📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபேசியர் 5:1-10

இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8

வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற காலத்தில் சிக்கியிருக்கிற நாம், ‘நாம் யார்’ என்று நம்மைக் குறித்துச் சிந்திக்கிறோமா? உலகத்தில் பிறந்து மரிக்கும் சகல மக்களையும் ஏழை-பணக்காரன், ஆண்-பெண், கறுப்பன்-வௌ்ளையன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்று பிரிக்கவே முடியாது. காரணம் இவ் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலும் வேறுபட்ட சிலர் இருக்கின்றார்கள். ஆயினும், உலகிலுள்ள மக்களை வேதாகமம் இருசாராராக பிரிக்கின்றது. ஒன்று, இருளின் பிள்ளைகள்; மற்றது, வெளிச்சத்தின் பிள்ளைகள். அதாவது கிறிஸ்தவன்-புறஜாதியான் என்றோ, கற்றவன்-கல்லாதவன் என்றோ கீழைத்தேயன்- மேற்கத்தேயன் என்றோ மக்களினத்தைப் பிரிக்காமல், அவன் வெளிச்சத்தின் பிள்ளையாக நடக்கிறானா அல்லது இருளின் பிள்ளையாக நடக்கிறானா என்பதை வைத்தே வேதாகமம் மனுமக்களை இரு சாராராக பிரித்துக்காட்டுகின்றது. ஆவிக்குரிய வாழ்வில், நாமும்  இவ்விரண்டு சாராரில் ஒன்றுக்குள்ளேயே அடங்குகிறோம்.

கிழக்கிற்கும் மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூர வித்தியாசம் இவ்விரு சாராருக்கும் உண்டு. எப்படி இவ் இரு சாராரையும் வேறுபிரித்து கண்டுகொள்வது? அதற்கு, நம்மிடமிருப்பது தேவனுடைய வார்த்தை ஒன்றுதான். ஒளியின் பிள்ளை தேவ வார்த்தையின்படி நடப்பான். இருளின் மக்களோ ஒன்றில் அதை வெறுப்பார்கள்; அல்லது அதை அறிந்திருந்தாலும், அதை ஒதுக்கிவிடுவார்கள். அதாவது, தாம் ஒளியின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டும், ஒளி காட்டும் வழியில் நடப்பதில்லை. இதிலே நாம் யாராக இருக்கின்றோம் என்பதை நமது வாழ்க்கை என்ற மரம் கொடுக்கின்ற பலன்களினாலேயே கண்டுபிடித்துவிடலாம். நல்ல கனிகளைக் கொடுப்பவன், அவன் வெளிச்சத்தில் நடக்கிறவனாயிருப்பான். கெட்ட கனிகளைக் கொடுப்பானாயின், அவன் இருளின் பிள்ளையாகவே இருப்பான். அதேசமயம் ஏனோதானோவென்று வாழ்பவர் இருளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு, தம்மை அறியாமலேயே இருளின் கிரியைகளை ஆதரிப்பர். ஆகவே கிறிஸ்தவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இருளைப் பற்றிய அறிவு இல்லாவிட்டால் எப்படி நாம் வெளிச்சத்தை வாஞ்சிக்கமுடியும்? நாம் வெளிச்சத்தை வாஞ்சித்தால் எப்படி இருளுக்குள் வாழமுடியும்?

இருளுக்குரிய காரியங்களை விட்டுவிட்டு, தேவனுடைய வெளிச்சத்திற்குள் நம்மைக் கொண்டு வருவோமாக. பழைய பாவங்கள், மாம்சத்தின் இச்சைகள் யாவும் இருளுக்கு அடையாளம். அதை உணர்ந்து, சிந்தித்து தேவனுடைய வார்த்தையின்படி வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ முயற்சிப்போமாக!

💫 சிந்தனை

வெளிச்சத்தில் வாழுவதற்கும், இருளில் வாழுவதற்கும் நமது இயல்பான வாழ்விலேயே நம்மால் வேறுபாட்டைக் கண்டுகொள்ளமுடியுமானால், நமது வாழ்வை நிதானிப்பது நமக்குக் கடினமாகவே இராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *