கோவிட் பிரச்சனையை ஓரளவுக்குத் தாங்கிச் சுமந்து அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதை முளைத்துத் துளிர்விட ஆரம்பித்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்கிரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து அதன் அரசைக் கவிழ்க்கும் தன்னிச்சையான அராஜகச் செயலைச் செய்திருக்கிறது. ரஷ்யா இந்தளவுக்குப் போகும் என்பதை எவரும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் உக்கிரேனில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்; பல்லாயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாகியிருக்கிறார்கள். மேற்கத்திய ஜனநாயக நாடுகள் ரஷ்யாவின் போக்கைக் கண்டித்து அதன்மீது அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூகத்தடைகளை விதித்துக்கொண்டிருக்கின்றன.

முதலிரண்டு உலகப்போர்களைச் சந்தித்து அகோரப் பாதிப்புக்களைக் கண்டுணர்ந்திருக்கும் உலகம் இனிமேலும் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபையையும், ஐரோப்பிய நாடுகளால் நேட்டோ பாதுகாப்பு அமைப்பும் உருவாக்கப்பட்டன. இதுவரை அவை தங்களால் முடிந்ததைச் செய்து பெரும் உலகப்போர் மறுபடியும் நிகழுவதற்கு இடங்கொடாமல் செய்திருக்கின்றன. ரஷ்யாவின் இந்தப் போர் நடவடிக்கைகள் உலகத்தில் இனியும் சமாதானம் தொடர்ந்து நிலைத்திருக்குமா? என்ற பெருங்கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

உக்கிரேன் மீது போர் தொடுத்ததற்கு ரஷ்யா எத்தனையோ அரசியல் காரணங்களை முன்வைக்கும். அரசியலை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு மனித சமுதாயத்தை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித வர்க்கம் சுதந்திரக்காற்றை எங்கும் மூச்சிழுத்து சுவாசிக்கும் ஆசீர்வாதத்தை அடைந்திருக்கிறது. உலகமயமாக்குதலும் (Globalism), ஐரோப்பிய ஒன்றியமும் (European union), தொழில் நுட்ப வளர்ச்சியும், இணையத் தொழில் நுட்பமும், நவீன வியாபாரச் சந்தை மயமாக்கமும் நவீன உலகின் ஆசீர்வாதங்கள். இவை உலகத்தைச் சுருக்கி மக்கள் இலகுவாக நாடுவிட்டு நாடுபோகும் வசதிகளை உருவாக்கி இன, மத வேறுபாடில்லாமல் மானுடம் சுதந்திரத்தை அனுபவிக்கும் வழிகளை உருவாக்கித் தந்திருக்கின்றன.

மனித இருதயத்தில் ஊறிப்போயிருக்கும் எரிச்சலும், பொறாமையும், அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படும் இச்சையும், வீதியில் புரண்டு சண்டைபோடும் இழிவான வக்கிரமும் மனிதனில் தொடர்ந்து எந்த மாற்றத்தையும் அடையாமல் அவனை அப்படியே வைத்திருக்கின்றன என்பதைக் கைதட்டிச் சுட்டுகிறது ரஷ்யாவின் இந்த அக்கிரமச் செயல். ரஷ்யா செய்திருக்கும் இழிவான செயலுக்கு முன்பாகவே, சீனா ஹாங்கொங் நாட்டை (சட்டப்படி அதற்குச் சேரவேண்டியதாக இருந்தபோதும்) பிரிட்டனின் ஆளும் காலம் முடிந்தபிறகு, சுதந்திரக் காற்றைச் சுவாசித்து அதில் திளைத்திருந்த கோடிக்கணக்கான அந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறானதொரு ஆட்சிமுறையை வலுக்கட்டாயமாக அவர்கள் மேல் திணித்து மனித சுதந்திரத்திற்கு பெருந்தடை ஏற்படுத்தி அவர்களை நசுக்கி ஆள ஆரம்பித்திருக்கிறது. இப்போது அது தன் கண்களைத் தாய்வான் மெல் திருப்பியிருக்கிறது. ரஷ்யாவின் செயல் சீனாவுக்குத் தாய்வானை ஆக்கிரமிப்பு செய்வதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கிறது.

கடந்த சில வருடங்களில் சீனா தன்னிச்சையாகத் தென் சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்குச் சொந்தமான நீர்பரப்பில் காணப்படும் தீவுகளில் படைகளை நிறுத்திப் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தித் தன்னுடைய பலத்தைக் காட்டியிருக்கிறது. சர்வதேச சட்டங்களைச் சீனா இந்த விஷயத்தில் பொருட்படுத்தவில்லை. அத்தோடு கீழைத்தேய, ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார பலவீனத்தைப் பயன்படுத்திப் பணத்தையும், தொழில்நுட்ப வசதிகளையும் அளித்து அந்நாடுகளைத் தன்வசப்படுத்தும் முயற்சியிலும் அது பெருமளவுக்கு ஈடுபட்டிருக்கிறது. பிலிப்பீன்ஸ், ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் பெருங்கடன்களை சீனாவிடம் பெற்றும், சொந்த நாட்டின் பகுதிகளைச் சீனா சுதந்திரத்தோடு பயன்படுத்திக்கொள்ளும் வசதியை அனுமதித்தும் சீனாவின் மறைமுக ஆளுகைக்கு தங்களுடைய தன்னுரிமையைப் பலிகொடுத்திருக்கின்றன.

Conflict between Ukraine and Russia, male fists – governments conflict concept

ஜனநாயக அரசமைப்பின் வசதிகளை அனுபவித்து, சுதந்திர சுவாசக்காற்றில் மூச்சிழுத்துப் பரவசப்பட்டுக்கொண்டிருந்த நாடுகள் இன்று அதிர்ச்சியடையும் விதத்தில் கரும்போர் மேகங்கள் உக்கிரேனின் வானில் எழுந்து ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆதிக்கவெறி மழையை அதன்மேல் பொழிந்துகொண்டிருக்கின்றன. நவீன சமுதாயத்து இளைஞனும், பிரபல ஸ்பானிய டென்னிஸ் வீரருமான ரபாயேல் நடால் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது, “இந்த 21ம் நூற்றாண்டில் இதை எண்ணிப்பார்க்க முடியாமல் இருக்கிறது” என்று ஆச்சரியத்தோடு சொல்லியிருக்கிறார். ஜனநாயக சுதந்திர ஐரோப்பாவின் நவீன இளைஞர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. அமெரிக்காவுடனும், ஐரோப்பாவுடனும் இருந்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சோவியத் ரஷ்யாவின் முன்னால் அதிபர் கோபர்சாவ் இதையெல்லாம் பார்த்து என்ன நினைக்கிறாரோ? ரஷ்யாவின் செயல் மறுபடியும் பனிப்போர் காலத்துக்கு மேற்கத்திய நாடுகளை இழுத்துச் செல்லுமா?

இரண்டு உலகப்போர்கள் நடந்து முடிந்திருக்கலாம். ஜனநாயமும், சுதந்திர வாழ்க்கை முறையும் எப்போதுமில்லாதவகையில் உயர்ந்திருக்கலாம். ஆங்காங்கு இடி அமீன், ஈராக்கின் ஹுசேன், ஈரானின் அயத்துல்லாக்கள், தலிபான், அல்கெய்டா, வட கொரியாவின் கிம் போன்றோர் தலைதூக்கி ஜனநாயக உலகுக்கு அச்சுருத்தலாக இருந்து வந்திருக்கலாம். அதையெல்லாம் ஐனநாயக உலகு தாங்கிச் சமாளித்து சுதந்திரக்காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வந்திருந்திருக்கிறது. ரஷ்யா மூலம் இப்போது வந்திருக்கும் ஆபத்து உலக சுதந்திரத்துக்கு இந்த நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தல். ரஷ்யாவினுடையதும், சீனாவினதும் நடவடிக்கைகள் இதுவரை நடந்துள்ள இரண்டு உலகப்போர்களைப் பற்றி அதிகம் தெரிந்திராத நவீன சமூகத்துக்குப் பேரெச்சரிக்கை.

ரஷ்யா, சீனா இரண்டுமே பொதுவுடமைக் கோட்பாட்டைப் பின்பற்றும் நாடுகள். கார்ல் மார்க்ஸ் எழுதி விவரித்திருக்கும் பொதுவுடமையல்ல இந்த நாடுகளில் இன்று பின்பற்றப்படுவது. மார்க்ஸ் இல்லாதவனுக்கு இருக்கிறவர்களிடம் இருப்பதைக் கொடுத்து அவனை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த இரண்டு தேசங்களிலும் இல்லாதவர்கள் உயர்ந்ததாகக் கதையில்லை. இவை ஒரே கட்சி ஆட்சிமுறையைக் கொண்டு அதிகாரபலமுள்ள ஒரு மனிதன் முழு தேசத்திற்கும் மூளையாக இருந்து செயல்படும் அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இதன் தலைவர்கள் ரஷ்யத்தலைவராக இருந்த ஸ்டாலினை நினைவுபடுத்துகிறார்கள். சிறையிலிருக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்டுப்பாருங்கள். அவர் சொல்லுவார். இரண்டு நாடுகளிலும் அரசைக் குறைகூறிப்பேசித் தப்பமுடியாது.

சீன அதிபர் சீ ஜின்பிங் தன்னை ஜீவனுக்கும் தலைவராக இருக்கும்படி சட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய சர்வ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தலைவர்கள் இருக்கும் நாடுகளும், தன் நாட்டு மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்குத் தடையாக இருக்கும் நாடுகளும், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைவது வரலாற்றில் ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது. தனி மனித உரிமையையும், தனி மனித சுதந்திரத்தையும் ஜனநாயக நாடுகளில் ருசித்து வளர்ந்திருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் செயல்கள் காலத்துக்குப் பொருந்தாதவையாகத்தான் தெரியும்.

நாட்டரசர்கள் ஏதேச்சாதிகாரத்தோடு நடந்து வந்திருப்பதை வேதவரலாறும் விளக்குகிறது. அத்தகைய அரசர்கள் இஸ்ரவேலிலும் இருந்திருக்கிறார்கள். சவுல், ஆகாப், யெசபேல் கூட்டு, அத்தாலியா, யெகூ, மெனாஹேம், மனாசே போன்றவர்களை நாம் பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். மானுடம் தன் பாவத்தில் தொடரும்வரை உலகம் இத்தகையவர்களை சந்திக்கத்தான் செய்யும். மனிதன் பாவத்தின் கட்டுக்குள் உள்ளவரை பூட்டினைப்போலவும், கிம்மைப் போலவும், சீ ஜின் பிங்கைப்போலவும் நடந்துகொள்ளத்தான் செய்வான். பாவத்திலிருந்து விடுதலை அடையாதவரை மனிதனால் மனிதத் தன்மையோடு நடந்துகொள்ள முடியாது.

சிலர் ஜனநாயக ஆட்சிமுறையே அக்கிரம ஆட்சியாளர்கள் உருவாவதைத் தடுப்பதற்கு வழி என்று அமெரிக்காவைப்போல சிந்திப்பார்கள். அது ஓரளவுக்குத்தான் உண்மை; அதுவே இறுதி வழியல்ல. பாவ மனிதன் ஜனநாயகத்தைக்கூட தன்னுடைய பாவவழிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுவான் என்பதை ஸ்ரீ லங்காவிலும், இந்திய இந்துத்துவ உத்தரப்பிரதேச முதலமைச்சரிலும், வேறு சில நாடுகளிலும் கவனிக்கிறோம்.

கிறிஸ்தவர்களிலும் சிலர், நியாயப்பிரமாணத்தை (Law) வலுக்கட்டாயமாக மக்கள் பின்பற்றும்படிச் செய்தால் நாட்டில் பாவத்தைக் குறைத்து நல்ல வழிகளில் மக்களை நடக்கச் செய்யலாம் என்று தப்புக்கணக்குப் போடுகின்றனர் (Theonomy). நியாயப்பிரமாணத்தினால் ஆத்மீக விடுதலை கிடைக்காது என்று வேதம் விளக்குகிறது. வேறு சில கிறீஸ்தவர்கள் ‘புரட்சியின்’ மூலம் நாட்டுக்கு நல்வழி ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்ட சீர்திருத்த தலைவர்களை உதாரணங்காட்டி விளக்குகின்றனர். வேதம் அதற்கு இடங்கொடுக்கவில்லை என்பதை சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

பூட்டின், சீ ஜிங்பின் போன்றோர் இனியும் வரத்தான் செய்வார்கள். அத்தகையவர்களால் மானுடம் துன்பத்தை அனுபவிக்கத்தான் செய்யும். இதற்கெல்லாம் முடிவைக் கர்த்தர் மட்டுமே கொண்டுவர முடியும். ரோமின் நீரோவுக்கும், ஹிட்லருக்கும், முசொலீனிக்கும் என்ன நடந்ததோ அதுதான் எல்லா எதேச்சாதிகாரிகளுக்கும் நிகழும். இவர்களின் முடிவு கர்த்தரின் கரத்திலேயே இருக்கிறது. அதற்காகத்தான் இறுதி நியாயத்தீர்ப்பு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் நம் பணி சுவிசேஷத்தை முடிந்தவரை முழுமூச்சோடு பகிர்ந்து, ஆண்டவரின் கட்டளைகளைப் பின்பற்றி நடந்து, ஜெபத்தில் உறுதியாக இருந்து வருவதுதான்.

பூட்டின், சீ ஜிங்பின் போன்ற ஆட்சியாளர்களையும் பயன்படுத்திக் கர்த்தர் தன்னுடைய மீட்பின் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார். அவரறியாததும், அவருடைய திட்டத்தில் அடங்காததும் எதுவுமே இல்லை. இறையாண்மையுள்ள தேவனின் திட்டம் பூரணமாக நிறைவேறும் நாள் வரப்போகிறது. பூட்டினும், சீ ஜிங்பின்னும் கர்த்தருக்குக் கணக்குக்கொடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. முதல் நூற்றாண்டு திருச்சபை இத்தகைய ஆட்சியாளர்களின் கீழ் துன்பத்தின் மத்தியில் சாட்சியுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறது. அதையே நாமும் செய்யவேண்டும். உக்கிரேனில் வாழும் கிறிஸ்தவர்கள் நிச்சயம் வேதத்தைப் படித்தும், ஜெபத்தில் தங்கியிருந்தும் ஆறுதல் அடைவார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றி இயேசு கிறிஸ்துவை இத்துன்பகாலங்களில் தங்களுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்துவார்கள்.

நன்றி : ஆர். பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *