கிறிஸ்தவர்கள் எப்போதும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும்,” என்று சில கிறிஸ்தவர்கள் தமது அரசியல் கருத்தை திணிக்கிறார்கள். “இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே – ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்? ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு சக்தியாக அமையமுடியும்? ஈழத் தமிழர்களின் நேச சக்திகள் என்று யார் எமக்கு இருக்கின்றார்கள்?” என்ற கேள்வியும் இன்று தமிழரிடையே கேட்கப்பட்டு வருகின்றது. 


இயேசு கிறிஸ்து ஒரு வெள்ளையின ஐரோப்பிய சமூகத்தில் பிறக்கவுமில்லை, ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டிருக்கவுமில்லை. நமது நாடுகளில் கிறிஸ்தவர்கள் என்றால் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுவார்கள் என்றல்லவா கருதுகின்றார்கள்?


தூரத்தில் இஸ்ரேல் தெரிகிறதா? அது தான் எமது இலட்சியம். நாமும் யூதர்களை பின்பற்றி, அமெரிக்கா உதவியுடன் தமிழ் இஸ்ரேல் அமைப்போம். அதற்கு முதல் படி, எம்மை கிறிஸ்தவர்களாக இனங்காட்டுவோம். அப்போது தான் கிறிஸ்தவ நாடுகள் எமது துயர் துடைக்க ஓடோடி வருவார்கள். என சிலர் நம்பி வருகின்றார்கள். அது உண்மையா? 


அப்படியா? கிறிஸ்தவர்களுக்கு இன்னல் ஏற்பட்டால், கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்களா? இவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. அதிக தூரம் போகத் தேவையில்லை. அயல் நாடான இந்தியாவில், நாகலாந்து என்ற தனி நாடு கோரிப் போராடும் நாகா மக்கள் கிறிஸ்தவர்கள் தான். இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற ஆயுதமேந்திப் போராடும் நாகா இயக்கங்கள் யாவும், “சுதந்திர நாகலாந்து ஒரு கிறிஸ்தவ நாடாக அமையும்,” என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர். சில மேலைநாட்டு கிறிஸ்தவ நிறுவனங்கள் இரகசியமாக நாகா போராட்டத்திற்கு உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகின்றது. இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே நாகா பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. இதெல்லாம் மேற்குலகில் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான். இருப்பினும் எந்தவொரு கிறிஸ்தவ நாடாவது, நாகலாந்து விடுதலைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளதா? ஈழத்தமிழர் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என்று கூறுவதைப் போல, நாகா மக்கள் மன்மோகன் சிங் போர்க்குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அண்மையில் (கிறிஸ்தவ)அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மன்மோகன்சிங்கை சந்தித்து, இரு நாடுகளினதும் உறவைப் புதுப்பித்து விட்டு சென்றார். எந்தவொரு கிறிஸ்தவனும் நாகா மக்கள் சார்பில் எதிர்ப்புக் காட்டவில்லை. 


இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்களுக்கு சீனாவை பிடிக்காது. அதே நேரம், அமெரிக்காவை அளவுக்கு அதிகமாகவே பிடிக்கும். “இலங்கை அரசு சீனாவுடன் நெருக்கமாகி வருவதால், அமெரிக்கா தமிழர்களை ஆதரிக்கும். கொஞ்ச நாட்களில் ஈழமும் வாங்கித் தரும்.” என்று பல தமிழ் ஊடகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. கடந்த சில வருடங்களாகத் தான், சிறிலங்கா-சீனா உறவுகள் நெருக்கமடைந்ததாக, இந்த ஊடகங்கள் சொல்வதைக் கேட்கும் ஒரு சாதாரண தமிழன் நினைக்கிறான். 


பர்மா (மியான்மர்) பல தசாப்தங்களாக சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றது. சீனா முதன்மையான வர்த்தகக் கூட்டாளி மட்டுமல்ல, நீண்ட காலமாக பர்மிய இராணுவத்திற்கு ஆயுத விநியோகம் செய்து வருகின்றது. பர்மாவில் இராணுவ சர்வாதிகாரம் நிலவுவதும், அவர்களின் அடக்குமுறை ஆட்சியும் மேற்குலகில் நன்கு தெரிந்த விடயங்கள். இராணுவமும், பெரும்பான்மை பர்மிய மொழி பேசும் மக்களும், அரசு மதமான பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள். 


தாய்லாந்து எல்லையோரம் காரேன் என்ற இன மக்கள் வாழும் பிரதேசம் உண்டு. காரேன் மொழி பேசும் மக்களில் கிறிஸ்தவர்கள் கணிசமான தொகையினர். அவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாக தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்துகின்றனர். காரேன் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக, பர்மிய இராணுவம் கிறிஸ்தவ ஆலயங்களையும் இலக்கு வைத்து தாக்கியது. “காரேன் மொழி பேசும் மக்களின் தனி நாட்டுக் கோரிக்கை மட்டுமல்ல, கிறிஸ்தவ மதமும் பர்மிய பிரிவினையை தூண்டும் தீய சக்திகள்,” என்று பர்மிய அரசு பகிரங்கமாகவே அறிவித்தது. காரேன் மக்களுக்கு ஆதரவாக எந்த கிறிஸ்தவ நாடு குரல் எழுப்பியது? காரேன் நாட்டை பிரித்துக் கொடுத்தால், இலகுவாக சீன எல்லையில் கால் பதிக்கலாம் என்று அமெரிக்காவுக்கு தெரியாதா? போர்க்குற்றம் புரிந்ததாக, பர்மிய ஆட்சியாளர்களுக்கு எதிராக எத்தனை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன? சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் எல்லாம் ஒவ்வொரு வருடமும் இது பற்றி முறைப்பாடு செய்கின்றன. 


இந்தோனேசியாவில் மலுக்கு தீவுக் கூட்டங்களில், மலுக்கு மொழி பேசும் இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பான்மை இந்தோனேசியரிடம் இருந்து வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுபடுகின்றனர். மலுக்கு மக்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவர்கள். ஆரம்பத்தில் மலுக்கு மக்கள் தமக்கென தனிநாடு கோரிப் போராடினார்கள். இந்தோனேசிய அரசு அவர்களின் போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டது. அதன் பிறகு, இந்தோனேசிய அரசு அங்கே வேண்டுமென்றே மதப் பிரச்சினையை தூண்டி விட்டது. வெளிப்பார்வைக்கு மதக்கலவரமாகவே தெரிந்தது. அரச ஆதரவைப் பெற்ற முஸ்லிம் காடையர்கள் கூட்டம் கிறிஸ்தவர்களை படுகொலை செய்தது, அவர்களின் ஆலயங்களை எரித்தது. ( பதிலுக்கு கிறிஸ்தவ காடையர் கூட்டம் முஸ்லிம் மக்களை கொன்று, மசூதிகளை எரித்தது.) இந்த செய்திகள் யாவும் மேற்குலகில் பரபரப்பாக பேசப்பட்டவை தான். நான் அறிந்த வரையில், இதுவரை எந்தவொரு கிறிஸ்தவ நாடும் (முன்னாள் காலனியாதிக்கவாத நெதர்லாந்து உட்பட) மலுக்கு கிறிஸ்தவர்களுக்கு உதவ முன் வரவில்லை. மாறாக, உலகிலேயே அதிகளவு முஸ்லிம்களை கொண்ட இந்தோனேசியாவுக்கு ஆதரவாக உறவுகளைப் பேணி வருகின்றனர். அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்ற சர்வாதிகாரி சுகார்ட்டோ, முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்புகளை வளர்த்த கதையை எழுதப் போனால், இந்தக் கட்டுரை நீண்டு விடும். 


“வேற்று மதத்தவர்களான யூதர்களின் இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு வலையம் போட்டு வைத்திருக்கிறார்கள்.” இஸ்ரேலிய ஆதரவாளர்கள் ஒரு பெரிய உண்மையை கண்டுபிடித்துக் கூறுகிறார்கள். கிறிஸ்தவர்களான நாகா, காரேன், மலுக்கு மக்களைப் பாதுகாக்கும் வலையம் எங்கே? நான் இங்கே குறிப்பிட்ட தகவல்களை எல்லாம் எத்தனை தமிழர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? எத்தனை கிறிஸ்தவ சகோதரர்கள் நாகா, காரேன், மலுக்கு கிறிஸ்தவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்? இஸ்ரேலின் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களில் எத்தனை பேர், நாகலாந்து விடுதலையை ஆதரிக்கிறார்கள்? “யாராலும் வெல்ல முடியாத புத்திசாலி யூதர்கள்” பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்களுக்கு, உலகின் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்கள் கண்ணில் படாதது ஏன்? ஒரு வேளை, “புத்திசாலிகளுக்கு” மட்டும் தான் நாட்டை ஆள உரிமை உண்டு என்று கருதுகிறார்கள் போலும். “யூதர்களுக்கு உரிமையுடைய” இஸ்ரேலைப் பற்றி விலாவாரியாக எழுதும் ஊடகங்கள், ஏன் “கிறிஸ்தவ விடுதலைப் போராட்டங்கள்” குறித்து எழுதுவதில்லை? 


யூதர்கள் 2000 வருடங்களுக்கு முன்னர் நாடிழந்து அகதியாக அலைந்த கதை எல்லாம் விபரமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். பர்மாவில் நாகா அகதிகள், தாய்லாந்தில் காரேன் அகதிகள், நெதர்லாந்தில் மலுக்கு அகதிகள், இவர்களும் நாடிழந்து அகதிகளாக அலைகிறார்கள். இது நிகழ்கால யதார்த்தம். நமது காலத்து “கிறிஸ்தவ அகதிகள்” குறித்து, இஸ்ரேல் விசுவாசிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. 


2000 வருடங்களுக்கு முன்னர் அகதியான யூத மக்களுக்கு ஆதரவாக உரிமைக்குரல் எழுப்புகிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் அகதிகளான மக்களைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரேயொரு வார்த்தை கூட பேசுவதில்லை. இஸ்ரேலிய விசுவாசிகள் ஈழத்தமிழர் சார்பில் பேசும் போது, அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகின்றது. இஸ்ரேல் என்ற தேசம் உருவான காலங்களில் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள். இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்களில் கிறிஸ்தவர்களும் இருந்தனர். 


பிற்காலத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலேம், கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளில் பெருமளவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். இஸ்ரேலிய விமானங்கள் குண்டு போட்ட சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ ஆலயங்களும் சேதமடைந்தன. அப்போதெல்லாம் கிறிஸ்தவ ஒற்றுமை எங்கே போனது? “கிறிஸ்தவ பிணங்களின் மீது ஏறி நின்று கொண்டு, இஸ்ரேலுடன் கை குலுக்குவது,” பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யும் மதத் துரோகம் ஆகாதா? கணிசமான தொகை கிறிஸ்தவர்களைக் கொண்ட பாலஸ்தீன, சிரியா, லெபனான் நாடுகளுக்கு ஆதரவாக அல்லவா, கிறிஸ்தவ பாதுகாப்பு வலையம் போடப்பட்டிருக்க வேண்டும்? வேற்று மதத்தவர்களான யூதர்களுக்கு ஆதரவாக, கிறிஸ்தவ நாடுகள் பாதுகாப்பு வலையம் போட்டன என்றால், நம்பக் கூடியதாகவா இருக்கிறது? 


கிறிஸ்தவ மதத்தவர்களின் புனித ஸ்தலங்கள் இஸ்ரேலில் மட்டுமல்ல, லெபனான், சிரியா, ஜோர்டான், போன்ற அயல்நாடுகளிலும் காணப்படுகின்றன. (வருடந்தோறும் கிறிஸ்தவ யாத்திரீகர்கள் அந்த இடங்களுக்கு சென்று வருகின்றனர்.) இது உலகில் உள்ள அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்த விடயம். ஆனால் “இஸ்ரேலை சுற்றி பாதுகாப்பு வலையம்” போட்ட, “கிறிஸ்தவ” நாடுகளுக்கு மட்டும் இந்த உண்மை தெரியவில்லை. இஸ்ரேல் ஆதரவாளர்களிடம் இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. (அவர்களே இப்போது தான் முதன் முறையாக இதை எல்லாம் கேள்விப்படுகிறார்கள்.) உலகத்தில் எல்லாவற்றையும் இனமாக, மதமாக பிரித்துப் பார்ப்பவர்களுக்கு அதற்கு மேல் சிந்திக்கத் தெரியாது. இவர்கள் “கிறிஸ்தவ நாடுகள்” என்று குறிப்பிடுவன யாவும் மேலைத்தேய ஏகாதிபத்திய நாடுகள். அவை தமது பொருளாதார நலன் குறித்து மட்டுமே சிந்திக்கின்றன. அவர்களுக்கு மதம் ஒரு விஷயமே அல்ல. 


கீழைத்தேய மக்கள் தான் அப்படி நம்பி ஏமாந்து போகின்றார்கள். மேலைத்தேய “கிறிஸ்தவ” நாடுகள், கிறிஸ்தவ செர்பியாவுக்கு எதிராக முஸ்லிம் கொசோவோவை ஆதரிக்கவில்லையா? அதனை எப்படி நாம் புரிந்து கொள்வது? நேட்டோ படைகள் செர்பியா என்ற கிறிஸ்தவ நாட்டின் மீது குண்டு போட்ட போது, உலகக் கிறிஸ்தவர்கள் நேட்டோ நாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டாமா? அப்போதெல்லாம் இந்த “கிறிஸ்தவ-தமிழ்-சியோனிஸ்டுகள்” இஸ்லாமிய கொசோவோவை தானே ஆதரித்தார்கள்? அதனை மறுக்க முடியுமா? கொசோவோ விடுதலையடைந்த போது குதூகலித்தார்கள். அப்போது என்ன நடந்தது? கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன, கிறிஸ்தவ செர்பியர்கள் கொசோவோவில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள். இஸ்ரேலைக் காட்டி கிறிஸ்தவ ஆதரவு திரட்டும் பேர்வழிகளுக்கு அந்தக் கதைகள் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிப்பு செய்கிறார்களா?


அது சரி, “உலகக் கிறிஸ்தவர்களின் மீட்பரான” அமெரிக்கா, கிறிஸ்தவர்களுக்கு செய்த நன்மை என்ன? ஈராக்கில் குறைந்தது பத்து சத வீதமாகிலும் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். சதாம் ஹுசைன் காலத்தில் எட்டு லட்சம் கிறிஸ்தவர்கள் சமாதானமாக, பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். தாரிக் அசிஸ் என்ற கிறிஸ்தவர் வெளிவிவகார அமைச்சராக உயர்பதவி வகித்தார். (கிறிஸ்தவ) அமெரிக்க படையெடுப்புக்கு பின்னர், கிறிஸ்தவ ஈராக்கியரின் வாழ்வு மேம்பட்டிருக்கும் என்று ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே எதிர்பார்த்திருப்பான். (கிறிஸ்தவ) அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருக்கும் போதே, ஆயுதபாணிகள் கிறிஸ்தவர்களை தாக்குவதை தடுக்க முடியவில்லை. 


சதாம் ஆட்சியில் ஒரு கிறிஸ்தவர் கூட கொல்லப்படவில்லை, ஒரு கிறிஸ்தவ ஆலயம் கூட சேதமாக்கப்படவில்லை. “அமெரிக்கா பாதுகாப்புக் கொடுத்த” ஈராக்கில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், தேவாலயங்கள் சேதப் படுத்தப் பட்டன. எல்லாம் வல்ல, உலகில் அதிக சக்தி வாய்ந்த, அமெரிக்க இராணுவம் நினைத்திருந்தால் கிறிஸ்தவ ஈராக்கியருக்கு தனி அரசு வேண்டாம், ஒரு தனி மாநிலமாவது அமைத்துக் கொடுத்திருக்க முடியாதா? அது கூட வேண்டாம். கிறிஸ்தவ அமெரிக்க படையினர், ஈராக்கிய கிறிஸ்தவர்களை பாதுகாத்திருக்க கூடாதா? இன்று அங்கேயுள்ள நிலைமை என்ன? கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஐம்பது வீதமான கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் அகதிகளாக அலைகிறார்கள். ஈழத்தமிழருக்கும் அந்த நிலைமை வர வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்களா? ஈழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் வெளியேற்ற சூழ்ச்சி நடக்கிறதா?

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *