“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்” (சங். 127:5)
வாலிப வயதென்பது அனுபவிக்கத் துடிக்கும் வயது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தடவையே இவ்வாழ்க்கைக் கிடைக்கின்றது. ஒரு பூ வாடி விடுவதைப் போல சீக்கிரத்தில் அவர்களின் வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது. வாலிபமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். ஒருமுறைதான் வருகின்றது. வெகுசீக்கிரத்தில் வாடி விடுகிறது.
ஒரேயொரு தடவைதான் வாழப்போகிறோம். ஒரேயொரு தடவைதான் திறமையும் வலிமையும் மன உறுதியும் கொண்ட வாலிபப் பருவம் பொங்கி வழியப் போகின்றது. அந்த வயதில் நமது சிந்தனைகள், திட்டங்கள், செயற்பாடுகள் யாவற்றையும் சீரியவழியில் சீராக அமைத்துக் கொள்ளாவிட்டால் நமது வாழ்க்கைதனை நாமே அழித்துக் கொண்டவர்களாவோம். நிச்சயமாக, நாம் வாழ்வது இந்த ஒரே ஒருமுறைதான். அதில் சொற்ப நிமிடமே வாலிப பருவம். இதனை இன்று வீணாக்கி விடாதிருங்கள்.
‘பொதுவாக வாலிப காலத்தில் தன்னை சிருஷ்டித்த தேவனை மறப்பவன் தன்னையே மறந்து விடுகிறான். தன்னை மறப்பவன் தன் வாழ்க்கையே மறந்துவிடுகின்றான்’ என்பதாக ஒரு புத்தகத்தில் வாசித்தேன். வேதாகமத்திலே நாம் அநேக வாலிபர்களைக் குறித்து வாசிக்கின்றோம். இதில், தானியேல், யோசேப்பு இருவரின் வாழ்வும் வித்தியாசமானது.
பாலிய இச்சைக்கு விலகியோடியதால் சிறைத்தண்டனை அனுபவித்த யோசேப்பின் வாழ்க்கையில் அவனது இளமை பருவம் சிறைச்சாலைக்குள்ளும் தனிமையிலும் கடந்துபோனது. ஆனால் அவனது பின் நிலைமையை தேவன் ஆசீர்வதித்துக் கொடுத்தார். யோசேப்பு சிறுவயதில் தன் பெற்றோரினால் போதிக்கப்பட்டிருந்தமையினால் அவன் எகிப்தில் தேவனுக்கு பயந்து வாழ அவனால் முடிந்தது. அவனைப்போலவே இளம் வயதிலேயே தேவனுடைய திவ்ய கரத்தில் தன்னையே ஒப்புக்கொடுத்த தானியேல் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தான். அதற்கு காரணம் அவனது யூத பழக்கவழக்கங்களும் தேவன் மீதான நம்பிக்கையும்தான். இலவசமாக கிடைத்த ராஜ போஜனத்தைவிட மரக்கறி உணவே மேலானது என உணர்ந்து செயல்பட்ட அவனை தேவன் ஆசீர்வதித்தார்.
அப்படியிருக்க நாம் என்ன செய்கின்றோம்? ஒரேதரம் வந்து போகின்ற இந்த வாழ்வு காலத்தை ஏன் நாம் தேவனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது? நாம் நம்மை அவருக்கு ஒப்புக் கொடுத்தால் அவர் நம்மை உயர்ந்த கன்மலை மீது நிறுத்துவது உறுதியல்லவா?
நம்மை படைத்தவர் நம் வாழ்க்கையில் பல அருமையான பருவங்களை நமக்கு கொடுத்திருக்கிறார். அந்த பருவங்களில் நாம் செய்கிற காரியங்கள், எடுக்கின்ற தீர்மானங்கள் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறதாயிருக்கிறது. ஆகவேதான் ‘வாலிபர்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்’ என சாலொமோன் தனது சங்கீதத்தில் எழுதுகிறார்.
இன்றைய சமுதாயத்தில் அரசியல்வாதிகளை, சினிமா நடிகர்களை, தீவிரவாதிகளைச் சுற்றிலும் அல்லது வேறெந்த தலைவர்களைச் சுற்றிலும் ஒரு வாலிபவட்டம் இருப்பதை நாம் காணலாம். அவர்கள் வாலிபர்களைத் தகாத விதமாய் நடத்திச் செல்கிறார்கள். கொள்ளை, கொலை, திருட்டு, போதைப்பொருட்கள், பாலியல் போன்ற பாவங்களுக்கு அவர்களை உட்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். தேவனை அறியாத முரடர்கள் பலர் வாலிபர்களின் இருதயங்களை நாசமாக்கி அதை சீரழித்து வருகின்றார்கள். வளரும் இளம் மொட்டுக்கள் தேவனை அறியாதபடி கெடுத்து அவர்களின் வாழ்வை நாசமாக்கிப் போடுபவர்கள் அநேகர்.
ஒரு ஹிட்லரினால் பல வாலிபர்கள் தமது உயிரை ஜெர்மன் தேசத்திற்காக கொடுத்தார்கள். அவர்களில் பலர் தமது வாழ்வை அழித்து உயிரைத் தியாகம் செய்தார்கள். பயன் என்ன? மரிப்பதுதானா அவர்கள் தமது தேசத்திற்காக செய்யும் நன்மை? தேவனை தேடாதபடி அவர்கள் இருதயங்களை அந்த சர்வாதிகாரி திருடிவிட்டான். உலகை நாசம் போக்குகிறவர்கள் அப்படி செய்வார்களாயின் தேவசாயலை பிரதிபலிக்கிற நாம் நம்முடைய வாலிபர்களுக்காக என்ன செய்கின்றோம்? தேவபிள்ளைகள் வாழ்ந்து சுகித்திருப்பதையே தேவன் விரும்புகின்றார் (3யோவான் 2).
வாலிபர்கள் திருச்சபையைவிட்டு வெளியே சென்றுவிடாதபடி அவர்களைப் போதித்து நல்வழிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு திருச்சபையினுடைய கடமையாகும். அவர்களுக்கு வேண்டிய உபதேசங்களைக் கொடுத்து அவர்களை சிறப்பாக வழிநடத்த வேண்டியது ஒவ்வொரு குடும்ப தலைவர்களுடைய கடமையாகும். பிரச்சனைகளைக் கையாளவும், சமுதாய பிரச்சனைகளை புரிந்துகொள்ளவும், சபை, குடும்பம், சமுதாயம் போன்றவற்றின் மத்தியில் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழும்படி தொடர்ந்து படிப்படியாக அவர்களை வழிநடத்துவதும் முக்கியமாகும். வாலிபர்கள் தேவனைவிட்டு பின்வாங்கி விடாதபடி அவர்களைப் பராமரிப்பது மிகவும் அவசியம். அவர்களைக் குற்றம் கண்டுபிடித்து ஒதுக்கி நியாயந்தீர்ப்பவர்களாயிராமல் அவர்களை நல்வழியில் நடத்தும் தலைவர்கள் சபையில் உருவாக வேண்டும். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அந்தப் பலவான் யார் என்பதே, நாம் சமுதாயத்தில் கேட்கவேண்டிய கேள்வியாக இருக்கின்றது (சங்கீதம் 127:5).
வேதாகம வீரர்களான யோசேப்புக்கும் தானியேல் மற்றும் பல வாலிபர்களுக்கும் உண்மையில் அருகில் இருந்து வழிநடத்த யாரும் இருக்கவில்லை. யோசேப்பின் சிறுபிராய குடும்ப அனுபவங்களே அவனை நன்கு பக்குவப்படுத்தி இருந்தது. தானியேலை நல் வழிபடுத்த அவனுடைய சிறந்த தோழர்கள் உடனிருந்தார்கள். அவர்களுடன் அவன் தேவனைத் தேடுவதிலும் தேவனுக்குரிய காரியங்களில் பக்திவைராக்கியம் காட்டுவதிலும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தான். தீமோத்தேயுவை வழிநடத்த பவுல் உடனிருந்தார். தாவீதை வழிநடத்த சாமுவேல் இருந்தார். இன்னும் சிலருக்கு அருகில் இருந்து உதவிசெய்ய யாரும் இல்லாதிருந்தபோதிலும் தேவன் அவர்களுடன்கூட இருந்தார். அதற்குக் காரணம் ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுக்கு சொந்தமானவைகள். அந்த ஆத்துமாக்கள் அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல (நீதி 19:2).
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை வாழ்வில் ஏற்றுக்கொண்ட வாலிபர்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய காரியம் என்ன தெரியுமா? தேவபயத்துடன் வாழ்வதாகும். எந்நிலைமையிலும் பாவம் செய்யக் கூடும் என்ற எச்சரிக்கை அவர்களுக்குள் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் வாழும் இந்த உலகம் அப்படிப்பட்டது. அது பாவத்தில் நம்மை கறைப்படுத்தக்கூடியது. இதனை வாலிபர்களுக்கு தெரிவிக்கவேண்டிய தலைவர்கள் இன்று என்ன செய்கின்றார்கள்?
தேவனை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் விசேஷமாக வாலிபர்களுக்கு சோதனைகள் வரத்தான் போகின்றது. ஒருவேளை திருமண விஷயங்களில் அவர்கள் குழம்பிப்போவதுண்டு. எதிர்பாலார் பற்றிய எண்ணங்களில் சிக்கிக்கொள்வதுண்டு. அப்பொழுது அவர்களுக்கு தேவை பாதுகாப்பு மிக்க அறிவுரைகள் மட்டுமல்ல, நல்லதொரு சூழலும்தான். அதனை தேவபிள்ளைகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். இந்த சமுதாயம் அவர்களை நல்வழிப்படுத்தாது. நாம்தான் அவர்களுக்கு மதிலாயிருக்க வேண்டும். அவர்களை எச்சரிக்கவேண்டும். கடிந்துகொள்ளவேண்டும். வேதவார்த்தைகளை அவர்களுக்குள் புகுத்தவேண்டும். ஆத்துமாக்களை இரட்சிக்கவல்ல திரு வசனத்தை நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் (யாக்.1:21). எப்பொழுதும் அவர்கள் கர்த்தரின் மீது சார்ந்திருக்க பழக்குவிக்கவேண்டும். அப்பொழுது தீமையானவற்றை வெறுத்து நன்மையான காரியங்களை அவர்கள் செய்வார்கள்.
அருமையான வாலிப சகோதரனே சகோதரியே, நமது வாழ்க்கை ஒரே ஒரு வாழ்க்கை. நம்முடைய வாலிபம் ஒரே ஒரு வாலிப பருவம். இதனை இடித்துப் போடுகிறாயா? கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங். 127:1). எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய தேவ ஊழியர்களாகவும் தேவனுடைய இரத்தச் சாட்சிகளாகவும் மாற நாம் அவர்களுக்கு உதவிசெய்வது அத்தியாவசியம்.
இன்றும்கூட தமது வாழ்வை தேவனுக்கென்று அர்ப்பணித்து ஜீவிக்கின்ற வாலிபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காக தேவனை நாம் துதிப்பதோடு நின்று விடுகின்றோமா? அல்லது அவர்கள் வழிவிலகிப் போய்விடாதபடி அவர்களை தேவனுடைய நல்ல போர்ச்சேவகர்களாக மாற்றுகின்றோமா? தேவனுடைய கையிலுள்ள அம்பாக அவர்களை எய்கின்றோமா? அவர்களை தேவன் கைகளில் ஒப்புக்கொடுக்கிறோமா? அல்லது நமது கைகளில் நமது ஆதாயத்திற்காக வைத்திருக்கிறோமா என்பதும் முக்கியமானது.
இன்று பல தேவ ஊழியர்கள் சீர்கெட்ட வாலிபர்களை அசட்டை பண்ணுவதும் தமது பார்வைக்கு நல்ல வாலிபர்களைமட்டும் தெரிந்தெடுத்து அவர்களை தமது சீஷர்களாக்குவதும் நல்லவர்களாக்குவதும் சரிதானா? சிலர் பணக்கார வாலிபர்களையே தமது சீஷர்களாக்கிக் கொள்கிறார்கள். சிலர் நல்ல வாலிபர்களையும் திறமைமிக்க வாலிபர்களையும் தமது வலையில் சிக்கவைத்துக் கொள்கிறார்கள்? ஆனால் யாருடைய உதவியும் அற்றவர்களுக்கு, யாருடைய அறிவுரையும் கிடைக்காத வாலிபர்களுக்கு, உதவி செய்யக்கூடிய தேவ மனிதர்கள் யார் யார்? புத்தியீன வாலிபர்களைக் கண்டுபிடித்து அவர்களையும் பயிற்றுவிப்போர் யார்? அவர்களுக்கே நமது உதவி தேவை. ‘மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகராஜ்யத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்குமே’ (லூக். 15:7).
மனுஷகுமாரனோ இழந்துபோனவைகளைத் தேடி அவர்களை இரட்சிக்கும்படியாகவே இவ்வுலகத்திற்கு வந்தார். நாம் என்ன செய்கின்றோம்? நம்முடைய சபை வாலிபர்கள் மட்டுமா வாலிபர்கள்? நமது சபையிலுள்ள வாலிபர்கள் மட்டுமா அழிகிறார்கள்? பலவான் கையில் சிக்கப்பட்டுள்ள ஏனைய வாலிபர்களையும் சத்துருவின் கையிலிருந்து மீட்க நாம் என்ன செய்கிறோம்? சத்துரு உண்மையில் பலவான் அல்ல. அவன் ஏமாற்றுகிறவன். அவன் பலவான் போல நடிக்கிறவன். உண்மையில் யார் பலவான்? தேவனுடைய கரத்திலிருந்து நம்முடைய அருமையான தேவபிள்ளைகளை சத்துரு திருட, திருச்சபையாராகிய நாமே காரணமாக இராதிருப்போமாக.
அருமையான வாலிப வயதிலே, நாம் நம்மை சிருஷ்டித்த சிருஷ்டிகரை நினைக்க வேண்டும். வேதம் அதைத்தான் சொல்கிறது. நம்மைப் படைத்த அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது அதைத்தான். 1யோவா.2:13-17இல் யோவான் எழுதுகிறார்:
“வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்”.
நமது திருச்சபையையும் வாலிபர்களையும் நாம் தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போம். கர்த்தரை அவர்களுக்கு அதிகாரியாக்குவோம். நாம் அல்ல. ஆனாலும், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு நமது கையில்தான் உண்டு. ஒவ்வொரு சபை தலைவர்களின் கையிலும் குடும்ப தலைவனின் கையிலும் இது உள்ளது. அவர்கள் தம்முடைய வேலையை செம்மையாக செய்தால் சத்துருவானவன் அருமையான வாலிபர்களின் உயிரை நாசமாக்க முடியாதே.
இன்று சில சபை தலைவர்கள் தம்முடைய சுயநலத்துக்காக வாலிபர்களை சபையில் பயன்படுத்துகின்றார்கள். தேவ நாமத்திற்கு மகிமை வரத்தக்கதாக பயன்படுத்துவதே மிக்க நல்லது. அதில் எவ்விதமான தவறுமில்லை. நாம் செய்கிற காரியம் என்ன? இவர்கள் மட்டுமா நம்முடைய பிள்ளைகள்? நமது பிள்ளைகள்மட்டும் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் போதுமா? மற்ற வாலிபர்களை நாம் எப்படிச் சந்திக்கப்போகிறோம்? இன்று பிற வாலிபர்கள் நம்முடைய வாலிபர்களை கெடுத்துவிடுவார்கள் என்று அவர்களை ஒதுக்கி நமது வாலிபர்களை மாத்திரம் திருச்சபையில் உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறோமே ஏன்? அது சரிதானா? தேவனை அறியாத பிற வாலிபர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் யார்? அவர்களையும் கர்த்தர் தேடுகிறார். அவர்களுக்காகவும் இயேசு இரத்தம் சிந்தியுள்ளாரே.
கர்த்தருடைய பாதுகாப்பும் அவருடைய உதவியும் இல்லாது நாம் வாலிபர்களை பாதுகாக்க முடியாது என்பதும் உண்மைதான். நாமல்ல, கர்த்தரை வாலிபர்களின் கதாநாயகனாக நாம் மாற்றுவோம். அப்பொழுது எந்த விதமான கள்ளர்களும் நமது வாலிபர்களை திருச்சபையிலிருந்தும் தேவகரத்திலிருந்தும் திருடிக்கொள்ள முடியாது. நம்முடைய சபை, சங்கங்களில் வாலிபர்களுக்குரிய, சிறுவர்களுக்குரிய, பெரியோர்களுக்குரிய, தாய்மாருக்குரிய உரிய கனத்தை இடத்தை கொடுப்போம். தேவனுக்காக அவர்களைப் பாதுகாப்போம். அப்பொழுதுதான் மெய்யான சந்தோஷம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் சமுதாயத்திற்கும் நமது நாட்டுக்கும் கிடைக்கும்.
“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி”. “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்” (பிர. 11:9, 12:14).