கொரோனாவை விட ஆபத்தான ஒன்லைன் – துர்உபதேச செய்திகள் எச்சரிக்கை!
கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் கூடி ஆராதிப்பதே இப்போதைய சூழலில் மிகச் சரியானது. இன்று இது கொரோனா வைரஸ் பரவுவதற்கு தடையாக இருப்பதற்கான ஒரு மருத்துவ சூழ்நிலையாகும்.
இச்சூழ்நிலையானது அப்போஸ்தலர் காலத்து வீட்டுத் திருச்சபையின் முக்கியத்துவத்தை இன்று நாம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அப்பம் பிட்குதலும், உபதேசித்தலும், பிரசங்கித்தலும், ஆராதித்தலும் அன்று வீடுகள் தோறும் காணப்பட்டது. இன்று எனது வீட்டில் இது காணப்படுமா?
வீடுகளிலா?
அப்போஸ்தலர் புத்தகத்தைப் படிக்கும்போது, வீடுகள் தோறும் ஜெபம் (2:46, 5:42) நடைபெற்றதைக் காணலாம். மரியாளின் வீட்டில் (12:5,12) ஆக்கில்லா – பிரிஸ்கில்லா வீட்டில் (ரோமர் 16:3-5) பிலேமோன் வீட்டில் (பிலே 1,2) என எழுதிக்கொண்டே போகலாம். வீடுகளிலே நாம் ஒருவரையொருவர் கவனித்து, ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி, ஒருவர் குறையை ஒருவர் பொறுத்துக்கொண்டு கூடி வாழ்தல் எத்தனை இன்பமானது?
உண்மையில், கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக நாம் இருப்பதினாலும், திருச்சபையின் தலைவராக கிறிஸ்து இருப்பதினாலும் வீட்டுச் சபை சாத்தியமான ஒன்றாகும். நாம் குடியிருக்கின்ற இடத்திலேயே தேவனை ஆராதிப்பதும், வேதாகமத்தின் வசனத்தை வாசிப்பதும், அதைக் கற்றுக்கொள்வதும், தியானிப்பதும், கர்த்தர் செய்த நன்மைகளை சாட்சியாக பகிர்ந்துகொள்வதும் வீட்டுச் சபைக்குள் நடைபெற வேண்டிய காhpயங்களாகும்.
நீர் பார்வையாளரில் ஒருவரா?
எண்ணெய் சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழுந்ததுபோல இன்று திருச்சபை பிளவுகளுக்குள் சிக்குப்பட்டிருக்கின்ற அப்பாவி விசுவாசிகள் இப்போது தவறான துர்உபதேச போதனைக்குள் சிக்குப்பட வேண்டிய நிலைக்குள் வந்துவிட்டனர். என்னப்பா, புரியவில்லையே என யோசிக்கின்றீர்களா? ஆமாம், புரியும்படி கூறுகிறேன்.
கர்த்தரை ஆராதிக்க வேண்டிய மக்கள், இதுவரை திருச்சபைக்குச் சென்ற சிலர் பார்வையாளர்களாகவும், கேட்கின்றவர்களாகவும் மட்டுமே பழகிவிட்டுள்ளனர். நீர் அவர்களில் ஒருவராக இருந்தீரா? இப்போது அப்படி செயல்பட்ட மக்களை வெகுவிரைவில் தொலைக்காட்சிகளும், இணையத் தளங்களும் கவர்ந்திழுக்கப் போகின்றன. ஏற்கனவே சிலர் ஒன்லைன் சபை ஆராதனை என்ற கவர்ச்சியில் வேதாகமத்தை விட்டு தூரமாக சென்றுவிட்டுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒன்-லைன் எச்சரிக்கை!
ஒன்லைன் ஆராதனையில் ஈடுபாடு காட்டுவோர், தம் தமது சபையின் ஆராதனைகளில் பங்கேற்பதில் தவறில்லை. ஒருவகையில், அவரவர் அங்கத்தினராக உள்ள திருச்சபை போதகரது ஆராதனை நிகழ்ச்சிகளை ஒன்லைன்க்கூடாக பார்ப்பதே பாதுகாப்பானது. அப்படி வசதியில்லாதவர்கள் உங்களது போதகர்களது ஆலோசனைகளின்-படி செயல்பட வேண்டியது அவசியமாகும்.
ஏனென்றால், TV சேனல்களிலும், இணையதளத்திலும், Youtube-களிலும், Facebook live விலும் வருகின்ற எல்லா online live ஆராதனைகளில் மிகவும் கவனம் தேவை. ஒன்லைன் ஆராதனைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவரவர் வீடுகளில் கூடி கர்த்தரைப் பாடி ஆராதிப்பதே சிறந்தது. உங்கள் வீட்டிலுள்ள Tv, Internet இற்கு பார்வையாளராக மாறிவிடாதேயுங்கள்!
ஆபத்து! ஆபத்து!
துர் உபதேச போதனைகள் கொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தானது என்பதை கிறிஸ்தவர்கள் அறியவேண்டும். இன்று பல செய்தியாளர்கள் தவறான துர்உபதேசங்களை போதிக்கிறார்கள். சரியானதை அறிந்துகொள்ள வேதாகமத்தின் வசனத்தைக் குறித்த அறிவும், தெளிவும் ஆவிக்குரிய முதிர்ச்சியும் நமக்கு மிகவும் அவசியமாகும்.
youtube-களிலே கவனித்தபோது, ‘நான் கடவுள்’ என ஒருவன் தவறாக போதிக்கிறான். ‘நீ சரீரத்தில் சாகமாட்டாய்’ என இன்னொருவன் தத்துவ புரளி பேசுகிறான். நடனமாடி, இசையில் மூழ்கிட இன்னொருவன் அழைக்கிறான், காதுக்கு இனிய பொய் தீர்க்கதரிசனங்களை இன்னொருவன் உரைக்கிறான். இவையெல்லாம் வேதாகமத்தின்படி நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே இவற்றிலுள்ள தவறுகளை கண்டுபிடிக்க முடியும். ஆகவே, இதில் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம்!
கள்ள உபதேசம் என அழைக்கப்படுகின்ற ஊழியர்கள் ஒன்றிரண்டு வசனங்களை எடுத்து வைத்துக்கொண்டு, வைரஸிற்கு எதிராக வேத வசனங்களை போட்டிப் போட்டு அறிவிக்க முற்படுகின்றனர். அந்த வசனங்கள் கொரோனா வைரஸ்க்காக கூறப்பட்டதல்ல என்பதை கிறிஸ்தவ போதகர்களில் பலர் அறியாதுள்ளனர். ஆக, ஆபத்து வாசற்படிக்கே வந்துவிட்டதை திருச்சபை உணர்ந்துகொள்ள வேண்டும். இதைத் தடுக்க வேண்டுமாயின் திருச்சபையானது, வசனத்தை திரித்து பேசுகின்றவர்களுக்கு எதிராக, சரியானதை இணையத்தளங்களுக்கூடாக பேச ஆரம்பிக்க வேண்டும்.
வேண்டுதல் செய்யுங்கள்!
திருச்சபையானது, இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஏப்ரல் குண்டுவெடிப்புக்குப் பின்னர், திருச்சபைக்கு வர அநேக விசுவாசிகள் பயந்தனர். இப்பொழுதும் பயத்தினால் தனித்தே காணப்படுகின்றனர். ஒரு கிறிஸ்தவனாக, நாம் சக மனிதருக்கு கூறவேண்டிய காரியமானது, பயத்திற்கு இடம்கொடாமல் இருங்கள் என்பதே. பயப்படாதேயுங்கள் என்று இயேசு கூறியதை நினைவுபடுத்துவோம்.
சுயநலமுள்ள நபர்களாக அளவுக்கு மீறிய பொருட்களை எமக்காக மாத்திரம் வாங்கி சேமிக்காமல், பிறருடைய இழப்பில், நோயில் அவர்களுக்கு ஆறுதலாயிருப்போம். நம்பிக்கையற்ற மக்களுக்கு இயேசு தந்த நம்பிக்கையை காட்டுகின்றவர்களாக இருப்பது இக்காலத்திற்கு எத்தனை அவசியமாயுள்ளது.
வீடுகளில் ஜெப நேரம்!
இன்று உங்கள் வீட்டில் குறைந்தது குடும்ப ஜெபத்திற்காக நேரம் ஒதுக்குவதுண்டா? குடும்ப ஜெபம் உங்கள் வீட்டிலுள்ளதா? அன்றும் இன்றும் தேவனுடைய பிள்ளைகள் வீடுகளிலிருந்து ஜெபிக்கும் முறைகளையே பின்பற்றி வருகின்றனர். நாமும், குடும்பமாக, பிள்ளைகளோடு, பெற்றோரோடு சேர்ந்து ஜெபிப்பதும் ஆராதிப்பதும் பாடல்களை பாடுவதும் வசனத்தைக் கேட்பதும் தேவ வசனத்தைப் புரிந்துகொள்வதும் எத்தனை அவசியமானது.
வீட்டுச் சபைகள் உறுதிப்படுமாயின், நிச்சயமாக, எழுப்புதல் உருவாகும். இந்தக் கடினமான சூழ்நிலையில், வீட்டிற்குள்ளிருந்து ஜெபிப்பீர்களாயின், ஆலயம் செல்ல முடியவில்லையே என நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். (பிலி 4:6)
அன்பு நண்பர்களே, கொரோனா வைரஸ் பாதிப்பினால்,
நீங்கள் பாதிக்கப்படாதபடிக்கு கவனமாயிருங்கள்!
மற்றவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்!
உங்களது ஆவிக்குரிய வாழ்விலும் தவறான வைரஸ் வந்து
உங்களைப் பாதித்து விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்!
நீங்கள் வீட்டிலிருந்து ஜெபிப்பதற்கே
தேவன் பதிலளிக்கின்றார்!
(கட்டுரையாசிரியர் இ. வஷ்னீ ஏனர்ஸ்ட் | 0094 771 869710)
அவசர ஜெப விண்ணப்ப குறிப்பு:
>> உலகமெங்குமுள்ள திருச்சபைகளுக்காக ஜெபியுங்கள்.
>> விசுவாசிகள் வேத வார்த்தையில் வளர மன்றாடுங்கள்.
>> தவறான போதனைகளிலிருந்து கிறிஸ்தவர்கள் தப்புவிக்கப்பட மன்றாடுங்கள்.
>> கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேண்டுதல் செய்யுங்கள்.
உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!
ஆசிரியரின் எழுத்தாக்கங்களை தொடர்ந்தும் மின்னஞ்சல் ஊடாகப்பெற்றுக்கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]