இந்தத் தலைப்பிலே, நான் எனது வாழ்க்கையில் படிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் குறித்தும் அதன் பிரயாசத்தின் பலனைக் குறித்தும் நான் கற்றுக்கொண்ட காரியங்களை விசேஷமாக குறிப்பிடலாம். இன்று எனது வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும்போது தேவனுடைய சித்தத்திற்கு மாறாக நான் கற்றுக்கொள்ள எண்ணிய காரியங்களைக் குறித்து வெட்கத்துடன் எண்ணிப் பார்க்கின்றேன்.
நான் என்னுடைய கல்லூரி படிப்பினை முடித்துக்கொண்டு, 2003ல் இலங்கை வந்ததும் எனக்கு புகைப்பட (Photographic) துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக நான் Fuji film என அழைக்கப்படும் ஒரு மொத்த வியாபார நிறுவனத்தில் இணைந்துகொண்டு கெமரா (Camera), அல்பம் (Album), மற்றும் புகைப்பட கருவிக்கான நெகடிவ்(Nagative), ரீல்ஸ் (Reals) போன்றவற்றை புகைப்பட நிலையங்களுக்கு (Studios) விற்பனை செய்து வந்தேன். அப்போது ஒரு புகைப்பட நிலையத்துக்குச் சொந்தக்காரர் அருகிலுள்ள பௌத்த விகாரை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வகுப்பினை எடுப்பதாக நான் அறிந்துகொண்டேன்.
எனது தொழிலும் புகைப்பட தொழிநுட்ப ஆசையின் காரணமும் காரணமாக நான் அந்த பௌத்த விகாரையில் படிப்பதைக் குறித்து எவ்வித சங்கடப்படவுமில்லை. என்னுடைய கிறிஸ்தவ பெற்றோருக்குக் கூட நான் அதைக் குறித்து விபரமாக கூறாமல் தவிர்த்தேன். அதன் காரணமாக சில மாதங்களுக்குள் நான் அந்த பௌத்த விகாராதிபதியைச் சந்தித்து அப்பாட நெறிக்கான கட்டணத்தைச் செலுத்தினேன். பின்னர் அந்தப் பாடத்திற்குரிய அடையாள அட்டையையும் எடுப்பதற்கு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.
கடைசியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அந்த விகாரைக்கு வரும்படியாகவும் அந்த பாடநெறியானது காலை 9:30 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெறுவதாகவும் அறிந்துகொண்டேன். இதன் காரணமாக ஒருஆறு மாதத்திற்கு ஞாயிறு ஆராதனையை எப்படியாவது தவிர்த்து விடலாம் என மனக்கோட்டைக் கட்டியிருந்தேன். எனினும் அங்கே பணத்தைக கட்டி பின்னர் மனதிலே ஒருவித சஞ்சலம் ஏற்படத் தொடங்கியது. அதன் காரணத்தை நான் அறியாத போதும் இரண்டு மூன்று கிழமைகள் தொடர்ந்தும் அந்த பாடநெறிக்கு சமுகமளிக்க தொடங்கினேன். எனினும் 8.00 மணியளவில் விகாரையில் நடைபெறும் பௌத்த மத பூஜையில் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்று புதியதொரு நிபந்தனை (Rules) விதிக்கப்பட்டமையினால் நான் ஒரு நாள் அதில் கலந்துகொண்டேன். எனினும் அந்த பௌத்த புத்தரின் சிலையை நான் வணங்கவோ அல்லது நமஸ்கரிக்கவோ மறுத்து கைகளை கூப்பவேயில்லை. எனினும் தொடந்து அந்த விக்கிரக இடத்திற்குள் என்னால் நிற்கமுடியாமல் இருந்தது. அடுத்த தடவை நான் ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்தப் பூஜையை சகிக்க முடியாதவனாக என்னுடைய வீடு திரும்பி வந்துவிட்டேன். அதன் பின்னர், அந்த வகுப்புக்குச் செல்ல எனக்கு பயமாக இருந்தது. காரணம் பௌத்த துறவிகளும் அந்த வகுப்பில் இருந்தமையால் நான் அந்த பூஜைக்கு சமூகமளிக்காது இருப்பது பெருங்குற்றமாக அவர்கள் கருதினார்கள்.
அதன் பின்னர் அந்த புகைப்பட (Photographic) பயிற்சி வகுப்பிற்கு செல்லவில்லை. ஆசை இருந்தும் அதைத் தொடர முடியாமல் போயிற்று. இன்னொரு பக்கம் தேவனுடைய கரம் என்னோடு இருந்தபடியினால், தொடர்ந்தும் நான் அந்த Fuji film நிறுவனத்திலிருந்து விலக நேர்ந்தது. அங்கிருந்து விலகி சில மாதங்களின் பின்னர் தேவன் என்னை கிறிஸ்தவ நிறுவனமொன்றில் இணைந்துகொள்ள செய்தார். ஆகவே அதில் இணைந்துகொண்ட பின், நான் முன்னர் பணிபுரிந்த சேவையும், என்னுடைய புகைப்பட நிபுணராகும் வாஞ்சையும் அதன்காரணமாக நான் எடுத்த தீர்மானமும் எனது பிரயாசமும் அனைத்தும் வீணாக கழித்துப் போட்டேன் என்பதையே நான் தற்போது உணருகின்றேன்.
நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது. பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது. ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது. தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது. அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.” (பிரசங்கி 9:11)
இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்.