உலகில் எந்தவொரு இடத்தில் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாட்டுப்பற்றும், இனப்பற்றும் இருக்கின்றது; இருக்கவேண்டிய அளவுக்கு இருந்தால் அதில் எவ்வித தவறும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அதுவே நஞ்சாகி விடுகின்றது.

இனப்பற்றும் இனவெறியும்

உண்மையில் நான் அறியாமலேயே இனப்பற்று எனக்குள் இருந்தாலும் “இனவெறி எனக்கில்லை“ என்று கூறத்தக்கவனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாழவேண்டும். கிறிஸ்தவனாகிய நான் இந்த உலகத்தில் ஒரு சாண் அளவு நிலத்துக்காக நான் பிறக்கவில்லை. அதற்காக நான் போராடப் போவதில்லை. அதற்கான போராட்டங்களோடும் ஒத்துப்போகமாட்டேன்.

என் நிரந்தர வீடு கர்த்தரிருக்கும் இடம். நான் வாழப்போகின்ற இடமும் அதுவே. இந்த உலகம் நிரந்தரமானது அல்ல. இவ்வுலகில் நான் மட்டும் வாழப் போவதுமில்லை. மற்றவர்களுக்கும் இவ்வுலகில் வாழ்வதற்கான சகல உரிமைகளும் உண்டு. எந்தவொரு இனமும் உயர்வானதாகவோ தாழ்வானதாகவோ நான் கருத மாட்டேன். சகல இனத்திலும் நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு என்பதை நான் அறிவேன்.

தற்போது இவ்வுலகில் நான் வாழ்ந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தில் நான் பிறந்தபோதிலும் நான் அதற்கு மாத்திரம் உரியவனாக என்னைக் கருத மாட்டேன். ஏனென்றால் ஒருநாள் இவற்றை நான் விட்டுவிட வேண்டி வரும். உலகில் நான் பிறந்து வாழ்வதற்கு ஒரு இனம் என்ற அடையாளம் தேவை என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆக இனப்பற்று தானாகவே எனக்குள் இருந்தாலும் நான் இனவெறியனாக வாழப்போவதில்லை.

மொழிபற்று மொழிவெறியும்.

எனக்கு மொழிப்பற்றும் அதிகமாகவே இருக்கிறது; பிறமொழிகளை நேசிக்கமுடியாத அளவுக்கல்ல. என் மொழிப்பற்று அதற்கான போராட்டத்தில் என்னை ஈடுபட வைக்காது. என் மொழிப்பற்றை வெளிப்படுத்த நான், ‘நான் தமிழர் என்று பறைசாற்றும் கட்சியில் இணைய வேண்டிய அவசியமில்லை. என் மொழிப்பற்றுக்கு ‘அரசியல்’ தெரியாது. மொழிவெறி கிடையாது.

எல்லா மொழிகளையும் படைத்தவர் கடவுள். எல்லா மொழிகளையும், எல்லா இனங்களையும் நான் நேசிக்கிறேன். நான் வாழ்வதற்கும் பேசுவதற்கும் எனக்கு மொழி தேவை. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் என்னால் படித்து அறிந்திட வயதுபோதாது. ஆனாலும் அவ் அனைத்து மொழிகளையும் நான் நேசிப்பேன். எனினும் உலகிலுள்ள எந்த மொழியானாலும் அது பரிபூரணமான சொற்வளமிக்க மொழியாக இல்லை என்பதையும் நான் மறுப்பதற்கில்லை. எல்லா மொழிகளிலும் குறைவுகள் உண்டு நிறைவுகளும் உண்டு என்பதை அறிந்தவனாகவே இருக்கிறேன்.

கிறிஸ்தவனாக இந்த உலகத்தில் இருக்குமளவும் என் மொழியைப் படைத்தவருக்காகப் பயன்படுத்துவேன். வேதம் அனுமதிக்கின்ற அளவுக்கே இதிலெல்லாம் எனக்குப் பற்றிருக்க முடியும். இதையெல்லாம் மாயையாகக் கருதி கிறிஸ்தவனாக நான் இன, மொழித் துறவறத்தை நாடவேண்டியதில்லை. எனது மொழியின் சிறப்பையும் பிற மொழிகளின் சிறப்பையும் கற்றுக் கொண்டு அவற்றை மதிப்பவனாகவே இருப்பேன்.

முடிவுரை

நான் பிறந்திருக்கும் இனமும், மொழியும் என் நன்மைக்காகத் தரப்பட்டவை. அவற்றை ஆனந்தத்தோடு கர்த்தரின் வேதத்தை மீறாதபடி நான் அனுபவிக்கவேண்டும்; அவற்றால் அவரை மகிமைப்படுத்தவேண்டும். இந்த எல்லையை மீறுகிறபோது நான் விசுவாசத்தின் விதிகளை மீறுகிறவனாகவும், இந்தச் சமுதாயத்தில் ஒருவனுமாகிவிடுகிறேன். அப்படி நான் இனவெறியனாக மொழிவெறியனாக என்னை அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டேன்.


கடைசியாக – நாம் வாழ்வதற்கான அனைத்து உறவுகள் குடும்பங்கள் திறமைகள் பொருளாதாரம் யாவையும் தந்தது கர்த்தர் அல்லவா. இத்தனை வருடங்களாய் அவர் நமக்குச் செய்த நன்மைகள் அளவில்லாதவை. கர்த்தர் நமக்கு அருளிய நன்மைகளை வரப்பிரசாதங்களை சிலாக்கியங்களை நன்மைக்கேதுவாக பயன்படுத்துவோமாக.

மீள்வடிவம் – இ. வ. ஏனர்ஸ்ட்.
மூலம் ஆர் பாலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *