சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்’ – ( சங்கீதம்4:8).
நம்மில் அநேகருககு இரவில் நிம்மதியான தூக்கமில்லை. எப்பேதது விடியும் என்ற நிலையில் ஒரு மணி நேரம் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்ற புலம்பலோடு வாழ்கிறவர்கள் அநேகர். இரவில் படுத்தால் ஒருவித பயம், நடுக்கம், திகில், குழப்பமான மனநிலை இப்படிப்பட்ட குழப்பங்களினால் மனது அமைதி பெறாமல் கண்கள் மூட மறுக்கின்றன. அநேகர் சொல்வது போல படுக்கையை வாங்கலாம், ஆனால் தூக்கத்தை வாங்க முடியுமா?
சிலரது தூக்கமின்மைக்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பலருக்கு பகலின் நிகழ்வுகள் மற்றும் கடந்த கால பாவங்களால் ஏற்படும் அமைதியற்ற மனநிலை இரவின் தூக்கத்தை துரத்துகிறது. இவற்றை போக்கி இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற ஏழு வழிகளை காண்போம்.
1. என் தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு போதுமானவர். என்னுடைய முதிர் வயது வரை அவரே என்னை தாங்குவார் என்ற திடமான நம்பிக்கையோடு இருங்கள். இந்த நம்பிக்கை எப்பொழுது வரும்? வேத வசனத்தை தியானிக்கும்போது மட்டுமே! ஆகவே வேதத்தை ஆர்வமாய் வாசித்து தியானியுங்கள். ‘நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்’ – (சங்கீதம் 3:5)
2. உங்களுடைய சுய பெலனையோ, அறிவையோ, செலவத்தையோ, சொத்துக்களையோ சார்ந்திருக்கும் மனநிலையை விட்டு வெளியே வாருங்கள். ஏனென்றால் அவைகள் நாளையே மாறலாம். திடீரென்று நம் கைவிட்டு செல்லலாம். தேவ கிருபையை மட்டும் சார்ந்திருங்கள. இந்த குறுகிய உலக வாழ்விலே எந்த நிலையிலும் மனரம்மியமாய் வாழ்வேன் என தீர்மானியுங்கள். ‘அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்’ – (சங்கீதம் 4:7-8).
3. மறைக்கப்பட்ட தவறுகள் ரகசிய பாவங்கள், என் குற்றம் அம்பலம் ஆகிவிடுமோ என்ற பயம். தொழிலில் நான் செய்யும் தில்லுமுல்லுகள் வெளியரங்கமாகி விடுமோ என்ற பயம், மனைவிக்கோ கணவருக்கோ செய்யும் துரோகம், இவைகள் நமக்கு நிச்சயமாய் தூக்கத்தை வர விடாது. என்ன செய்வது? தேவனிடம் அறிக்கை செய்து, பாவத்தை விட்டு விடுங்கள். தொழிலில் வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு ஏமாற்றுகளையும் விட்டு விடுங்கள். நியாயமாய் வரும் கொஞ்ச வருமானத்தில் குறைவாய் சாப்பிட்டாலும் நிறைவாய் தூங்குவீர்கள்.
4. சிலர் மீது கொண்டுள்ள மாறாத வைராக்கியத்தையும், அடங்காத எரிச்சல்களையும் போக்குங்கள். எப்படி? தேவன் உங்களது கணக்கற்ற பாவங்களை மன்னித்திருக்கிறார் என்ற நிச்சயம் இருக்கும்போது உங்களை நீதிமானாக எண்ணுவீர்களானால் பிறர் உங்கள் கண்களில் கொடும் பாவிகளாகவே தெரிவார்கள். நான் பாவி என உணருங்கள். அப்போது உங்களுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க முடியும்.
5. மனிதர்களின் அன்பையும் ஐக்கியத்தையும் மட்டுமே நாடி, அவைகள் கிடைக்காத பட்சத்தில் ஏமாற்றப்படும் சூழ்நிலையில் ஏற்படும் விரக்தியினால் தூங்க முடியாமல் இருக்கலாம். இதிலிருந்து வெளிவந்து தேவனுடைய அன்பையும் ஐக்கியத்தையும் அனுதினம் அனுபவியுங்கள். அப்போது மனிதருடைய அன்பிலே ஏற்ற தாழ்வுகளும் ஏமாற்றங்களும் ஏற்படும்போது அவை நம்மை அதிகமாய் பாதிக்காது. ஜெபித்து உங்கள் இருதயத்தின் சமாதானத்தை காத்து கொள்வீர்கள். ‘நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்’ – (ஏசாயா 2:22).
6. குடும்பத்திலே பகலின் வேலைகளை குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து செய்யுங்கள். இது மருமகள் வேலைதானே, அல்லது மாமியார் வேலைதானே என்று போட்டி மனப்பான்மையோடு வாழாதீர்கள். எதை செய்தாலும் மனப்பூர்வமாய் செய்து குடும்பத்தின் மகிழ்ச்சியை தக்க வையுங்கள். பகலின் வேலை இரவில் உங்களுக்கு தூக்க மாத்திரையின்றி நல்ல நித்திரையைத்தரும் ‘வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்’ – (பிரசங்கி 5:12).
7. கடைசியாக, குடும்பத்தில் பிரச்சனை என்று ஒன்று இருந்தால், பிள்ளைகளின் மூலமாகவோ, மனைவி, கணவர் மூலமாகவோ பிரச்சனை என்று ஒன்று இருந்தால் கண்களுக்கு நித்திரை வருவது மிகவும் கடினம். திரும்ப திரும்ப நடந்த காரியங்களையே யோசித்து யோசித்து, இரவு முழுவதும் நித்திரை வராமல் தவித்து கொண்டிருப்பர். கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால் படுப்பதற்கு முன் பேசி பிரச்சனையை முடித்து கொள்ள வேண்டும்.
‘நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது’ – (எபேசியர் 4:26) என்று வேதம் நமக்கு போதிக்கிறது. மற்றும் பிள்ளைகள் மூலமாக பிரச்சனை என்றால், அவற்றை தேவனுடைய கரத்தில் வைத்து விட்டு, அவருடைய செய்கைக்காக காத்திருக்க வேண்டும். நாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. கர்த்தரின் கரத்தில் எல்லாவற்றையும் அர்ப்பணித்து விட்டு, நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். தேவன் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென் அல்லேலூயா!