Bro.இ.வஷ்னி ஏர்னஸ்ட்
சங்கீதம் 103:1-5
பிரசங்கி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறும் வேதாகமத்திலிருந்து அரிய பொக்கிஷங்களை தமது சபையிலே பிரசங்கித்து வருவாராம். ஆனால், சபையிலுள்ள மக்களோ, வசனத்தைக் கேட்காதவர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் இருப்பதைக் கண்ட அந்தப் பிரசங்கியார் மிகவும் கோபமடைந்திருந்தார். அடுத்து வந்த ஞாயிற்றுகிழமை, தேவ செய்தியை கொடுப்பதற்காக பிரசங்க பீடத்தில் ஏறிய பிர சங்கியார் சங்கீதம் 103:1,2 ஆகிய வசனங்களை பிரசங்க பீடத்தில் கூறி, இத்துடன் இன்று ஆராதனை நிறைவடைகின்றது என ஆராதனையை நிறைவு செய்தார். வந்திருந்த சபையாருக்கு அன்றுதான் கலக்கம் ஏற்பட்டது. இன்று தமக்குரிய ஆவிக்குரிய உணவு கிடைக்காததை உணர்ந்தனர். பிரசங்கியார் தாம் செய்ததை சபையார் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பிரசங்கம் நிறைவடைந்தபின்பு இந்த வசனத்தைக் கூறி நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டாராம்.
அ. ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி
தேவ வார்த்தை கூறுகின்றது: “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” (சங்.103:1,2). இங்கே நாம் கவனிக்கவேண்டிய காரியமானது, இதைப் பாடுகின்ற சங்கீதக்காரன் பக்கத்திலுள்ள நபர்களைக் குறித்தல்ல. தனக்கு முன்னால் இருப்பவனைக் குறித்தும் அல்ல, தனது பிள்ளை அல்லது மனைவியைக் குறித்தும் அல்ல, அவன் தனது ஆத்துமாவைப் பார்த்து, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி” என்று கூறகின்றார். இதனை இருதடவை அவர் கூறுகிறார். இதிலிருந்து இந்த வசனத்தின் முக்கியத்துவம் புலப்படுகின்றதல்லவா!
ஆம், நாம் ஆண்டவரை ஸ்தோத்திரிக்க வேண்டியவர்கள். எல்லா நேரத்திலும், எல்லா வேளைகளிலும் கர்த்தரை நாம் ஸ்தோத்திரிக்க வேண்டிய மக்களாக இருக்கிறோம். நமக்கு ஆவி, ஆத்துமா, சரீரத்தை தந்த தேவனை நாம் ஸ்தோத்திரிக்க மறக்கலாகாது. ஏனெனில், அவரை நாம் துதிக்கும்படியாகவே அவர் நமக்கு ஆவியையும் ஆத்துமாவையும் தந்திருக்கின்றார்.
ஆ. என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி:
கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்திரிக்க வேண்டிய நாம் அதனை நமது முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும், முழு உள்ளத்தோடும் ஸ்தோத்திரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்று சபைகளில் அநேகர் வெறும் உதடுகளினால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகின்றார்கள். அது நல்லதல்ல. கர்த்தர் அதில் பிரியமாய் இருப்பதில்லை. முழு உள்ளத்துடன் அவரை நாம் ஆராதிக்கவேண்டும். அதனால்தான் அவர் “என் முழு உள்ளமே” என தன் இருதயத்தைப் பார்த்து கூறுகிறார்.
நீங்கள் யாரிடம் அதிக அன்பாய் இருக்கின்றீர்களோ, அவர்களிடம் உங்கள் இருதயம் இருக்கும். அல்லது எந்தப் பொருள்மீது நீங்கள் ஆசையோடு இருக்கின்றீர்களோ, அங்கே உங்கள் இருதயம் இருக்கும்.
இங்கே, சங்கீதக்காரன் தன் இருதயத்தைப் பார்த்து, “என் முழு உள்ளமே” நீ கர்த்தரை மாத்திரம் ஸ்தோத்திரிக்க வேண்டுமெனக் கூறுகின்றார். அதுமாத்திரமல்ல, அவரது பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி எனவும் அவர் தன் இருதயத்தைப் பார்த்து, தன் ஆத்துமாவிடம் கூறுகின்றார். நாம் அவரது பரிசுத்த நாமத்தினை பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிக்கவே அழைக்கப்பட்டிருக்கின்றோம். அவரது நாமம் பரிசுத்தம்! அவர் பரிசுத்தர்!! அவரை வணங்குகின்ற நாமும் அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இ. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே:
“அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என சங்கீதக்காரன் தன் ஆத்துமாவைப் பார்த்து கூறுகின்றான். இன்று ஏதேனும் ஒரு பண்டிகை வந்தால், சிறுவர்கள் தங்கள் பெற்றோர் வாங்கித்தந்த அல்லது வீட்டிலே செய்த பலகாரங்களைக் குறித்தே பெருமை பேசுவார்கள். இங்கே தாவீது தன் ஆத்துமாவிடம் பலகாரங்களைப் பற்றி அல்ல. தேவன் செய்த உபகாரங்களை நினைவுகூரும்படி கூறுகின்றான். அப்படியானால், அவர் செய்த உபகாரம் என்னவென்பதை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். உபகாரம் என்பது கர்த்தர் நமக்கு செய்த கனிவான செயல்களைக் குறிக்கிறது. அவர் அருளிய நன்மைகளைக் குறிக்கிறது; அவற்றை நாம் மறக்கக் கூடாது.
நாம் பிறந்ததுமுதல் இதுவரை நம் வாழ்நாளில் தேவன் நமக்கு செய்த நன்மைகளை, சாட்சிகளை நாம் நினைவுகூர வேண்டியவர்களாக இருக்கிறோம். மற்றவர்கள் நமக்கு செய்த நன்மை, தீமைகளை நினைவில் வைத்திருக்கின்ற நாம், நமக்கு நன்மையையே செய்துவருகின்ற கர்த்தருடைய ஆசீர்வாதங்களை ஒருபோதும் மறக்கலாகாது.