வெள்ளை வெளீரென்று இருக்கும் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும், அந்தப் பால் முழுவதுமே விஷமாகிவிடும். அல்லது ஒரு வர்ணக்கரைசலில் ஒரு துளியைப் பாலுக்குள்ளே விட்டால் முழுப் பாலின் நிறமுமே மாறிவிடும். அன்று, ரோமர் ஆட்சியில் சிலுவையென்பது ஒரு சாபமாக, அல்லது ஒரு அவமானச் சின்னமாகவே கருதப்பட்டது.

கொடிய தண்டனைக்குப் பாத்திரவான்களான, கள்வரையும், கொலைக்காரரையும்தான் பொதுவாகச் சிலுவையில் அறைந்து கொலைசெய்வார்கள். ஆனால், எந்தக் குற்றமும் செய்யாத இயேசு ஏன் அறையப்பட்டார்? ஆம், நாம் அறையப்பட வேண்டிய இடத்தில், நமது பாவங்களைத் தம்மில் சுமந்து, இந்த இழிவான சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டு தமது ஜீவனை விட்டார் இயேசு.

அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அவரது வலது பக்கத்தில் ஒரு கள்வனும் இடதுபக்கத்தில் ஒரு கள்வனுமாக இரண்டு கள்வர்கள் மத்தியில் தூய்மையானவராகத் தொங்கினார் இயேசு; ஆம், கள்ளத்தனம் நிறைந்த நம்மை மீட்பதற்காகவே அவர் இப்படியானார்.

அவர் பாவ சிலுவையில் சிந்திய இரத்தம் இன்று நம்மைப் பரிசுத்தமாக்கியிருக்கிறது. பாவத்தின் தண்டனையான அந்தச் சாப சிலுவை, இயேசுவின் மரணத்தினால் புனிதமானதோ! இன்று நாம் சிலுவையை மேன்மையான ஒன்றாக, புனித சின்னமாகக் கருதுகிறோம் என்றால் அது இயேசுவாலேயே ஆனது. அவரின்றி அதற்கேது மதிப்பு!

எம்மைப் பரிசுத்தராக்க, பரிசுத்தராகிய தேவன் பாவமாக்கப்பட்டார். இப்படியிருக்க இன்னமும் நாம் பாவத்தில் ஜீவித்து அவருடைய பலியைப் பரிகசிக்கலாமா? மனந்திரும்புவோம்.

எம்மை ஜீவபலியாக ஒப்புவித்து, எமக்காகச் சிலுவை சுமந்தவருக்காக நமது சிலுவையைச் சுமப்போம்.

‘ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” மத்தேயு 16:24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *