ஒரு பெண் வக்கீலிடம் வந்து ‘என் கணவரை நான் மிகவும் வெறுக்கின்றேன். அவரை விவாகரத்து செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் அவரை பழிவாங்க அல்லது மிக மோசமான முறையில் காயப்படுத்த வேண்டும்’ என்று கூறினாள்.
வக்கில் கூறினார் ‘ஒரு மாத காலம் அவருடன் மிக அன்பாக நடந்து கொள்ளுங்கள் அவர் எவ்வளவு பிழை செய்தாலும் அதை மன்னித்து, அவரை மகிழ்ச்சி படுத்த உங்களால் இயன்றதை செய்யுங்கள். இவ்வளவையும் நடித்து அவரை உண்மையாக நேசிப்பது போல் நம்ப வையுங்கள். பிறகு குண்டை தூக்கி போடுங்கள், நான் உங்களை விவாகரத்து பண்ணப் போகிறேன். அது அவரை மிகவும் பாதிக்கும்’.
அந்த பெண் வக்கீல் சொல்லி கொடுத்த படியே நடித்தாள். ஒரு மாதம் கழித்து வக்கீலிடம் வந்தாள். ‘விவாகரத்துக்கு நீ ஆயத்தமா?’ என்று கேட்டார். உடனே அப்பெண்மணி ‘விவாகரத்தா! முடியவே முடியாது, நான் உண்மையில் அவரை நேசிக்க தொடங்கி விட்டேன். அவரும் முற்றிலும் மாறி விட்டார்’. என்றாள்.
நாமும் இப்படிதான், எம் உறவுகளோ, நண்பர்களோ எங்களுடன் முரண்பாடாக இருக்கும் போது எப்படி போலியாக அன்பு காட்டுவது என்று சொல்லிக்கொண்டு முரண்பாட்டை வளர்த்துக்கொண்டே தான் போகிறோம். கொஞ்சம் எங்களை விட்டுக் கொடுத்து நாம் அன்பு காட்டும் போது, நிச்சயமாக மாற்றம் வரும்.
வேதம் சொல்கின்றது, பழிக்குப்பழி வாங்காமலும், உன் சனப்புத்திரர்மேல் பொறாமை கொள்ளாமலும். உன்னில் நீ அன்பு கூருவது போல் பிறனிலும் அன்பு கூருவாயாக: நான் கர்த்தர். லேவியராகமம் 19:18