‘எந்தவொரு கல்வி நிறுவனமும் மாணவரைச் சேர்க்க பணம் (Capitation fee) வாங்குவது சட்டத்தின்படி தவறானது’ அது பாரபட்சத்திற்கு வழிவகுக்கிறது. வசதியுள்ளோருக்கு இடம் கிடைக்க எளியவரோ இடம் கிடையாது தவிக்கின்றனர். பணமில்லை என்ற ஒரே காரணத்தால் நன்கு படிக்கும் எளிய மாணவனுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பணக்காரனோ பணம் கொடுத்து நுழைந்துவிடுகின்றான். இவ்வித நிலை அநியாயமானது. அயோக்கியமானது. அபத்தமானது. இந்தப் பணப்பறிப்புக்கு எப்பெயரிட்டாலும் இது ஒரு தீய நடைமுறை என்று முடிவு கட்டலாம். எனவே கிறிஸ்தவர்கள் இந்த ”அதிகாரப்பூர்வமான லஞ்சத்திற்கு” எதிராகக் குரல் எழுப்பவேண்டும்.
ஏராளம் பணம் கொடுத்து தொழிற்கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர் அவர்களின் ஒழுக்கநெறியை சின்னாபின்னமாக்குகிறார்கள். இவர்கள் “பணம் பத்தும் செய்யும்” என்ற உலகக் கோட்பாட்டில்தான் வளருவார்கள். உண்மையாகவே உயர்வு உன்னதத்திலிருந்து வருமென்பதே வேதாகமப் போதனை. பணம் கொடுத்து இடம் வாங்கும் முறையானது பிறகேடுகளுக்கும் வழிநடத்துகின்றது. மாணவன் பரீட்சையை நன்கு எழுதாவிட்டால், ”வெகுமதி” பெற்று விடைத்தாளை திருத்தும் ஆசிரியரை பின்தொடர்வான். இதற்கும் பேரம் உண்டு. அதுமட்டுமல்ல, இலட்சக் கணக்கில் பணத்தை கொட்டிய பெற்றோர் தங்கள் பிள்ளையின் திருமணத்தின்போது பெட்டிவைத்து அதை அள்ளிவிட முயலுகிறார்கள். இவ்விதம் கைமாற்றங்களில் நடமாடுவது பெரும்பாலும் கறுப்பு பணம்தான். நன்கு படிக்கும் ஆனால் எளிமையில் வாடும் மாணவர்களுக்கு இப்பண கைமாற்றம் அநீதி செய்வதால் தேவகோபம் அங்கு நிலைத்திருக்கும்.
பணத்தால் பெற்றுக்கொண்டதை பணத்தால் தான் பாதுகாக்க வேண்டிய நிலைவரும். நமது தேவன் நீதியுள்ளவர். தவறான அநீதியான முறைகளில் பெற்ற நன்மைகளை அவர் ஒருபோதும் அங்கீகரியார். உங்கள் மகனோ, மகளோ பட்டம் பெற்றுவிடலாம். நல்ல வேலையிலும் அமர்ந்துவிடலாம். ஆனால் தேவ ஆசீர்வாதம் எங்கே? தனது சுயபலத்தால் பெற்றெடுத்த இஸ்மவேலை தமது மீட்பின் வரிசையில் சேர்க்க மாட்டேனென்று தேவன் ஆபிரகாமுக்குச் சொன்னது நினைவில்லையோ? பணம் கொடுத்து உள் நுழைந்து, பணம் கொடுத்து வெளிவரும் பொறியியலாளரும், மருத்துவரும், நோயாளிகளை எப்படிக் கவனிப்பார்களோ, கட்டிடங்களை எப்படிக் கட்டுவார்களோ, ஐயோ! நினைத்தாலே பயமாயிருக்கிறது!
தொழிற்கல்லூரியில் இடம் கிடைக்காவிடில் தங்கள் பிள்ளைகள் எதையோ இழந்துவிட்டரென பெற்றோர் நினைக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கென்று தேவன் தனித்திட்டமொன்று வைத்திருக்கிறார். அதுவே மேலானது. உலகமுறைகளுக்கு மறுப்புத் தெரிவித்து, தமது வல்லமையை வெளிப்படுத்த தேவனுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள் (2நாளா.16:9). அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.