“ஒரு வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, அல்லது ஒரு விபத்தில் அகப்பட நேரிடும்பொழுது, ஒரு பரீட்சைக்கு முகங்கொடுக்க நேரிடும்பொழுது, போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனைக்குள்ளாக்கப்படும் பொழுது, ஒரு தொழிலைத் தேடும்பொழுது, பொருளாதார விலைவாசி உயர்ந்துகொண்டே போகும்பொழுது, காரணமின்றி கைது செய்யப்படும்பொழுது, அல்லது நாம் கடத்தப்படும் பொழுது……“ இவ்வாறான சமயங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆம், நாம் அத்தகைய நிமிடங்களில் செய்வதறியாது திகைத்து விடுகின்றோம். ஆயினும் எந்தவிதமான ஒரு பாதகமான சமயத்திலும்கூட நம்மைக் காப்பாற்றும், வழிநடத்தும் ஒருவர் உண்டு என்பதை நாம் சிந்தித்துள்ளோமா?
எல்லா நேரங்களிலும் நாம் நம்மைக் குறித்து மட்டுமே சிந்திக்கின்றவர்களாக இருக்கின்றோம். துன்பப்படுகின்ற மக்களைக் குறித்தோ, நம்மை பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்டவரைக் குறித்தோ சிந்திப்பதேயில்லை என்பதுதான் எல்லாவற்றையும்விட பரிதாபகரமான ஒரு விஷயம்! சகல சந்தர்ப்ப சமயங்களிலும், நாம் செய்யவேண்டிய காரியமென்ன? தேவனிடம் விசுவாசம் வைப்பதொன்றையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
தேவன் நல்லவராக இருப்பதினாலும், தமது வாக்கின்படி நம்மைப் பாதுகாப்பதினாலும் அவரிடமே நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். சந்தோஷம், மனமகிழ்ச்சி, சமாதானம் போன்றவை தேவனிடமிருந்தே வருவதினால், நாம் செய்யவேண்டிய காரியம் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இவ்வுலகத்தில், பலவிதமான துன்பங்களின் ஊடாக நடக்க நேரிட்டபோதும், தேவன் நம்முடனிருப்பதால், தேவபிள்ளைகளான நாம் கலக்கமடையத் தேவையில்லை. மரணமே நமக்கு நேரிடுமாயினும், நாம் பயப்பட தேவையில்லை.
வாழ்வின் பொருளாதாரத் தேவைகள் நம்மை மிகவும் நெருக்கும்போது நாம் நினைக்க வேண்டிய காரியம் ஏசாயா 59:1ன் படி, “…கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை“ என்பதே. ஆகவே, தேவனில் விசுவாசம் வைத்துள்ள நாம், நமது குடும்பங்களில் ஏற்படும் பொருளாதாரச் சுமைகளை, பாதுகாப்பற்ற நிலைகளை எண்ணிக்கலங்கும் மக்களாயிராமல், தேவனைச் சார்ந்து வாழவும் அவருடைய வசனத்தின்மேல் உறுதியாய் நிலைத்திருக்கவும் வேண்டியது அவசியமாகின்றது. ஆகாயத்துப் பறவைகள், காட்டுப் புஷ்பங்கள், காட்டுப்புல் போன்றவற்றினை பராமரிக்கும் (மத்.6:25-29) தேவனை இனி மேலாகிலும் நாம் நோக்கிப் பார்ப்போமா?
இன்று ஒருசில குடும்பங்கள், போக்குவரத்துச் செலவு, பால், மா, அரிசி, தேங்காய் போன்ற அன்றாட உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வினாலும், யுத்தத்தின் தாக்கங்களினாலும் பாதிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். உலகிலுள்ள யாவற்றையும் பிழைப்பூட்டுகிற பரமபிதா உங்களையும் கவனிக்கிறார் என்பதை இன்று உணர்வீர்களானால் நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். உங்கள் சிந்தனைகளை இந்த உலகத்திற்குரிய பொருட்களின்மீது வைத்து விடாதிருங்கள். இன்று இவை தேவைதான். ஆனால் என்றென்றும் தேவையானதொன்றல்ல. உங்கள் தேவைகளைச் சந்திக்கும் தேவன்மீது எப்பொழுதும் உங்கள் கவனத்தை வைத்திருப்பீர்களாயின், அவர் உங்கள் நல்ல மேய்ப்பனாக இருந்து, அன்றன்றுள்ள ஆகாரத்தை அனுதினமும் தந்து, புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீரண்டை உங்களை வழிநடத்துவார்.
தினம் தினம் கவலைப்படும் மனிதர்களின் மத்தியில் கடைசிவரை நம்மைப் பாதுகாக்கும் சர்வவல்ல தேவனின் கரத்திலே தஞ்சம் புகுந்தவர்களாக வாழ்கின்றோமா? “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது“ (சங்.34:10). என சங்கீதக்காரன் கூறியுள்ளாரே. இயேசு கூறினார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்“ (யோவா.11:25). ஆகவே “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்“ (மத். 10:28).
ஆபகூக் தீர்க்கதரிசி இவ்வாறு அனுபவித்து கூறுகிறார். “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்“ (ஆபகூக் 3:17,18). ஆகவே நமது கையின் பிரயாசம் நமக்கு இல்லாமற்போனாலும்கூட எப்பொழுதும் நாம் கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாயிருக்கப் பழகிக்கொள்வதே சிறப்பான காரியமாக இருக்கின்றது.
நமக்கு தேவனிடத்திலிருந்து உதவி வருவது நிச்சயம். இன்னுமொரு காரியமும் உண்டு, அது நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறோமா இல்லையா என்பதை அறியும்படிக்கே இவைகள் நேரிடலாம் அல்லவா? (உபா.13:3) மாராவின் தண்ணீரண்டையிலே இஸ்ரவேல் மக்கள் முறுமுறுத்தபோதும் தேவன் அந்தத் தண்ணீரை மதுரமாக்கிக் கொடுத்தாரல்லவா? (யாத். 15:23-26).
உங்கள் ஒவ்வொருவருடைய தேவை இன்னது என்பதை சர்வவல்லவரான தேவன் அறிந்தவராகவே இருக்கிறார். இஸ்ரவேல் மக்களின் வனாந்தர பயணத்திலே மன்னா, காடை, தண்ணீர், இறைச்சி என அவர்களுக்குத் தேவையான யாவற்றையும் சந்தித்த தேவன், இன்று உங்களின் தனிப்பட்ட தேவைகளையும் சந்திக்க வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். தேவனிடத்தில் மாத்திரம் உங்கள் எதிர்பார்ப்பு, நம்பிக்கையை வைத்திருக்கும்போது வாழுவதற்கான வழியை அவர் ஏற்படுத்திக் கொடுப்பார். ஏலீமில் இஸ்ரவேல் மக்கள் இளைப்பாறி அங்கு தங்கியது தேவனுடைய இரக்கத்தினால் மாத்திரமே. நமது வாழ்க்கையில் சுமை நம்மை அழுத்துகையில் தேவன் ஒருவரே நமது முழு எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுபவராக இருக்கிறார்.
அன்று யோசேப்போடே சிறைச்சாலைக்குள் கூடவேயிருந்த ஆண்டவர், எல்லாச் சூழ்நிலையிலும் உங்களுடனே கூட இருந்து, கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதுபோல் தமது சிறகுகளினாலே உங்களைப் பாதுகாப்பார். “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலது புறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது“ (சங்.91:4-7). எனவே நீங்கள் பயப்படாமல் நம்பிக்கையோடே வாழுங்கள். தேவன் உங்கள் வழிகளிலெல்லாம் உங்களைக் காப்பாற்றுவார். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் உங்களுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வார். இவையெல்லாவற்றைப் பார்க்கிலும், மாறாத அவருடைய வாக்குத்தத்தமானது, “ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்“ (சங்.91:15) என்பதாகும்.
வழிதெரியாமல், செய்வதறியாமல் திகைத்து சித்தங்கலங்கி நிற்கும் தேவபிள்ளைகளே, பயப்படாதேயுங்கள். “…உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது“ என ஏசா.55:9ல் நமது தேவன் வாக்குப்பண்ணியுள்ளார். தேவனிடமிருந்து மட்டுமே நமக்கு உதவி வரும். “அவன் என்னி டத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.“ (சங்.91:14). இதை வாசித்து, அவரிலே அடைக்கலம் புகுந்தால், உங்கள் வாழ்வை அவரே வெற்றி சிறக்கப்பண்ணுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
“எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.“ (சங்.121:1-2) என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளின்படி நமக்கு எல்லாவிதமான உதவியும் ஒத்தாசையும் நம்மைப் பாதுகாத்து வழிநடத்தி, நம்மைப் போதித்து நல்வழிப்படுத்தும் தேவனிடமிருந்தே வரும். அந்த ஒப்பற்ற கன்மலையை நோக்கிப்பார்க்கும் எவரும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
அருமையானவர்களே, தேவன் உங்களைப் பாதுகாக்க வல்லவர். உங்களது தேவைகளை சந்திக்க வல்லவர். தற்போது உங்களுடைய சூழ்நிலைகளை அவர் நன்கறிந்தவர். அவர் கண்களுக்கு மறைவானது எதுவுமேயில்லை. அவரை நோக்கிப் பார்ப்பீர்களா? எத்தகைய சூழ்நிலையிலும், நீங்கள் பரீட்சைக்கு முகங்கொடுக்கும்போதும், சோதனையிடப்படும்போதும், படுத்திருக்கும்போதும், எழுந்திருக்கும்போதும், நடக்கும்போதும் தேவனை நோக்கிப் பார்ப்பீர்களா?
அவரை மட்டும் நம்பி வாழ்வீர்களானால், எத்தகைய பாதகமான சூழ்நிலையிலும் கர்த்தர்தாமே உங்களைப் பாதுகாப்பார்!