நாம் அனைவருமே வித்தியாசமானவர்கள். நான் மட்டுமல்ல, நீங்களும் கூட வித்தியாசமான நபர்களாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிகளிலே ஒவ்வொரு கடமைகளில் தலைவராகவோ ஊழியனாகவோ இவ்வுலகிலே அங்கம் வகித்து வருகிறோம்.
நான் சிறுவனாக இருந்தபோது, கோழி தனது குஞ்சுகளை பொரித்து குடும்பமாக ஊர்வலம் வரும் காட்சியைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஒரு பருந்து மேலே வட்டமிட்டு கொண்டிருப்பதைக் கண்டதும் தாய்க்கோழி பதட்டத்துடன் போடும் சத்தத்தினால் அந்தக் குஞ்சுகள் அனைத்தும் தாயின் சிறகுகளுக்குள் தஞ்சம்புகும் காட்சியானது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்போதுதான் “இனம், இனத்தோடு சேரும்” என்ற தமிழ் பழமொழி என் மனதில் நன்கு பதிந்தது.
ஒரே ஊர், ஜாதி, மதம், நாடு, மொழி ஆகிய பல அம்சங்கள் நம்மை ஒன்றுபடுத்தும் காரணிகளாக காணப்படுகின்றன. வெளிப்புற மனித தோற்றத்தைப் போலவே மனதிற்குள்ளும் பல வித்தியாசங்களும், அடையாளங்களும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட வித்தியாசமான தனித்துவ அடையாளமும் கருத்தும் கொண்ட ஒரே மக்கள் ஒன்றாகஇணைந்துகொள்வது மிகவும் சாதாரணமான விடயமாகும்.
ஆனால், நம்மோடு ஒத்துப்போக முடியாத நண்பர்கள் சிறிது காலத்தில் நம்மைவிட்டு விலகிவிடுகிறார்கள். அல்லது அவர்களை விலக்கிவைத்து விடுகிறோம். இது உலகில் சர்வசாதாரண விடயம். எனினும் நமக்குப் பிரியமில்லாதவர்களுடன் உடனடியாக நம்முடைய உறவை முறித்துப்போடக்கூடாது. உதாரணமாக நமக்கு ஒத்துப்போகாதவர்கள் நம்முடைய பாடசாலையிலோ, வகுப்பிலோ, தொழில்கூடத்திலோ, அல்லது வீட்டிலோ இருப்பார்களானால், அவர்களை எளிதாக வெளியேற்றி விடமுடியாது. எத்தனை நாள் சண்டைபோட்டு கொண்டிருந்தாலும் உடன்பிறந்தவர்கள், சொந்தக்காரர்கள், அலுவலக பணிபுரிபவர்கள் போன்றவர்களை விட்டுவிலகி இலகுவில் ஒதுங்கி வாழ்ந்துவிட முடியாது. “அவர்களுக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமுமே இல்லை” என்று நாம் கண்டன அறிக்கைவிட்டாலும்கூட உண்மைநிலை மாறப்போவதில்லை.
நீங்கள் இந்தக் குடும்பத்தில் இப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்தவர் என்பது யாராலும் எப்போதுமே மாற்றப்பட முடியாதது. நீங்கள் அந்த உண்மை நிலையை மறுதலித்தாலும், உண்மையை மறுக்கமுடியாது. இது ஒருபக்கமிருக்கட்டும், எல்லோருமே உங்களைப்போன்றும் அல்லது மற்றவர்களைப் போன்று நீங்களும் இருந்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு சலிப்பாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
உங்கள் நண்பர்கள் எல்லோருமே உங்களை போலவே இருந்து, உங்களை எதிர்த்துப் பேசாமல் இருந்தால் மெய் நண்பன் யார், நல்ல நண்பன் யார் என்று கண்டுபிடிக்க முடியாதே. சினிமாவில் வில்லன் இல்லாமல் ஹீரோவிற்கு வேலையில்லை. நகைச்சுவையோ, கண்ணீரோ எதுவாக இருந்தாலும் அவை இல்லாவிட்டால், வாழ்க்கை ஏதோ சூனியமாகத்தான் இருக்கும். ஆகவே இந்த வித்தியாசங்கள் அனைத்தும் கடவுளினால் எமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். தேவனுடைய சாயலிலும் அவருடைய ரூபத்தின்படியும் நாம் படைக்கப்பட்டிருப்பதினால், இந்த வித்தியாசங்களுக்கு உரிய மதிப்பையும் கனத்தையும் கொடுக்கவேண்டியது அவசியமாகும். “மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்” என்றே நீதிமொழிகள் 11:12 எடுத்துரைக்கின்றது. ஆக, நல்ல தலைமைத்துவத்தை வகிக்க விரும்புகின்ற யாராக இருந்தாலும் சரி, இரு காரியங்களை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ஒன்று, நம்மைப்போல இல்லாத பிறருக்கு நாம் உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும். இரண்டு, நம்மைப்போல இல்லாத பிறரை நாம், நம்மைப் போல மாற்ற முயற்சி செய்யக்கூடாது. இவ்விரண்டிற்கும் இடையேதான் வாழ்க்கை ஒரு நதியைப்போல பாய்ந்து செல்கின்றது.
நாம் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவர்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற வித்தியாசங்கள், தனித்தன்மைகள், குணநலன்கள் போன்றவற்றைக் குறைசொல்லாமல் அவற்றைக் கவனியுங்கள். உதாரணமாக, பொதுவாக உங்களோடு பேசும்போது அவர்களின் உடல்அசைவுகள், செய்கைகள், பாவனைகள் ஆகியவற்றைக் கவனித்துப் பாருங்கள். அவை உங்களைப் பார்க்கிலும் வேறுபடுவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அதேபோன்றே அனைவருடைய சிந்தனைகளும் எண்ணங்களும் செயற்பாடுகளும் ஆளுக்காள் வித்தியாசப்படுகின்றன.
நாம் பிறந்த வீடு, வளர்ந்த விதம், நமது உறவினர்கள், நமக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் போன்றவை மற்றவர்களுக்கு ஒருபோதும் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் நானாகவே இருப்பதற்கு இவை எனக்கு உதவி செய்திருக்கின்றன. மேலே கூறப்பட்டவை வித்தியாசமானதாக இருந்திருப்பின் நானும் வித்தியாசமானவனாகவே இருந்திருப்பேன். ஒருவர் கடின முயற்சியினால் கல்வி கற்று தொழில் செய்து முன்னேறுகிறார். இன்னொருவர் விளையாட்டு திறமையிலே முன்னேறுகின்றார். இன்னும் சிலர் அரசியலிலும், கலைகளிலும் இயற்கையாகவே முன்னேறுகிறார்கள். ஆகவே நாம் பிறருடைய குணாதிசயங்களையும், அவர்களில் தேவனுடைய சாயலையும், தேவனுடைய ரூபத்தையும் நாம் பாராட்டவும் மதிக்கவும் வேண்டும். பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குறைசொல்லாமலாவது இருப்பது நலம்.
எனக்கு கல்வி கற்பதற்கு கிடைத்த வாய்ப்பு அனைத்தும் இன்னொருவருக்கு கிடைத்திருந்தால் அவரும் என்னைப்போலவே கல்வியில் உயர்ந்திருப்பார். எனக்கு உயர் அதிகாரியின் சிபாரிசு கிடைத்ததுபோலவே இன்னொருவருக்கும் கிடைத்திருந்தால் இன்று அவர் என்னைப்போலவே உயர்பதவி வகிப்பவராக இருந்திருப்பார் என்று மேல்மட்டத்தினர் சிந்திக்கவேண்டும். ஆக எம்முடைய பெற்றோரின் வளம், எமது சூழ்நிலை இவை அனைத்தும் தேவனால் எமக்கென விசேஷமாக கிடைத்திருக்கின்றன. அதனால்தான் நாம் அந்த நிலையை வகிக்கிறோம். இங்கே நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசத்தை தேவன் பார்க்கவில்லை. இயேசு இவ்விதமாக கூறினார், “தேவன், தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.” (மத்தேயு 5:45) அதாவது நாமும் அவரைப்போல பரிபூரண குணமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றே தேவன் எம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
நம்மிடம் இல்லாத குறை இன்னொருவரிடம் இருக்கின்றது என்றோ, நம்மிடம் இருக்கும் நிறைவுகள் மற்றவர்களிடம் இல்லை என்றோ வித்தியாசப்படுத்திப் பார்ப்பதுவும் பிறரை அவமதிப்பதுவும் நல்லதல்ல. நம்மை இன்னொரு நபர் இவ்விதமாகவே அவமதிக்கும் போதுதான் அதன் வேதனையை நாம் புரிந்து கொள்கின்றோம். எனினும் நம் அனைவரையும் படைத்த தேவனோ, நாம் அவமதிப்பவர்களையும், நம்மை அவமதிப்பவர்களையும் தன்னுடைய பிள்ளைகள் என்றே இங்கு சொல்கின்றார். ஆகவே நாம் கடவுளை மதித்தால், அவருடைய பிள்ளைகள் அனைவரையும் மதிக்கின்றவர்களாக இருப்போம்.
நம்மை தனது பிள்ளைகளாக கடவுள் ஏற்றுக்கொள்வதினால்தான் நமக்கு மதிப்பு கிடைக்கின்றது. நம்மைப் பிறர் மதிக்கவேண்டும் என்று விரும்பும் நாம், முதலில் பிறரை மதிக்கவேண்டும். அதுவே தேவன் எதிர்பார்க்கும் காரியமாக இருக்கின்றது. அவர்களை அவமதிப்பதோ, அவர்களை நம்மைப்போல மாற்ற முயற்சிப்பதோ சரியான காரியமல்ல. அப்படி எண்ணுவோமாயின், நாம் அவர்களைவிட பெருமைமிக்கவர்கள் என்பதையே வெளிப்படுத்துகிறோம், “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்” (1பேதுரு 5:5). நமது விருப்பங்களை பெருமையாக பேசும் நாம், பிறருடைய உரிமைகளையும் பெரிதாக மதிக்கத் தெரிந்திருக்கவேண்டும். உடன்படிப்பவர்கள், ஒன்றாக பணிபுரிபவர்கள், நண்பர்கள், வாழ்வில் சந்திக்கின்றவர்களிடத்தில் இருக்கிற வித்தியாசங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை மதிக்கவும் முடிந்தவரை அனைவரையும் சமமாக எண்ணவும் முயற்சி செய்யவேண்டும். பிறரை மாற்றிவிட முயற்சிக்காமல் இருப்போர் அவர்களுக்கு நன்மை செய்வதற்காக தம்மைச் சற்று மாற்றிக்கொள்ள தயக்கம் காட்டமாட்டார்கள். அப்போதுதான் நம்முடைய சுற்றுவட்டாரம் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
ஆகவே பின்வரும் காரியங்களை நினைவிற் கொள்ளுங்கள் :
1. ஒவ்வொரு நபருடைய தனித்தன்மைகளையும் குணாதிசயங்களையும் பழக்கவழக்கங்களையும் மதியுங்கள்.
2. அவர்களிடம் பேசும்போது, செயற்படும்போதும் விட்டுக்கொடுக்கப் பழகுங்கள்.
3. உங்களுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்யும், அல்லது வார்த்தைகளைப் பேசும் நபர்களிடம் அன்பாக இருக்க முடிவெடுங்கள்.
4. எதுவுமே தராத நபர்களுக்கும் மகிழ்ச்சியுடன் கொடுக்கப் பழகுங்கள். கொடுப்பதினால் மகிழ்ச்சியடையும் நபர்களிடம் மறுப்புகூறாமல் வாங்கிக் கொள்ளுங்கள்.
5. ஒவ்வொரு நபரையும், அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரும் கடவுளின் சாயலால் சிருஷ்டிக்கப்பட்ட நபர் என்று சிந்தித்துப் பாருங்கள்.
6. பிறரை கெட்டவர்களாக, கொடுமை நிறைந்த மக்களாக பாராமல் உடன்பிறந்தவர்களைப்போல எண்ணி உதவிசெய்யுங்கள். உங்களை மேன்மையாக எண்ணி உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள்.
7. உங்களுக்கு விருப்பமற்றவர்களை தூற்றி திரியாதிருங்கள். அவர்களைப் பட்டப்பெயர் சொல்லி அழைக்காமல், அவர்களின் பெயர்களையே பயன்படுத்துங்கள்.
8. ஒரு நபர் செய்யும் செயல்களைவிட அந்த நபர் யார் என்பதன் அடிப்படையில் அந்த நபரை அணுகுங்கள்.
9. ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற வித்தியாசங்களை புரிந்து, அவர்களைக் குறைகூறாமல் அவர்கள் இருக் கும்வண்ணமாகவே புரிந்துகொள்ளுங்கள். (நீ பாவி என தேவன் அறிந்தும் உன்னை இருக்கும் வண்ணமாகவே அவர் ஏற்றுக்கொண்டாரே).
10. கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். (பிலி. 4:8)
“காக்கையின் கூட்டில்தான் குயில் முட்டை இடும்.” என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்த முட்டையை காகம் பொரித்து சிறிது காலத்திற்கு காகம் தன்னுடைய குஞ்சாகவே எண்ணி வளர்க்கின்றது. எனினும் குயிலின் குரலை அது வெளிப்படுத்தும்போது காக்கை அந்தச் சின்னக்குயிலை துரத்திவிடும். ஆயினும், தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், திருச்சபையாராகிய நாம், இவ்விதமாக இனிய குயில்களை எம்முடைய திருச்சபையிலிருந்தும், எம்முடைய ஐக்கியத்திலிருந்தும் துரத்திவிடாதபடி எச்சரிக்கையாக இருப்பது அல்லவோ தேவனுக்கு முன்பான உகந்த உபவாசமாயிருக்கிறது. ஆம், “துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங்கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.” (ஏசாயா 58:6,7)
இன்னுமொரு விசேஷித்த காரியமும் உண்டு, இன்று நன்மை செய்பவர்கள், நாளை தீமை செய்யமாட்டார்கள் என்பது நிச்சயமில்லை. நேற்று தீமை செய்த பலர், இன்று நன்மை செய்துகொண்டிருப்பதையும் நிஜத்தில் காணலாம். ஆகவே எந்தவொரு நபரும் தினமும் மாற்றத்திற்குட்படுகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த உண்மையானது, நமக்கும் பொருத்தமான உண்மையே. சரி, நாம எப்படிங்க?
எழுதியவர் இ. வஷ்னீ ஏனர்ஸ்ட் | 0094- 771869710