⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

ஒரு குடும்பத்தினர் தங்கள் வேலையினிமித்தம் புதிதாக ஒரு ஊருக்கு மாறி சென்றிருந்தார்கள். அங்கு வாடகைக்கு ஒரு வீடு தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு பெரிய சாக்கடைக்கு அருகில் உள்ள வீடு மட்டுமே கிடைத்தது. பயங்கர துர்நாற்றம். ஆனால் வேறு வழியில்லை. வேறு வீடு கிடைக்கும் வரைக்கும் இங்கு இருப்போம் என்று அந்த வீட்டிற்கு குடியேறினார்கள். ஆனால் துர்நாற்றத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை.

அந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களை பார்த்து எப்படித்தான் இப்படி துர்நாற்றத்திற்குள் வசிக்கிறார்களோ? என்று ஆச்சரியப்பட்டார்கள். வீட்டிற்குள் சென்ற உடனே, வெளியிலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக, வீட்டின் ஜன்னல்களை இறுக பூட்டிக் கொண்டார்கள். துர்நாற்றம் காரணமாக, வீட்டார் யாரும் வேலை காரணங்களை தவிர சும்மா வீட்டிற்கு வெளியே வருவதேயில்லை.

சில நாட்கள் கடந்தது. பயங்கர வெயில் காலம். வேர்த்து வடிந்தது. எனவே மாலை நேரங்களில் காற்று வருவதற்காக ஒரு ஜன்னலை திறந்து கொஞ்சம் திறந்து வைத்தார்கள். இன்னும் சில நாள் கழித்து மற்றொரு ஜன்னலையும் திறந்து வைத்தார்கள். பிறகு கதவு எல்லாவற்றையும் நன்றாக திறந்து வைத்து, ஒரு பூஞ்சோலைக்கு அருகில் குடியிருப்பதை போல் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்கள். வேறு வீடு பார்க்கும் எண்ணத்தையும் கைவிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் வீட்டின் மாடியில் நின்று, என்ன ஒரு குளுமையான காற்று என்று அந்த துர்நாற்றமான காற்றையே ரசிக்க ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் தாங்க முடியாத துர்நாற்றமாய் தோன்றியது, இப்போது அவர்களுக்கு பழகிப்போனது, பிடித்தும் போனது.

இதுபோன்று தான் பாவமும் நம்முடைய வாழ்க்கையில் நுழைகின்றது. முதலில் நமக்கு அருவருப்பாய் தோன்றும் பாவ காரியங்கள் நாளடைவில் கொஞ்ச கொஞ்சமாய் நாம் இடம் கொடுக்க கொடுக்க அவைகள் நமக்குள்ளே ஆழமாய் வேரூண்றி, மாற்றமுடியாத பழக்கமாகவே மாறிப் போகின்றது.

அப்போஸ்தலனாகிய பவுல் மாய்மாலம் பண்ணும் கள்ள உபதேசக்காரர்களை மனச்சாட்சியிலே சூடுண்ட பொய்யர் என்று சொல்வதை பார்க்கிறோம். (1 தீமோ 4:1). கராத்தே பயிற்சி செய்பவர்கள் தங்கள் கைகளை சூடு மணலில் பொதித்து பொதித்து எடுப்பார்கள். சூடு பட்டு பட்டு நாளடைவில் அந்த கை, எந்த உணர்ச்சியும் இல்லாதபடி இறுகி, கடினமாய் காய்ப்பு காய்த்து விடும். எத்தனை அடிபட்டாலும் அந்த பகுதி வலிக்கவே செய்யாது.

அதே போல தான் சிலர் தங்கள் மனச்சாட்சியை கடினமாக்கி உணர்ச்சியில்லாமல் செய்விடுகிறார்கள். ஒவ்வொரு பாவம் செய்யும் போதும், பரவாயில்லை ஒரு தடவைதானே என்று ஏதாவது சாக்கு சொல்லி, தங்கள் மனச்சாட்சியை மழுக்கி மழுக்கி, பின்னர் மனச்சாட்சி வேலையே செய்யாத நிலைக்கு ஆளாகும் நிலைதான் இது.

முதலில் ஒரு நாள் ஜெபிக்காவிட்டாலும் மனச்சாட்சி படபடவென அடித்துக்கொள்ளும். ஒரு நாள் சபை ஆராதனையை மிஸ் பண்ணினாலும் சமாதானமே இருக்காது. அறியாமல் செய்கின்ற தவறுகளுக்கு கூட ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்போம். சில நேரம் நாம் தவறி செய்துவிடுகின்ற பாவங்களுக்காக மனம் வருந்துவோம். இனி செய்யக்கூடாது என உறுதியான தீர்மானம் எடுப்போம்.

ஆனால் நாளடைவில் திரும்ப திரும்ப செய்த தவறையே செய்து கொண்டே இருக்கும் போது, மனச்சாட்சி மழுங்கி, மரத்துப் போய், நாம் செய்வது பாவம் என்ற உணர்ச்சியே நம்மிடம் இல்லாமல் போய்விடும். எப்படி துர்நாற்றத்தை வெறுத்து ஓடினவர்கள், பின்னர் அதையே ரசிக்க ஆரம்பித்தார்களோ, அப்படியே பாவத்தை விரும்பி செய்கின்ற நிலைக்கு ஆளாவோம்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் எந்த பாவத்தில் பழகிப் போய் காணப்படுகிறீர்கள்? பவுல் அப்போஸ்தலன் விசுவாசத்தின் இரகசியத்தை சுத்த மனச்சாட்சியிலே காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். (1 தீமோ 3:9).

நீங்கள் ஜெபிக்காத போது உங்கள் மனம் அடித்துக் கொள்கிறதா? நீங்கள் வேதம் வாசிக்காமல், தேவ சத்தம் கேட்காமல் மற்ற வேலைகளை பார்க்கும் போது உங்களுக்குள்ளே மனச்சாட்சி குத்துகிறதா? அசுத்தமான காரியங்களை பார்க்கும் போதும், கேட்கும் போதும் பாவ உணர்வு உண்டாகின்றதா? மற்றவர்களுக்கு எதிராக தீய காரியங்களை செய்யும் போது தவறு செய்கின்றோம் என்ற எண்ணம் தோன்றுகிறதா?

இப்படி எந்த உணர்ச்சியும் இல்லாமல் நீங்கள் பாவத்தை தண்ணீராய் பருகுகிறவர்களாய் இருந்தால், நீங்கள் ஆவிக்குரிய ஐசியூவில் (தீவிர சிகிச்சை பிரிவில்) இருக்கிறீர்களென்று அர்த்தம். கிருபையில் வாழ்கிறோம், Saint Mentality என்று சிலர் இந்த உணர்வில்லாத நிலையையும் நியாயப்படுத்துவார்கள். மிகத்தவறு. பாவம் செய்யும் போது உணர்வு வரவில்லையென்றால் மனம்திரும்ப முடியாது. பாவத்தின் சம்பளம் மரணம்.

அழிவு உங்களுக்கு நேரிடும் முன், உள்ளம் உடைந்து இன்றே மனந்திரும்புங்கள். விட வேண்டிய பாவப்பழக்கவழக்கங்களை இன்றே விட்டு விடுங்கள். சிறு அசுத்தம் நம்மை ஒட்டினாலும், அதை அருவருத்து, அதை விட்டு ஓடக்கூடிய சுத்த மனச்சாட்சியை கர்த்தரிடம் கேளுங்கள். ஆவியானவர் உங்கள் கடினப்பட்ட உங்கள் மனதை உணர்வுள்ளதாக்குவாராக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *