எனது உணர்வுகளின் யதார்த்தம்….
‘நீ விரும்புகின்ற முடிவை நான் உனக்குத் தரவேண்டும் என நானும்விரும்புகின்றேன்” என நம்பத்தகுந்த ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை உங்களிடம் மறுபடியும் மறுபடியும் கூறுவாரேயாயின், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட நபர் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவீர்கள். நானும்கூட, அவர் யார்? அவர் ஏன் அப்படிக் கூறுகின்றார்? அவர் எப்படிப்பட்டவர்? என அறிந்துகொள்ள முற்படுவேன். உண்மையாகவே அவர் நம்பத்தகுந்த ஒருவர்தான் என்பதை என் வாழ்க்கையில் நான் அனுபவித்து ருசிபார்த்து அறிந்திருப்பேனேயாயின், அதன்பின்னர் அவரை நான் நம்புவதற்கு எந்த விதத்திலும் சிரமப்படமாட்டேன்.
‘நீ விரும்புகின்ற முடிவை நீ பெற்றுக்கொள்வாய்” என்று ஒருவர்இன்னொருவருக்கு சொல்வது இலகு. ஏனென்றால் நான் எதை அடையவேண்டு மென்று விரும்புகின்றேனோ அதனை நான் எப்படியாகிலும் அடைய முயற்சித்து அதில் வெற்றியும் காணக்கூடும். இது எனக்குத் தெரிந்த உண்மை. ஒருவேளை நான் விரும்புகின்ற முடிவை நானே தேடிக்கொள்ள என்னால் இயலும் அல்லவா!
எனினும், ‘நீ விரும்புகின்ற முடிவை நான் உனக்குத் தருவேன்” என்று வாக்குக்கொடுப்பது உண்மையில் மனித எல்லைக்கு அப்பாற்பட்டதும் உயரிய விடயமாக இருக்கின்றது. ஆம், எனது தனிப்பட்ட முயற்சியினால் பெற்றுக்கொள்ள முடியாதுபோன காரியத்தைப் பற்றியே கூறுகின்றார். நான் அவர் யார் என்பதை அறிந்திருக்கின்றேன். அவர் நம்பத்தகுந்தவர் என்றும் அவர் எனக்காக மரிக்கவும் தயங்கமாட்டார் என்றும் நான் அறிந்துள்ளேன். அவர் அவ்வாறு செய்தும் இருக்கின்றார். ஆம், அவரை எனது ஆண்டவராக என்னுடைய சொந்த மீட்பராக நான்எண்ணிக்கொண்டதினால், அவ்வாறு அவரை நான்ஏற்றுக்கொண்டதினால் இனி ஒருபோதும் அவரைக் குறித்துபெருமைப்படுவதிலும் எந்தவித வெட்கமும் எனக்கில்லை.
‘நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்குநான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவானநினைவுகளே.” வாவ்!!!! என்ன அருமை! என் வேதத்தில் அல்லவா நான் இந்த வசனத்தைக் காண்கின்றேன்! சிறுவயது முதல் நான் வேதத்தை வாசித்திருக்கின்றேன். அதிலுள்ள கதைகள், சம்பவங்கள், சங்கீத வசனங்கள் எனக்கு அத்துப்படி! சங்கீதங்களை மனனம் செய்திருக்கின்ற நான், இந்த வசனத்தை எரேமியாவின் புத்தகத்தில் 29வது அதிகாரத்தில் அல்லவா கண்டுபிடித்தேன்!
‘நான் விரும்புகின்ற முடிவை எனக்குத் தரத் தக்கவர் இறைவன் ஒருவர்மாத்திரமே! அதைத் தானே வேதம் தெளிவாக கூறுகின்றது. நண்பர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள், அயலவர்கள், உற்றார் உறவினர்கள் என அனைவருமே, நான் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நல்ல முடிவுக்கு எதிர்மாறான முடிவை தரத்தக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை. எனது வாழ்வில் நான் எதிர்பார்க்கின்ற முடிவை எனக்குதந்தவர் இறைவன் மாத்திரமே! இதைப்பற்றி நான் கவிதை எழுதுவேன்.கதை எழுதுவேன். என் வாழ்க்கையையே நான் எழுதி முடிப்பேன்.
என் வாழ்வில் சோர்வுற்றிருந்த சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு வார்த்தை வேதாகமத்திலே இருக்கின்றது என்பதை நான் கண்டுகொண்டேன். அந்த வார்த்தையையே நான் இப்போது வேத வாக்காக கருதுகின்றேன். ஏனென்றால் என்னுடைய பிறப்பு என் கையில் இருக்கவில்லை.என்னுடைய இறப்பும் என் கையில் இல்லை. நான் பிறந்தபடியே மரித்துப்போவேன். இது உலக மனிதர்களின் விதியல்ல. நியதி. அந்த நியதிக்குஅப்பாற்பட்ட விதமாக என்னுடைய முடிவை அறிந்தவர் இறைவன்ஒருவரே.
எனினும் இறைவன் கூறிய இந்த சத்தியமான வார்த்தையை என்னால் மறக்கமுடியவில்லையே. ‘அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத்தொழுது கொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள். நான்உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும்என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான்உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லாஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான்உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 29:11-14)
‘நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்குநான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவானநினைவுகளே.” ஆம், அந்த சமாதான வார்த்தைகளை தருகின்ற கர்த்தரை நான் நேசிக்கின்றேன். அவர் கையினால் என் முடிவை நான் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகின்றேன். அதுவே எனக்குச் சமாதானமும் சந்தோஷமுமான நிமிடமாக இருக்கும்.
என்னுடைய முடிவு அழிவுக்குள்ளானது அல்ல. அது நித்தியமானது.நிரந்தரமானது. அது என்றென்றும் தேவனுடன் வாழுகின்ற வாழ்வாக இருக்கின்றது. அதை நான் ஒரு கிறிஸ்தவனாக மாத்திரமல்ல, கிறிஸ்துஇயேசுவை என் மீட்பராக ஏற்றுக்கொண்டு இருப்பதினால் என்னுடையஅந்த நல்ல சிறப்பான முடிவை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதில்தயக்கமில்லை. கவலையுமில்லை. ஏனென்றால், நான் மரிக்கவேண்டிய இடத்தில் இயேசு மரித்துவிட்டார். நான் காயப்படவேண்டிய இடத்தில் அவர் காயப்பட்டார். நான் தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில் அவர் தண்டிக்கப்பட்டார். அவராலே நான் மீட்கப்பட்டேன். இரட்சிக்கப்பட்டேன். அந்த திவ்ய சந்தோஷத்தினால் ஆட்கொள்ளப்பட்டேன்.
ஆம், என் அருமை நண்பனே, நீயும் இவ்விதமான கவலையற்ற எதிர்காலத்தை சந்திக்க ஆயத்தமா? இயேசுவை பின்பற்றி அவருடைய திவ்ய அரவணைப்பிலே நிலைத்திருக்க ஆயத்தமா? நீயும் ஆயத்தமானால் இந்த வேத வார்த்தைகளை இன்றே நீயும்கூட நம்பலாம்! அவை சத்தியமானவைகள்! வாக்குமாறாதவை! மனித வாக்கு மாறலாம்!தெய்வ வாக்கு மாறுமோ? இல்லை, நித்தியமான நிரந்தர மான வேதவார்த்தைகள் என்றென்றும் மாறாதவை!
இனி நான் வாழ்வதும், உயிரோடிருப்பதும் இன்றைய என்னுடைய விருப்பத்தினால் அல்ல, அது எனக்குள் வாழுகிற கிறிஸ்துவின் மீதுள்ள வாஞ்சையாகவே இருக்கின்றது. வாழ்வில் நஷ்டமோ, கஷ்டமோ எதுவானாலும் அவர் கைகளிலிருந்து எனக்கு எல்லா விதமான நன்மையான ஈவுகளையும் இனி நான் பெற்றுக்கொள்வேன். இறைவனின் கைகளிலிருந்து நல்ல முடிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அந்த முடிவு அருமையானது! நண்பனே, உனக்குள் இந்த நிச்சயம் உண்டா? இயேசுவை தேடு!