கோவிட் 19 என்பது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ கோபாக்கினை அல்ல, ஆனால் அது இயேசுவின் வருகைக்கு முன்பான ஒரு அடையாளம்.

கோவிட் 19 ஒரு தொற்றுநோய். அது முழு உலகத்தையும் தற்போது பாதித்துள்ளது. எனினும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படும்போது அந்த தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும். அதேநேரம், கோவிட் 19 ஒரு உலகளாவிய தொற்றுநோயாக இருந்தாலும் இது தேவ கோபாக்கினை அல்ல. காரணம், தேவ கோபாக்கினையானது சபை உலகத்தில் இருக்குவரை வரமுடியாது. ஏனெனில் தேவன் சபைக்கு தமது வரங்களையும் தமது அதிகாரத்தையும் கொடுத்திருக்கின்றார். எனினும் உலகத்தில் பல தொற்றுநோய்கள் வரமுடியும். அவை ஏற்கனவே மனிதர்கள் பலருக்கு மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை சாத்தானின் அடையாளங்களாகவோ சாத்தானுடனோ தொடர்புபடுத்தி பார்க்கப்பட கூடாது. தொற்றுநோயானது மனிதருக்கு அழிவைத் தந்தாலும், அவற்றை தேவனுடைய கோபாக்கினையாகவும் கருதமுடியாது. இது தேவனுடைய தண்டனை என்றோ கோபாக்கினை என்றோ கருத கூடாது. ஆகவே இந்தத் தொற்றுநோயானது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான ஒரு அடையாளமாகவே பார்க்கப்பட வேண்டும்.

தொற்றுநோயின் பங்கு:

உலகத்தில் பல காலகட்டத்தில் பலவிதமான தொற்றுநோய்கள் வந்ததுண்டு. மலெரியா, சின்னம்மை, சிக்கன்குனியா, பன்றிகாய்ச்சல், மஞ்சள்காய்ச்சல் என இன்னும் பலவிதமான நோய்களினால் பல்லாயிரக்கணக்கானோர் மரித்ததுண்டு. ஆயினும் வெளிப்படுத்தல் புத்தகத்தில் பலவிதமான உபத்திரவங்களானது அந்திகிறிஸ்துவின் காலத்திலேயே வர இருப்பதால், தற்போது ஏற்பட்ட தொற்று நோயானது திருச்சபை காலத்தில் ஏற்பட்டுள்ளதால், இதனை நாம் ஒரு எச்சாpப்பாகவே கருதவேண்டும். இயேசு மீண்டும் வருவதற்காக திருச்சபை ஆயத்தப்படவேண்டும். இதற்கான ஒரு அடையாளமாகவே தொற்றுநோய் காணப்படுகின்றது. இன்று தொற்றுநோய் முழு உலகத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.

திருச்சபையின் பங்கு:

இயேசு கிறிஸ்து திருச்சபை மக்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறவராக இருக்கின்றார். ஆகவே திருச்சபையை தொற்றுநோய் அழித்துவிட முடியாது. கோவிட் 19 நோயானது முழு உலகிற்குமான நோயாகும். அது திருச்சபைக்கு மட்டும் எதிரான நோய் அல்ல. அது முடிவுகாலத்தில் வரப்போகின்ற தேவ தண்டனையல்ல. இன்று சபையில் இருப்பவர்கள் கோவிட் தொற்றினால் மரிக்க  நெரிடலாம். மரித்தாலும் சபை இல்லாமல் போகாது. ஏனெனில் திருச்சபையை யாராலும் அழிக்க முடியாது. சாத்தானால் இதுவரை திருச்சபையை அழிக்க முடியவில்லை. பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியவில்லை. சபையை அழிக்கக்கூடிய வல்லமை இன்று எதற்கும் இல்லை. ஏனெனில் திருச்சபையின் தலைவர் இயேசு கிறிஸ்துவே. இன்று சாத்தான் பலவித தாக்குதல்களை மேற்கொண்டு கிறிஸ்தவர்களை அழித்தாலும், சபையை மேற்கொள்ள அவனால் முடியாமலேயே உள்ளது. ஆகவே கோவிட் 19 தொற்றினால், சிறிது காலத்திற்கு ஆலயக் கதவுகள் மூடப்பட்டிருந்தாலும், திருச்சபை அழிந்துவிடவில்லை. ஏனென்றால், திருச்சபையானது இயேசு கிறிஸ்துவின் சரீரமாய் இருக்கின்றது (மத்.16:18). அதேநேரம், உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டென திருச்சபையிடம் இயேசு ஏற்கனவே கூறியுள்ளார். அந்த உபத்திரவம் திருச்சபையை முற்றிலும் அழித்துபோட முடியாது.

தேவ கோபாக்கினையின் பங்கு:

இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் பின்பே தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கள் உலகில் வெளிவரும். அது அந்திகிறிஸ்துவின் நாட்களில் நடைபெறும். உலகத்தில் ஏற்படும் பேரழிவுகள் இந்த கோபாக்கினையின் நியாயத்தீர்ப்புகளாக வெளிப்படுத்தல் கூறுகின்றது. வேதாகமத்தில், கோபாக்கினை என்ற சொல்லானது எப்பொழுதும் பாவிகளின் மீதான தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்பையே  குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோவிட் 19 பாவிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இன்னொரு சத்தியம் என்னவென்றால், இன்று திருச்சபை உலகத்தில் இருப்பதால், தேவ நியாயத்தீர்ப்பு நேரடியாக வராது. உலகத்தில் எத்தகைய அழிவு வந்தாலும் அதை தேவனுடைய தண்டனையாக நினைப்பவர்களே இன்று கோவிட் 19 ஐ தண்டனையாக பார்க்கின்றார்கள். ஆனால், வெளிப்படுத்தல் புத்தகம் கூறுகின்றபடி, நியாயத்தீர்ப்பு கடைசி காலத்தில் நடைபெறும் என்பதால், கோவிட் 19 தேவ கோபாக்கினை என்று கூறமுடியாது. நிச்சயமாக அந்தி கிறிஸ்துவின் நாட்களிலேயே தேவ கோபாக்கினை வெளிப்படும். தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 ஆனது அனைவரையும் அழித்துவிடாது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் மாத்திரமே மரிப்பார்கள். ஆக இது தேவ எச்சரிப்பு என்றே கருதப்பட வேண்டும்.

நற்செய்தியின் பங்கு:

இயேசு ஏற்கனவே கூறியுள்ளபடி, “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) இன்று இப்பணி இன்னமும் முடிவடையவில்லை. சுவிசேஷத்தை கேள்விப்படாத பலர் உள்ளனர். அவர்கள் மத்தியில் நற்செய்தியை அறிவிக்கவேண்டும். தொற்று ஏற்பட்டுள்ள இக்காலத்திலும் நாம் தேவ எச்சரிப்பை கூறி நற்செய்தியை பிறருக்கு கூறவேண்டும். இதற்காகவே நம்மை தேவன் இவ்வுலகில் வைத்து வைத்திருக்கின்றார்.

வருகைக்கான அடையாளம்:

இயேசுவின் இரண்டாவது வருகை நிகழும்போதே திருச்சபை எடுத்துக்கொள்ளப்படும். அதன் பின்பே தேவ கோபாக்கினை வரும். ஆகவே நாம் வாழுகின்ற காலமானது திருச்சபை காலமாக, தேவ இரக்கத்தின் நாட்களாக இருப்பதினால், இயேசு மீண்டும் வரப்போகின்றார் என்ற சத்தியத்தை உலகிற்கு கூறவேண்டும். அவரது வருகை மிகச் சமீபம். புமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் காணக்கூடிய விதத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை காணப்படும். அதன் பிறகு உலகத்தின் தீமைகளுக்கு முடிவு வரும். இதுவரையில் உலகில் ஏற்பட்ட யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்களினால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் இயேசுவின் வருகைக்கான அடையாளங்களாகவே வேதாகமம் கூறுகின்றது. அத்துடன் யுத்தங்கள், பஞ்சங்கள்இ கொள்ளை நோய் போன்றவை எதிர்காலத்தில்இ அந்திகிறிஸ்துவின் காலத்தில் மிகுந்த உபத்திரவங்களாகவே காணப்படும். கொரோனா கிருமிகள் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், இது திருச்சபைக்கான உபத்திரவம் அல்ல. இது முழு உலகிற்குமான பிரச்சனையாக இருப்பதினால், இதை கடைசிக் காலத்திற்கான அடையாளமாகவே, கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளமாகவே நோக்கப்பட வேண்டும்.

கோவிட் 19ன் முடிவு:

உலகில் அநேக நோய்களுக்கான மருந்துகள், மருத்துவர்களினால் காலப்போக்கில் கண்டுபிடிக்கப்படுவதுண்டு. அந்தவகையில், கோவிட் 19 நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். அதுவரை இதன் தாக்கம் உலகில் காணப்படும். தொடர்ந்தும் உலக மக்கள் இந்த தொற்றின் தாக்கத்துடனேயே வாழ நேரிடும். உரிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை உலக மக்கள் யாவருக்கும் போடப்பட்ட பின்பு இந்த நோய் இல்லாமற் போய்விடும். வேறு புதிய நோய்கள் உருவாகும். அவற்றிற்கும் இப்படியே. ஆக, தடுப்பூசிகள் இவ்வுலகத்தில் கண்டுபிடிக்கப்படுவதினால், அவற்றினால் மக்கள் மரணத்திலிருந்து தப்புவிப்பதினால் இதை தேவ கோபாக்கினையாக கருதமுடியாது. எனினும் இவையெல்லாம் இயேசுவின் வருகைக்கான அடையாளங்களாகவே உள்ளன. கொவிட் 19ஐ உலகத்தில் ஏற்படுகின்ற உபத்திரவங்களில் ஒன்றாகவே இதைக் கருத வேண்டும்.

தடுப்பூசியின் பங்கு:

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ கோபாக்கினையாக கொவிட் 19 இல்லாத காரணத்தினால், இன்று கொரோனா தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவை மனிதருக்கு மரணம் ஏற்படுவதை தடுக்கின்றன. இந்த தடுப்பூசிகளை அந்திகிறிஸ்துவோடு தொடர்புபடுத்துவது கிறிஸ்தவர்களின் அறியாமையாகும். தடுப்பூசிகள் தேவன் தந்த வரப்பிசாதங்களாகவே நாம் காணவேண்டும். தேவன் மருந்துகளுக்கூடாகவும் தமது பிள்ளைகளுக்கு சுகத்தை தருகின்றார். தடுப்பூசிகளுக்கூடாக மீண்டும் திருச்சபையின் ஆலய கதவுகள் திறக்கப்படும். மீண்டும் திருச்சபை வழமைக்கு திரும்பினாலும், இயேசு மீண்டும் வரப்போகின்றார் என்ற சத்தியத்தை உரத்துகூற வேண்டும்.

கோவிட் 19 மற்றும் தடுப்பூசி பற்றிய தவறான சிந்தனை!

இன்று சில கிறிஸ்தவர்கள் கோவிட் 19 ஐ அந்திகிறிஸ்துவாகவும், தடுப்பூசியை அந்திகிறிஸ்துவாகவும் தவறாக சிந்திக்கின்றார்கள். வேதாகமத்தை அவர்கள் அறியாமல் இருப்பதினால், திருச்சபை உலகத்தில் இருப்பதை மறந்திருப்பதினால் கோவிட் 19 ஐ அந்திகிறிஸ்துவின் ஆயுதமாக எண்ணுகிறார்கள். அதற்கான தடுப்பூசியை லூசிபருடைய ஆயுதமாகவும் எண்ணுகின்றார்கள். பல நாடுகள் தயாரிக்கின்ற கொரோனா தடுப்பு ஊசிகளையும் அந்திகிறிஸ்துவின் ஊசிகளாகக் கருதுகின்றனர். இவை தவறான சிந்தனையாகும். ஒருபோதும் கோவிட் 19ஐ அந்திகிறிஸ்துவாக கருதமுடியாது. தடுப்பூசியை அந்திகிறிஸ்துவாக எண்ணமுடியாது. அவை அவனது கருவிகளும் அல்ல. உண்மையில் இயேசு வருவதற்கான அடையாளங்களாகவே இந்த தொற்றும் அதன் விளைவுகள் உள்ளன.

இவை அந்திகிறிஸ்துவினுடையவை அல்ல!

உண்மையில் திருச்சபையானது, சாத்தானும் அந்திகிறிஸ்துவும் வெளிப்படுவதைத் தடைசெய்து வருகின்றது. “தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்’’ (2தெசலோனிக்கேயர் 2:7-8) என்று வசனம் கூறுகின்றது. உண்மையில், இயேசுவானவர் வந்து திருச்சபையை எடுத்துக்கொண்ட பின்பே, அந்திகிறிஸ்து வெளியே வருவான். ஆகவே, தடுப்பூசியை அந்திகிறிஸ்துவின் ஆயுதமாகவோ, கோவிட் 19 ஐ அந்திகிறிஸ்துவின் ஆயுதமாகவோ, அந்திகிறிஸ்துவாகவோ கருத முடியாது. கருதவும்கூடாது. ஆகவே, கோவிட் 19 ன் பாதிப்புக்களை தேவ எச்சரிப்பாகவே மாத்திரமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்! தேவ கோபாக்கினையானது அந்திகிறிஸ்துவோடும், பாவத்திற்கான நியாயத்தீர்ப்புடன் தொடர்புபட்டதாகவுமே காணப்படுகின்றது. ஆகவே, இன்று ஏற்பட்டுள்ள தொற்றானது, விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

மருந்துகளை பாவிப்பது தவறல்ல!

கொவிட் 19 இற்கான பல மருந்துகளை பல நாடுகள் தயாரித்து வந்தாலும், அவற்றை சில கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள தவறுகின்றனர். உண்மையில், கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பு ஊசிகளைப்பற்றி எவ்வித பயமும் கலக்கமும் அடையத் தேவையில்லை. காரணம் இதற்கும் சாத்தானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் திருச்சபை உலகத்தில் இருப்பதினால், தேவன் தமது பிள்ளைகளுக்கு இதற்கான ஞானத்தை கொடுத்து தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருவதினால் நாம் இதற்கு பயப்பட வேண்டியதில்லை. இது சாத்தானின் அடையாளம் அல்ல. தடுப்பூசிகள் தேவன் தந்த சுகமாக்கும் ஆயுதங்களாக நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் நோய்கள் ஏற்பட்டால் மருந்துகள் எடுப்பது அவசியம். நோய்கள் வராமலிருப்பதற்காகத் தடுப்பு ஊசிகள் போடுவதும் அவசியம். அதற்கூடாக முழு மனித சமுதாயத்தினரும் தொற்று பரவுவதிலிருந்து தப்பிக்கொள்ள முடியும்.

முடிவு:

இந்தக் கட்டுரையில் நான், கொவிட் 19 தொற்றுநோயின் பங்கையும், இதன் மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள திருச்சபையின் பங்கையும், வெளிப்படுத்தல் கூறுகின்ற தேவ கோபாக்கினையின் பங்கையும், வேதாகமம் சொல்கின்ற நற்செய்தியின் பங்கையும், இயேசுவின் இரண்டாம் வருகைக்கான அடையாளத்தையும், கோவிட் 19ன் முடிவையும், தடுப்பூசியின் பங்களிப்பையும், கோவிட் 19 மற்றும் தடுப்பூசி பற்றிய கிறிஸ்தவர்களின் தவறான சிந்தனைகளையும், இவை அந்திகிறிஸ்துவினுடையவை அல்ல என்பதையும் மருந்துகளை பாவிப்பது தவறல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். இந்த சத்தியங்களை நாம் பிற கிறிஸ்தவர்களுக்கும் எடுத்துரைக்கவேண்டும். இதற்கூடாக, இயேசுவின் வருகை சமீபமாயிருக்கின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். அத்துடன், உலகத்தில் திருச்சபை காணப்படும்வரை தேவனுடைய கோபாக்கினை உலக மக்களை பாதிக்காது என்றும், உலகத்திலிருந்து திருச்சபையை இயேசு இரண்டாம் வருகையின்போது எடுத்துக் கொள்வார் என்றும் கூறியுள்ளேன். அதன்பின்பே வெளிப்படுத்தல் புத்தகம் கூறுகின்ற ஏற்படப் போகின்ற அழிவுகளையும் உபத்திரவங்களையும் தேவனுடைய கோபாக்கினைகளையும் உலகம் எதிர்கொள்ளும். மணவாட்டியாகிய தேவனுடைய திருச்சபை உலகத்திலிருந்து இயேசுவின் இரண்டாம் வருகையின்போது எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பே, தேவ கோபாக்கினை எனும் மாபெரும் தண்டனைகள் மனிதரை அழிக்கும். ஆகவே, தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 தொற்றுநோயின் தாக்கமானது, தேவ கோபாக்கினை அல்ல. அது இயேசுவின் வருகைக்கான அடையாளமாகவே உள்ளது.


எழுத்தாக்கம் – இ. இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *