இன்று எமது இலங்கையின் தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி (economic crisis) என்பதிலிருந்து மனித வாழ்க்கை நெருக்கடி (humanitarian crisis) என்ற நிலையை எட்டிவர ஆரம்பித்துள்ளது. காரணம் சீனி அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அன்றாட உணவுப் பொருட்கள், தானியங்கள், காஸ் மண்ணெண்ணை போன்ற எரிபொருட்கள், வாகனங்களுக்கான எரிபொருள், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்து நுகர்பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரமான உணவுப்பொருள் விலையேற்றம், குறைந்த சம்பளம், மருந்து பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் இயக்கம் நிறுத்தம், வெளிநாட்டு முதலீடுகள் முடக்கம், டொலர் பற்றாக்குறை, அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் போன்றவற்றினால் அமைதியிழந்து வீதிக்கு வந்து போராடும் மக்கள் என பல்வேறு பிரச்சனைகளுக்கு இலங்கை முகங்கொடுத்து வருகின்றது.

கையிருப்பிலுள்ள பணம்

தற்போது இலங்கை அரசிடம் கையிருப்பில் உள்ள பணம் மொத்தமே 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவு என்கிறார்கள் பொருளாதார நிபுணாகள். (ஒரு ஒப்பீட்டுக்காக, ஹாலிவுட் நடிகர்கள், சில அமெரிக்க மாடல் அழகிகளின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இதைவிட அதிகம்). இலங்கை நாடு திவாலாகி விட்டது. உலக வங்கியின் கடைக்கண் பார்வையை நோக்கிக் காத்திருக்கிறது. ஏற்கனவே இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் வாங்கிய கடனைக் கட்ட கூட பணமில்லை. இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதுகுறித்த எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.

ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பிரதிபலன்

2019 ஈஸ்டர் அன்று இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய பெரும் குண்டுவெடிப்புத் தாக்குதல் இந்த சீரழிவுத் தொடரின் முதல்கண்ணி எனலாம். இதனை தற்போதைய அரச சார்பு உதவியுடன் நிகழ்த்தப்பட்டது என்ற மக்களின் ஊகம் மற்றொரு புறம் நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றது. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் காரணமாக மக்களை அச்சத்திற்குட்படுத்தி ஒரு சிலர் லாபமடைந்தனர் என்றே அநேகர் காலம் கடந்து சிந்திக்கின்றார்கள்.

கைவிடப்பட்டதா சுற்றுலாதுறை

சுற்றுலாத் துறை இலங்கைக்கு வருமானம் ஈட்டித் தருகின்ற ஒன்று. வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் இயங்கும் இத்துறை இன்று நஷ்டமடையத் தொடங்கியு்ளளது. (இலங்கையின் பொருளாதாரத்திற்கு 15%க்கும் மேலாக பங்களிக்கும் துறை இது) இதனால் நாடு முற்றிலும் முடங்கிப்போய், அடுத்தடுத்து வந்த கோவிட் தொற்று அலைகளால் மரண அடி வாங்கியது.

உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு

அதே ஆண்டில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ராஜபக்சே சகோதர்களின் அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது – வரி விகிதங்களை அபாயகரமான அளவுக்குக் குறைத்தல், விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்கள் சலுகைகள், அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம் என்ற குறுகிய நோக்கில் உரங்களின் இறக்குமதிக்குத் தடை, இயற்கை உரத்திற்கு பழக்கப்படாத மண் அதனால் ஏற்பட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தி வீழ்ச்சி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வெளிநாட்டு பொருளாதார கடன் கொள்கை

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல, சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி பிதுங்கி நிற்கிறது. ஆரோக்கியமான வளர்ச்சிப் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து அதீதமான சலுகைப் பொருளாதாரம் (extreme welfare economics) என்பதை நோக்கிச் சென்ற ராஜபக்சேக்களின் விபரீத முயற்சிக்கு இலங்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய விலை இது.

இலங்கையின் இந்த நெருக்கடியை எதிர்பார்த்த சீனா, திவாலாகும் கடன்காரனைப் பார்த்து கிளுகிளுக்கும் ஈட்டிக்காரனைப் போல இப்போது குரூர புன்னகையை வீசிக்கொண்டிருக்கிறது. கடன்களை கட்டாயம் கட்டவேண்டுமென்ற நிபந்தனையை விதித்துள்ளது. எனினும் ஏறக்குறைய தங்களது ஏவலாள் போல ஆட்சிபுரிந்து கொண்டிருந்த ராஜபக்சேக்கள் பதவியிழக்கும் சாத்தியம் இல்லை. காரணம் இந்திய மற்றும் சீனர்களின் நிதி உதவி மற்றும் மானியங்களே.

உலக வங்கியிடம் கையேந்தும் இலங்கை

இன்று இலங்கைக்கு எந்தவிதமான “கருணை”யையும், சலுகைகையும் அளிக்க சீனா தயாராக இல்லை. காரணம் ராஜபக்சேக்களால் சுரண்டப்பட்ட எமது நாட்டு டொலர்கள் இன்று உகண்டாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இந்தியா, எமது நாட்டின் துயர சூழலினைப் பயன்படுத்தி இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவதுபோல கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இனி இலங்கையின் பொருளாதாரம் உலக வங்கியின் தயவினால் மட்டுமே மீண்டெழ முடியும் என எதிர்கட்சிகள் கூறுகின்ற நிலையில், உலக வங்கியின் எந்தவிதமான கிடுக்கிப்பிடி நிபந்தனைகளையும் சிறிதுகூட மறுக்க இயலாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.

எரிகிற எண்ணெய் சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் வீழ்ந்த கதைபோல இந்தியா மற்றும் சீனாவின் எரிகொள்ளியிலிருந்து உலகவங்கியின் எஜமானர்களான மேற்கத்திய நாடுகளின் அக்னி குவியலை நோக்கிச் செல்வதைத் தவிர இப்போது இலங்கைக்கு வேறு வழியில்லை

மந்திரவாதிகளை நாடும் அரச தலைவர்கள்

கடந்த காலங்களிலே தகைமையுள்ள புத்திஜீவிகள் அறிவாளிகள் பலர் நாட்டை விட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை நோக்கி வெளியேறியுள்ளனர். அதேநேரத்தில் சீன தொழிலாளிகளுக்கு உள்நாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்க மற்றும் எதிர்கட்சியிலுள்ள தலைவர்கள் பலர் இதனைக் கண்டுகொள்ளாமல் பௌத்த பன்சல தோறும் குறிசொல்வோர் பின்னால் சுற்றிவருகின்றனர். அத்துடன் சுமனதாச போன்ற மந்திரவாதிகளை சோதிடர்களை நாடுகின்றனர். தங்களது நலனுக்காக இலங்கை அரச மட்டத்திலுள்ள இவர்கள் மந்திர செயல்களில் பில்லிசூனியங்களில் இரகசிய யாகங்களில் அதிகாரத்தை பெற்றிட முற்படுகின்றனர். இன்று ராஜபக்சே சகோதர்களின் அரசு ஞானக்காவிடம் தஞ்சமடைந்துள்ளமை நாட்டிற்கான சாபகேடாகவே கருதவேண்டும்.

திருச்சபை என்ன செய்ய வேண்டும்?

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் இதிலிருந்து கிடைக்கும் பாடங்களைக் கற்றுக்கொள்வது முக்கியமானவை.

1. திருச்சபைகள் (Denorminations) தமது தனிப்பட்ட அரசியல், பொருளாதாரக் கொள்கைகள், வெளிநாட்டு உதவிகளை கர்த்தருக்குப் பயந்து சரியான முறையில் கையாள வேண்டும். எந்தவித கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும்.

2. இலங்கை தேசம் வாங்கிய கடன்களைபோல தமது சொந்த உள்ளுர் திருச்சபை (Church) கடன் வாங்க முற்படக்கூடாது. தமது விசுவாசிகள் கடன்வாங்குவதை தடுத்து தன்னிறைவு விடயத்தில் கவனம் செலுத்த வெண்டும். இல்லாவிட்டால் எமது தேசத்தின் நிலைமை எமது சபைகளின் மீதும் செல்வாக்கு செலுத்தும் என்பது நிச்சயம்.

3. ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். திருச்சபையானது (Universal Church) எமது ஆண்டவரின் மணவாட்டியாக அவரது கைகளுக்குள் இருப்பதினால் இலங்கை தேசத்தின் நிலைமையானது திருச்சபையில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை, ஏனென்றால் கிறிஸ்து இயேசு என்ற மகத்தான உன்னதரின் கையில் சபை உள்ளது.

4. மக்களை அரசாங்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ திசை திருப்புவதை திருச்சபை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது திருச்சபைக்கான கடமை அல்ல. எமது ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல. எனினும் மிகுந்த விழிப்புடன் திருச்சபை (Denormination) தனக்கு கீழ் இயங்கும் ஒவ்வொரு திருச்சபைகளுடன் (Churches) மிகுந்த தீர்க்கதரிசனத்துடனும், நிர்வாகத் திறமையுடனும் இந்த தேசத்தை உள்ளுர் சபையை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

5. இலங்கை மக்களுக்காக தொடர்ந்து உங்களுடைய பிரார்த்தனைகள் அவசியம். நீங்கள் நேசிக்கும் ஊழிய நிறுவனங்கள் மற்றும் திருச்சபைகள் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தை அடையாதபடி நீங்கள் இன்றைய நாட்களில் அவர்களைத் தாங்குவதும் மிக அவசியம்.

6. இலங்கை தேசத்து கிறிஸ்தவர்கள் இனியாவது நற்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாவப்பட்ட தள்ளாடுகின்ற துன்பப்படுகின்ற மக்களுக்கான வெளிச்சம் அதுவே. நற்செய்தி தரும் சமாதானத்தை இலங்கை மக்கள் அனுபவிக்க வேண்டுமல்லவா.

இன்றே இலங்கை தேசத்திலுள்ள திருச்சபைகளுக்காகவும் (Denormination) ஊழிய நிறுவனங்களுக்காகவும் (Organizations) கிறிஸ்தவ ஊழியர்களுக்காகவும் மன்றாடுங்கள். கர்த்தர் தாமே இலங்கை தேசத்து கிறிஸ்தவர்களை நன்மையினாலும் கிருபையினாலும் இரக்கத்தினாலும் ஆசீர்வாதத்தினாலம் பெலப்படுத்தி அவர்களுக்கூடாக பிற மக்களையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.

இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். B.Sc., B.Th.,

இக்கருத்துக்கள் யாவும் ஆசிரியருடையது. மாற்றுக்கருத்துக்கள் இருப்பின்
உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *