இந்திய மக்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம்
தற்போது இந்தியாவை மிகவும் மோசமாகப் பாதித்துள்ள கொரோனா தொற்று முழுமையாக இல்லாமல் போவதற்காக ஜெபிப்போம். பாதிக்கப்பட்டவா்களுக்கு பூரண சுகம் கிடைக்கும்படி மன்றாடுவோம் (விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை சுகப்படுத்தும் யாக்.5:15).
மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் வெளிநாட்டு உதவிகளும் உடனடியாக கிடைக்கும்படி ஜெபிப்போம். (திக்கற்ற பிள்ளைகளுக்குத் தேவன் சகாயராய் இருக்கின்றார் சங்.10:14, 146:9).
மருத்துவ உதவிகள் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்கும்படி ஜெபிப்போம்.
கொரோன தொற்றைத் தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய காரியங்களை மனிதர் கவனமாய்க் கடைபிடிப்பதற்காகவும், தடுப்பூசிகளைப்பற்றிய தயக்கமும் தப்பபிப்பிராயமும் நீங்குவதற்காகவும் ஜெபிப்போம் (லேவியராகமம் 11 முதல் 15 வரையிலான அதிகாரங்களில் அக்கால மக்களுக்குத் தேவையான சுகாதார ரீதியான நோய்த்தடுப்பு முறைகளை தேவன் கொடுத்துள்ளார்).
வைத்தியர்கள், தாதிமார்கள், மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இந்நோயினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஜெபிப்போம்.
கொரோனா காலத்தில் வேலையில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு தேவன் அன்றாட ஆகாரத்தை அருளும்படி ஜெபிப்போம் (சகல உயிரினங்களுக்கும் தேவன் உணவளிப்பவராக இருக்கின்றார் சங்.104:14, 104:27-28).
இந்தியாவில் இருக்கின்ற சகல சபைகளுக்காகவும், செய்யப்படும் எல்லாவிதமான ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். ஊழியர்கள் கலக்கமடையாமல், விசுவாசத்தில் உறுதியாகவும் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சிகளாகவும் இருப்பதற்காகவும், அவர்களுடைய அன்றாட தேவைகள்
சந்திக்கப்படுவதற்காகவும் ஜெபிப்போம் (இயேசுகிறிஸ்து கட்டும் சபையைப் பாதாளத்தின் வாசல்களினால் மேற்கொள்ள முடியாது மத்.16:18).
மக்களின் பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர்கள் இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்வதற்கான வழிகள் ஏற்படுவதற்காகவும் ஜெபிப்போம் (இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி மனிதரை சுத்திகரிக்கின்றது 1யோவா.1:7).
நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவருக்காகவும் ஜெபிப்போம். (அவர்கள் தேவனை அறியாவிட்டாலும் அவரால் நியமிக்கப்பட்ட ஊழியர்களாக இருக்கின்றார்கள் ரோ.13:1, 13:4). இதனால் அவர்களுடைய நல்வாழ்வுக்காகவும், இரட்சிப்புக்காகவும் ஜெபிக்கவேண்டியது நம்முடைய கடமையாயுள்ளது (1தீமோ.2:2-3).
ஆட்சியாளர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்களாக இருந்தாலும், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும் (எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம் 1தீமோ.2:4).
தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மக்களுக்கு ஆசீர்வாதமாயிருப்பதற்காக ஜெபிப்போம்.
கிறிஸ்தவ ஊழியர்கள் வேதாகம சத்தியங்களை சரியானவிதத்தில் அறிந்துகொள்ளவும், எவ்வித பயமுமின்றி சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு அவர்களுக்கு பரிசுத்தாவியானவர் உதவிடும்படியாக ஜெபிப்போம் (தனக்காக இப்படி ஜெபிக்கும்படி பவுலே கேட்டுள்ளார். எபே.6:20).
இந்தியாவில் தனிப்பட்ட ரீதியாக நாம் அறிந்திருக்கும் ஊழியர்களுக்காகவும், உறவினர்கள் நண்பர்களுக்காகவும் ஜெபிப்போம்.
நன்றி எம்.எஸ்.வசந்தகுமார்