சர்வாதிகாரத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று!
கொழும்பில் எங்கும் மக்கள் பதற்றத்துடன் தேர்தல்கள் முடிவை எதிர்பார்த்தபடி தொலைக்காட்சிக்குள் தம்மை புதைத்துக்கொண்டிருந்தனர்.
நானும் அதீத சந்தோஷத்துடன் ஒவ்வொரு தொகுதியினதும் முடிவுகளை ரசித்துக் கொண்டிருந்தேன்!
தொலைக்காட்சிகளை விட வேகமாக இணையத்தளங்கள் போட்டிப்போட்டு முடிவை விரைவில் வெளிப்படுத்தியது.
எதிர்காலத்தில் சமூகதொடர்பாடலின் வளர்ச்சி இன்னும் மேம்படக்கூடும்.
எனது சொந்த பிறப்பிடமான மூதூரில் மைத்தி பால சிறிசேன பெரும் வெற்றிப் பெற்றிருந்தார். இலங்கையில் அவர் அதிக வாக்குகளை பெற்ற இரண்டாவது இடம்அது! கொஞ்ச நேரத்தில் கிண்ணியா முதலாமிடத்தை தட்டிக்கொண்டது!
இப்படி, யாருமே எதிர்பார்த்திராத முடிவை தேர்தல்கள் திணைக்களம் அறிவித்தது.
தமிழர்களும் இஸ்லாமியர்களும் நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டதாக வெற்றிக் களிப்புடன் பட்டாசு வெடித்தனர்.
தனியார் தொலைக்காட்சிகளில் பெரும்பான்மை இனமக்களும்கூட பால்சோறு பறிமாறுவது ஒளிபரப்பாயின.
எனது வீட்டிற்கும் பக்கத்து வீட்டு சிங்கள பெண்மணி சந்தோஷத்துடன் பால்சோறு கொண்டு வந்திருந்தாள்.
தமிழ்நாட்டு ஊடகங்களில், வசைமொழி பாடிய சில அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் இலங்கை வாழ் தமிழ்மக்களுக்குகூட ஒருவித சலிப்பையே ஏற்படுத்தியது.
எனினும், முன்னாள் ஜனாதிபதியின் உடனடி முடிவும், பதவியிலிருந்து தாமாகவே ஒதுங்கிக்கொள்வதாக காண்பித்ததும் நாட்டிலுள்ள பலருக்கு கண்ணீரையே வரவழைத்து விட்டது.
அந்தக் கண்ணீருக்குள் தாமரை மொட்டாக ஜனநாயகம் மறுபடியும் மலர்ந்து விட்டதென சில பத்திரிகைகள் தலைப்பு செய்தி வெளியிட்டன.
இதயத்திலிருந்துஇதயங்களுக்கு….
இறைவனின் வலிமையை இன்று பலர் மறந்துவிட்டனர்!
(இறைவன்) அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர் தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன.
நன்மை செய்கின்றவர்கள் நாட்டை ஆள எழும்பும்போது அது மக்களினங்களுக்குள் மகிழ்ச்சியையே கொண்டு வரும்.
தீமை அதற்கு எதிர்மாறானதே.
ஜனநாயக அரசாங்கத்தை ருசிபார்த்தமக்களுக்கு சர்வாதிகார ஆட்சி சற்றும் பிடிப்பதில்லை. சர்வாதிகாரத்தில் ருசிகண்டவர்கள் ஜனநாயகம் மலர்வதை ஏற்கமாட்டார்கள்.
இவ்விரண்டிற்கும் நடுவே தடுமாறும் பல ஆசியநாடுகளில் இன்னமும் இராணுவ அதிகாரவர்க்கம் மதில்மேல் பூனையாக இருப்பது வெளிப்படை.
தத்துவஞானிகளில் ஒருவரான ராஜாவாகிய சாலொமோன் இப்படி கூறுவார்:
சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு; அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு. அவரது நீதிக்குறிப்புக்கள் சிந்திக்கத்தக்கவை.
துணைக்கண்டத்தில் ஏற்பட்ட மோடிஅலை, இந்து சமுத்திரத்தில் முத்தான இலங்கைக்குள் ஒரு மைத்திரி யுகத்தை ஏற்படுத்திவிட்டதோ! சீனாவைவிட, தொடர்ந்தும் இத் துணைக்கண்டம் இத் தீவில் செல்வாக்கு செலுத்தியே தீரும்.
ஒரு கிறிஸ்தவனாக, நான் நித்தியமான நிரந்தரமான சமாதானமான ஒரு ஆட்சியையே எதிர்நோக்கியுள்ளேன். அது மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இறைநூல் வரப்போகும் இறையரசில் வாழும் இறைமக்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது:
‘இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.’
இறைவா! எனது நாட்டிற்காக நன்றி.
இங்கு என்னைப் பிறக்கச் செய்தவர் நீரே!
அப்படியே, நாட்டை ஆள ராஜாக்களை ஏற்படுத்துபவரும் நீரே.
உம் சித்தமின்றி ஆட்சிமாற்றம் நடந்திராது!
இறைவா, உம்முடைய அரசு நீதியும் நியாயமும் நிறைந்த அரசு.
அங்கே சமத்துவமும் சத்தியமும் உண்டு.
உமது பரிசுத்த பர்வதமெங்கும், தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை.
அண்டவரே, உமது மக்களாக, நித்தியமான ஆட்சியில் நாம் சிறந்த பிரஜைகளாக திகழ இன்றே என்னை மாற்றுவீராக.