கள்.  அவ்வாறே கடும்போக்குடைய இஸ்லாமிய அரசியல்வாதிகளும் எவ்வித அச்சமுமின்றி தமிழரின் இருப்பை கேள்விக்குரியாக்கி வருகின்றார்கள். இவர்கள் இருவருமே தம் தமது கொள்கையிலே நாட்டை நாசம் செய்யவோ, கட்டியெழுப்பவோ பின்நிற்பதில்லை என்பது நாடறிந்த உண்மை.

ஆங்கிலம் பேசுகின்ற கிறிஸ்தவ தலைவர்கள் இலங்கை சம்பவத்தை இன்னமும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்செயலாக, உபத்திரவமாக, துன்புறுத்தலாக, அச்சுறுத்தலாகவே நாட்டின் நிலைமையை கண்ணோக்குகின்றார்கள்அவர்களைப் பொருத்தவரை, கிறிஸ்தவத்திற்கு எதிராக வன்முறை நடைபெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக அவதானிக்கப்படுகின்றது. அவர்கள் கடந்தகாலங்களில்  இலங்கை கிறிஸ்தவ சபைகளுக்கு எதிராக, அப்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த உள்ளுர் பிரபல அரசியல்வாதிகள் எவ்வாறு செயல்பட்டார்கள், எத்தனை கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டன என்பதற்கான சான்றுகளை ஆதாரங்களுடன் பட்டியலிடுகின்றார்கள்.

தமிழ் பேசுன்ற இலங்கை கிறிஸ்தவர்கள் மத்தியில், இந்த தீவிரவாதிகளின் தாக்குதல்கள் பெருமளவிலான மன பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை. ஒருவேளை கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது என்பதால் அப்படியிருக்கலாம். உண்மையில், ஏற்கனவே நாட்டில் தலைவிரித்தாடிய யுத்தம் சார்ந்த பாதிப்புக்களின் காரணமாக உயிரிழப்பை துச்சமென கருதுகின்ற மனப்பான்மையை பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்கள் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மூன்று தேவாலயங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அதில் அநேகர் தமிழ் மக்களே எனபதையும் அவர்கள் ஆணித்தரமாக நம்புகின்ற போதிலும், எவ்வித கருத்துக்களையும் சமுதாயத்தில் முன்வைக்க விரும்புவதில்லை. எனினும், ஏன் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள திருச்சபைகள் தாக்கப்படவில்லை? ஏன் சிங்கள மொழியிலான வழிபாட்டில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற கேள்விகள் இவர்களிடம் உண்டு.

வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் தமிழ் கிறிஸ்தவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களுக்கு எதிராக, ஒரு காலத்தில் சிங்கள அரச அடக்குமுறையும், இஸ்லாமியரின் காட்டிக்கொடுத்தலும், இந்திய ராணுவ எல்லை மீறல்களும், இந்துத்துவ எதிர்ப்புணர்வும் கொடுத்த பாதிப்பை அனுபவித்து பழகிவிட்டார்கள் போலும். முன்னால் போராளிகளான கருணா, பிள்ளையான் போன்றவர்களினாலும் மட்டக்களப்பு திருகோணமலை பகுதியிலுள்ள பல கிறிஸ்தவ தமிழர்கள் ஒடுக்கப்பட்ட அனுபவங்களும் ஆதாரங்களும் அவர்களிடமுண்டு. இந்த தாக்குதல்கள் தமிழ் இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒன்றாக இன்று தமிழ் பேசுகின்ற பலர் சந்தேகிக்கின்ற போதிலும் ஊடகங்களில் இவர்களைக் குறித்து எந்த அரசியல்வாதிகளும் பெரியளவில் கருத்துக்களை எடுத்துரைப்பதில்லை. இவர்கள் தான் உண்மையில் எல்லா பக்கத்தாலும் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள்.

அதேநேரத்தில், சிங்களம் பேசுகின்ற கிறிஸ்தவர்களிடையே, தாம் சிங்களவர் என்ற அதிமேதாவி மனப்பான்மை சகஜமாக காண முடிகின்றது. அதன் உச்சக்கட்டமாக, இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்செயல், துன்புறுத்தல், தாக்குதல், உபத்திரவம் அல்ல என்ற சிந்தனைவாதம் காணப்படுகின்றது.

தற்போதைய பிரதமர் ரணில் தலைமையிலான இலங்கை அரசு கிறிஸ்தவர்களை நசுக்காத காரணத்தினால், நடைபெற்ற தாக்குதலானது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் எதிராக நடைபெற்ற ஒன்றல்ல என்ற கருத்தோட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். உண்மையில், இது நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றே அவர்களில் பலர் கருதுகின்றார்கள். ஒருவேளை மொட்டு நாளை ஆட்சி அமைத்தால், இவர்களது கருத்து மாறுபட இடமுண்டு.

முக்கியமாக, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் என்பதைவிட, சிங்கள நாட்டிற்கு எதிரான தீவிரவாத செயலாக நோக்குவதின் காரணமாக, இலங்கை நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற எண்ணங்களை சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள் முன்வைப்பதைக் காணக் கூடியதாயுள்ளது.

10 சதவீத முஸ்லீம்கள் இலங்கையில் வாழ்கின்றபோதிலும், கிறிஸ்தவர்களின் சதவீதம் அதைவிட குறைவே. அதிலும் தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களும் சிங்களம்பேசும் கத்தோலிக்கரும் பெரும்பான்மையினராக உள்ள இலங்கை நாட்டில், பேராயர் ரஞ்சித் மெல்கம் போன்றவர்கள் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தும் கருத்துக்களையே பெரும்பாலும் இலைமறை காயாக எடுத்துரைக்கிறார்.

எப்படி வடமாகாணத்தை ஆண்ட முன்னால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேரினவாதிகளை சார்ந்து செயற்படுகின்ற போக்கும், பேரினவாதத்திற்கு எதிரான போக்கும் உடைய விலாங்கு மீன்போல செயல்பட்டு கடும்போக்குடைய இந்துத்துவா கருத்தோட்டத்துடன் செயற்பட்டாரோ அவ்வாறே பேராயர் ரஞ்சித் மெல்கம் சிங்கள இனவாதியாக, தமிழர் விரோத போக்குடன் செயற்பட்டு மதத்தலைவராக தன்னை காண்பித்து வருகின்றார் என்பது இன்று நாடு அறிந்த உண்மை என்கின்றனர் இலங்கை தமிழர்கள்.  

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பேராயர் மெல்கம் ஏற்றுக்கொண்டதாக முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஊடகங்களுக்கு அறியத் தந்துள்ளார். உண்மையில், இலங்கை நாடு அனைத்து மதத்தவருக்கும் இனத்தவருக்கும் உரியது. அதில் பௌத்த சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள் என்ற கருத்தை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். ஒரு அரசியல் பிரபல்ய நபரிடமுள்ள சமத்துவம் கிறிஸ்தவ சிங்கள மத தலைமையிடம் காணமுடியாமை பரிதாபத்திற்குரியது.

மென்மையான விதத்தில் தமிழ் கத்தோலிக்க திருச்சபை மக்களை அமைதிப்படுத்துவதும், தமது நலன் சார்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும், அதேவேளை எதிர்கட்சிகளுக்கு சார்பாக செயற்படும் போக்கையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார் என்பதை அவரது உரைகளை உற்று கவனிக்கின்ற மக்கள் உணர்ந்தே உள்ளார்கள்.

குறிப்பாக, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்ற போதிலும், அதனை சற்றும் பொருட்படுத்தாத, அந்த சபைக்கு உதவிகளை செய்யாத, செய்ய விரும்பாத ஒரு பேரினவாத கடும்போக்குடைய மதத் தலைவராகவே பேராயர் மெல்கம் நடந்துகொண்டார். இது மட்டக்களப்பு தமிழ் பேசும் புரட்டஸ்தலாந்து மக்களின் ஏக ஒருமித்த கருத்தாக உள்ளது. நான் கூறுகின்ற இவ்விடயங்களை சற்று நிதானித்து கிரகித்து அறிவது சாலச் சிறந்தது.

நீர்கொழும்பு தேவாலயங்களை ஒரு வாரத்தில் மீள கையளித்த அரசாங்கமானது, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கான உதவிகளை வேகமாக முன்னெடுக்காது, மூன்று வாரங்களுக்கு பின்னரே கையளித்தது. இதற்கு பின்னால், பேரினவாத சிந்தனையுடைய அரசியல்வாதிகளுடன் பேராயர் உடனிருக்கின்றார் என்ற விடயத்தை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளமை கவலைக்குரியது.

மதங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கொண்டுவரவேண்டிய பொறுப்பு அனைத்து சமய தலைவர்களிடையே காணப்பட வேண்டும். குறிப்பாக பௌத்த மத தேரர்கள்,  பௌத்த மத பீடங்கள் மத்தியில் தேசீய இனங்களுக்கு இடையிலான மத நல்லிணக்க கருத்துக்கள் கொஞ்சமும் இல்லை. அதேவேளை இஸ்லாமிய மத போதகர்கள் தமது முஸ்லீம் நலன்சார்ந்த கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்து மத தலைவர்களோ மத நல்லிணக்கத்திற்கு மாத்திரம் பொறுப்பு கூறுபவர்கள்போல இந்த அனர்த்த வேளையில் பெரும்பாலானோர் அமைதியை பேணுகிறார்கள். இது நல்லதற்கல்ல.

இன்றைய காலக்கட்டத்திலே, கிறிஸ்தவ தலைவர்கள் தமக்கொரு கொள்கை வேறுபாடுகளைக் கொண்ட அறிக்கைகளை விடாமல், அதேநேரம் றோமன் கத்தோலிக்கம் எடுத்துள்ள பேரினவாத சிந்தனைக்குள் அகப்பட்டுவிடாமல், அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். இன்று நாட்டில் முளைத்துள்ள இன மத வாதத்தை தூபம்போடாதபடி, சமயம் சார்ந்த விடயங்களில் நேர்மையோடு தைரியமாக செயற்படுவது அவசியமாகின்றது. அதேநேரம் கிறிஸ்தவ மத தலைவர்கள் உட்பட உள்ளுர் கிறிஸ்தவ மக்கள் கூடுமானவரை நாட்டிற்காக, மக்களுக்காக, இறைவனுக்கு முன்பாக நேர்மையாக இருப்பது ஒருவித மனநிறைவை தருகின்றது. தொடர்ந்தும் சமூக மத தலைவர்களிடையே நல்லிணக்கம் காணப்பட வேண்டுதல் செய்வோமாக.

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *