மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ் (Rhenius)

courtessy : சரோஜினி பாக்கியமுத்து

மொழிபெயர்ப்பாளர் இரேனியஸ்

மொழிபெயர்ப்பு என்பது ஒரு தலைசிறந்த இணைப்புப்பாலம். அனைத்து மொழிகளின் அறிவுத் துறைகளையும் அனைத்துப் பிறமொழிகளுக்கும் கொணர்ந்து சேர்க்கக் கூடியது. வேற்றுப் பண்பாடுகளைப் புரிந்து கொள்ள வழிவகுத்து நாடுகளிடையே ஒருமைப்பாட்டை வளர்த்து உலக ஒற்றுமைக்கு அடித்தளம் அமைக்க வல்லது.

மிகப் பழங்காலத்திலிருந்தே பிராகிருங்கள், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளினின்று தமிழுக்குப் பல கருவூலங்கள் வந்து சேர்ந்துள்ளன.

நாம் இன்று மூலமொழி நூல் என்று சொல்வது முதல் நூல் என்றும் இலக்கு மொழி நூல் என்பது வழி நூல் என்றும் அறியப்பட்டன. அவை பெரும்பாலும் தழுவல்களாக இருந்து இலக்கு மொழிபெயர்ப்பாளனின் கற்பனைத்திறனுக்கு சிறந்த இடம் தந்தன. இன்று மொழிபெயர்ப்பு என்று அறியப்படுவது மொழியாக்கம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆக்கம் என்ற சொல் படைப்புத் திறனைக் குறிக்கும்.

நாம் ஒருவரிடம் பேச்சு மூலம் தொடர்பு கொள்வதும் ஒருவகை மொழிபெயர்ப்புத்தான். மனத்தில் எழும் எண்ணங்களை சொற்களாகப் பெயர்த்துத் தான் வெளியிடுகிறோம். அப்படிப் பார்க்கையில், இசை, ஓவியம், சிற்பம், போன்ற கலைகள் அனைத்துமே மொழி பெயர்ப்புத்தான். நம் மனத்தின் அனுபவம் அனைத்தையும் முழுமையாக, தெளிவாக, வெளிப்படுத்திவிடுவது சாத்தியமானதல்ல. அப்படியே மூலமொழி ஒன்றில் இருப்பதை பிறிதொரு இலக்கு மொழியில் ஆக்குவதும் அரிதான செயலே. எனவே தான் மொழிபெயர்ப்பு என்பது பொன்னைச் செம்பாக்கும் காரியம்; மூலத்துக்குத் துரோகம் செய்வது தான் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆயினும், உலகின் பிற பண்பாடுகளோடு நாம் உறவாடுவது இன்றியமையாததலால், அப்பண்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், நம்மை வளப்படுத்திக் கொள்ளவும் மொழியாக்கம் இன்றியமையாததாகிறது. அந்த வகையில் தான் கிறிஸ்தவ வேதமும் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. வேதாகமம் மனிதனின் ஆன்மீக வேட்கையைத் தீர்க்கவும், வாழ்க்கையின் அழகைக் காட்டி அதன் அர்த்தத்தை விளக்கவும் வல்லதாய், மனுக்குலத்தினரிடையே ஒரு பொதுமை உணர்வையும் ஏற்படுத்திக் தருகிறது.

தென்னிந்தியாவில் நவீன காலக்கிறிஸ்தவம் போர்ச்சுகீசியருடன் தான் தொடங்குகிறது. கத்தோலிக்கரான போர்ச்சுகீசியர் தென்னிந்தியா வந்திறங்கி (1498), 17-ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை இங்கு ஏகபோக வணிகம் செய்து வந்த நாட்களில், கத்தோலிக்க சமயத் தொண்டர்களும் தமிழகம் வந்து, தங்கள் சமயத்தைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்வித்து, வேதாகமப் பகுதிகள், செபங்கள், மற்றும் சமய நூல்களை மொழிபெயர்த்தனர். தமிழ் இலக்கணம் கற்ற என்றிக்ஸ் என்றி என்ற ஏசு சபைத்துறவி (1520-1600) 660 பக்கம் கொண்ட ஃபிலாஸ் சான்க்டோரம் என்ற நூலை போர்ச்சுகீசிய மொழியிலிருந்து முத்துக்குளித்துறை மக்கள் வழக்கிலிருந்த உரைநடையில் மொழிபெயர்த்து அச்சுமேற்றியதைக் குறிப்பிட்டுச் செல்ல வேண்டும். கற்றோர் உரைநடையை ஒரு பொருட்டாக எண்ணாத காலம் அது. தமிழில் உரைநடைக்கு மட்டுமல்ல மொழிபெயர்ப்பு, அச்சு எல்லாவற்றுக்கும் அதுவே தொடக்கமாகும்.

அதன் பின்னர் ராபர்ட்டிநோபிலி (1577-1656) என்ற ஏசுசபைத்துறவி சமஸ்கிருதம் கலந்த தமிழில் ஏராளமான நூல்கள் படைத்தார் இவர் மொழிபெயர்த்ததாக தெரியவில்லை. இவர் நூல்கள் அச்சும் ஏறவில்லை. ஆயினும் உரைநடை வளர இவர் நூல்கள் உதவின. கிறிஸ்தவ சமயம் இந்தியமயமாகவும் இவர் உதவினார்.

மேற்சொன்ன கத்தோலிக்க சமயநூல்கள் பெரும்பாலும் குருமார் உபதேசிமார் உபயோகத்துக்கென எழுதப்பட்டவை. 18-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் டேனியர் (டென்மார்க்) காலனியான தரங்கம்பாடியிலிருந்து புராட்டாஸ்தாந்திய லூத்தரன் சமயத் தொண்டர்கள் தங்கள் பணியைத் தொடங்கியபோது மொழிபெயர்ப்புப் பணி புதிய எழுச்சி பெற்றது. இறைவார்த்தை அனைத்து மட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்; குருமார் மூலமாக அல்ல, எல்லா மக்களும் நேரடியாக அதை வாசித்தறிய வேண்டும் என்ற கொள்கையை அந்த லூத்தரன் சித்திருத்த சபை கொண்டிருந்தது. அந்த வகையில் ஜெர்மானியரான சிகன்பால்கு தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத்தேறி, கிரேக்க புதிய ஏற்பாட்டைத் தமிழ் வசனநடையில் மொழிபெயர்த்து அச்சேற்றுவித்து, மேலோர் கீழோர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார். சிகன்பால்கு தென்னிந்திய சமயம், சமுதாயம் குறித்தும் நூல்கள் எழுதினார். ஆகவே அவர் முதல் இந்தியவியலாளருங்கூட…. கற்றோர், சிகன்பால்குவின் வேதத்தைக் கண்டுகொள்ளவில்லை, தமிழ்ப் பேரறிஞரும் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்டவருமான பெஸ்கியும், தென்னிந்தியப் பண்பாட்டறிஞர் அபிதுபாயும், இவர் வேதத்தை உயர்வாகக் கருதவில்லையாயினும், இவ்வேதம் தமிழகத்தில் ஒரு சலசலப்பைத் துவக்கிவிட்டது. மயிலை சினி வேங்கடசாமி மொழியில் சொல்வதானால் தோட்டி முதல் தொண்டமான் வரை வேதம் படிக்கலாம் என்ற நிலை உருவாகத் தொடங்கியது உண்மை. அடுத்துவந்த பப்ரிஷியஸ் (1710-1791) பன்மொழிப் புலமைவரம் பெறிருந்தவர். இவரும் சிர்திருத்த லூத்தரன் சபையைச் சேர்ந்த ஜெர்மானியரே. இவர் சிகன்பால்குவின் புதிய ஏற்பாட்டைத் திருத்தி, பழைய ஏற்பாட்டை எபிரேயத்தினின்று முழுமையாக மொழி பெயர்த்து, அச்சிடுவித்து, அரிய சாதனை படைத்தார். செய்யுள் யுகம் அஸ்தமித்து, சனநாயகத்தை வளர்த்தெடுக்கும் உரைநடை யுகம், வளரப் பெரிதும் காரணமாக இருந்தவர் இவர். இவர் தமிழ் அகராதி மற்றும் ஏராளமான பக்திப் பாடல்களும் செய்தார்.

பல்வேறு இன்னல்களுக்கிடையே பணிசெய்து கிடந்த இந்த இரு தரங்கம்பாடி, மாமொழி பெயர்ப்பாளர்களின் பணி விரித்துரைக்கப்பட வேண்டிய தொன்றாயினும், இப்போதைக்கு எனது தலைப்பு இரேனியஸின் மொழிபெயர்ப்புப் பணி என்பதால் அவர்களைப் பற்றி முன்னுரையாக மட்டுமே சொல்லிவிட்டு மேலே போக வேண்டியுள்ளது.

மேற்சொன்னவர்களைப் போல இரேனியஸீம் ஜெர்மானியர் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லுவதுண்டு. ஆனால் ஜெர்மணி அப்போது ஒரு நாடாக இல்லை. பல குறுநிலங்கள் தான் இருந்தன. சார்ல்ஸ் தியோபிலஸ் ஈவால்டு இரேனியஸ் ப்ரஷியாவைச் (Prussia) சேர்ந்த கிராடன்ஸில் 1790-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள் பிறந்தார். தந்தை காலாட்படையில் அதிகாரி, 7 வயதில் தந்தையை இழந்த இரேனியஸ் 14 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து தமது பெற்றோரின் உடன்பிறந்தாருடன் வேலையில் அமர்ந்தார். பெரிய தந்தை அவரிடம் மிகவும் அன்பு செலுத்தினார். 17-ம் வயதில் இரேனியஸ் ஒரு தெய்வீக அனுபவம் கிடைக்கப்பெற்றார். விளைவாக மிஷனெரித் தொண்டு புரியவேண்டுமென்று ஆர்வம் கொண்டு, பெர்லின் சென்று, இறையியல் கல்வியும், மிஷனெரிப் பயிற்சியும் பெற்று, லூத்தரன் குருவாக அபிஷேகம் பெற்றார்.

இவர் லூத்தரன் குருவாக இருந்தபோதிலும், இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த சர்ச்சு மிஷனெரி சங்கத்தினர் (சி.எம்.எஸ்) இவரைத் தங்கள் மிஷனெரியாக இந்தியாவுக்கு அனுப்பினர். 1813-ல் தான் கிழக்கிந்தியக் கம்பெனி தன் பிராந்தியங்களில் மிஷனெரிகள் பணிபுரியலாமென அனுமதி தந்திருந்தது. 1814-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரேனியஸ் தமிழகம் வந்து சேர்ந்தார். இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் திருச்சபையும் புராட்டஸ்தாந்தியப் பெருஞ்சபைதான் என்றாலும், ஜெர்மானியில் உருவாகி எழுந்த சிர்திருத்தசபைப் பிரிவுகள் முற்றிலும் வேறானவை. கிறிஸ்து நம்பிக்கை, வேதாகம அடிப்படை, இறையருள், விசுவாச உறுதி, ஆகியவற்றில் அச்சபையினர் மிகத்தீவிரப்பிடிப்புடன் இயங்கினர், நாட்டுப்பற்றை விடவும், இறைப்பற்று மிகுதி. எனவேதான் லூத்தரன் மிஷனெரிகள் அர்ப்பண சிந்தையும், மக்கள் பால் கரிசனமும், கொள்கைத் தீவிரமும் உடையவராய், முழுமூச்சாய்ப் பணியாற்றினர். இரேனியஸ் ஐரோப்பாவின் தொழிற்புரட்சி, சமுதாய மாற்றங்கள் விஞ்ஞான வளர்ச்சி ஆகியவற்றையும் உன்னிப்பாக கவனித்திருந்தார்.

கம்பெனியின் அனுமதியுடன் இங்கிலாந்து திருச்சபை இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டது. மிடில்டன் என்பவரை பேராயராகவும் அது அனுப்பி வைத்தது. அவர் அப்போதைய தலைநகரமான கல்கத்தாவில் வந்திறங்கி, சூயஸ் கால்வாய் தொடங்கி ஆஸ்திரேலியா வரை சமயக்கோலோச்சத் தொடங்கினார். பிரித்தானிய சமயத்தொண்டர்களும், பல்வேறு இந்தியப்பகுதிகளுக்குள் முதன்முறையாகக் காலடி எடுத்து வைத்தனர். மேனாட்டுக் கல்வியையும், குறிப்பாக ஆங்கிலத்தையும், ஆங்கிலிக்கள் கிறிஸ்தவ சமயத்தையும் பரப்புவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டனர். நாட்டுப்பற்று அவர்களிடம் மிகத் தீவிரமாக இருந்தது.

இரேனியஸ் சிலகாலம் தரங்கம்பாடியில் கல்விப்பணி செய்தும், தமிழ் கற்றுமிருந்து, பின்பு சென்னை வந்தார். அங்கு அவர் அனிவான்சோமரன் என்ற டச்சுப் பெண்மணியைத் திருமணம் புரிந்தார். இரேனியஸ் சிறந்த பேச்சாளராகவும், மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவராகவும், தீவிர உழைப்பாற்றலுடையவராகவும் இருந்தார். புதிய பள்ளிகள் பல தொடங்கினார். சுவிசேடப் பணியில் வெற்றிகளைக் குவித்தார். துண்டுப் பிரசுரங்கள் வெளியிடத் தொடங்கினார். 1817-ல் சர்வதேச வேதாகம சங்கத்தின் ஒரு கிளையை சென்னையில் நிறுவ முன்னின்று உழைத்தார். 1815ல் பப்ரிஷியஸின் வேத மொழிபெயர்ப்பைத் திருத்தத் தொடங்கினார்.

சி.எம்.எஸ். சங்கத்தாருக்கும் இரேனியஸீக்குமிடையே கருத்தொற்றுமை நிலவவில்லை. இரேனியஸ் பிரசுரித்த துண்டுப் பிரசுரங்கள் பற்றி சங்கத்தார் குற்றங்கள் சாட்டினர். இரேனியஸ் தாழ்ந்த குலச்சிறுவரையும் பள்ளியில் சேர்ப்பதே கிறிஸ்தவ தருமம் என நம்பினார். மேலும் அவர் தொடங்கிய சமயத்துண்டுப் பிரசுரங்கள் பற்றி சங்கத்தில் ஐரோப்பியரில் அனைத்து வர்க்கத்தினரையும், இந்தியரில் அனைத்து சாதியினரையும் சேர்த்தார். இப்படிப் பல வேறுபாடுகள் தோன்றவே சங்கம் அவரை அகற்ற விரும்பியது. கிளாரிந்தாவும் ஸ்வார்ட்ஸீம் நிறுவிய நெல்லைத் திருச்சபை அப்போது நலிவுற்றிருந்ததால் அங்கு பணியாற்றிய இராணுவ குரு ஜேம்ஸ் ஹெள அங்கு ஒரு மிஷனெரி அனுப்பப்படல் வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். சங்கமும் இரேனியஸை அனுப்பி வைத்துவிட்டது.

1820ம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இரேனியஸ் பாளையங்கோட்டை வந்து சேர்ந்தார். முருகன்குறிச்சி அவர் தொழில்மையம் ஆனது. அடுத்த ஆண்டு அவரது பிரிய நண்பரும், திராவிடக்குடும்பமொழிகள் பற்றி கால்டுவெல்லுக்கு முன்பாகவே கருத்துச் சொன்னவருமான பெர்னார்டு ஷ்மிட் அவருடன் வந்து சேர்ந்து கொண்டார். இரேனியஸ் சுவிசேடப் பணியில் பேராற்றலுடன் இறங்கினார். யாத்திரிகர் என்றழைக்கப்பட்ட பயிற்சி பெற்ற சுவிசேடர்களை இரண்டிரண்டு பேராக ஊர்களெங்கும் அனுப்பினார். தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்கள், குறிப்பாக சாணார் சமுகத்தவர் திரள் திரளாக வந்து சபையில் சேர்ந்தனர். இது ஒரு சமுதாயப் புரட்சியே ஆகும். சாணார் சமூகத்தவர் தமிழகத்தின் சாதி அமைப்புக்குள் முற்றிலுமாக இருந்தவரல்லர். அவர்களுக்கு பாளையக்காரர் என்று சொல்லப்பட்ட ஆந்திர நாயக்க ஜமீன்தாரர்களால் கொடுமைகள் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய அதிகாரிகளும் பிறமேல்சாதிக்காரரும் துன்பங்கள் விளைவித்து வந்தனர். சாணார்களுக்குக் கல்வி, செவ்வியல் சமயம் மீது நாட்டம் இருந்து வந்தது.

சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. மிஷனெரிகள் அறிமுகப்படுத்திய புதிய சமயத்தில் அவர்கள் சேர விரும்பினர். சாணார் மட்டுமல்ல ஆதிதிராவிடரும், பிள்ளைமாரும் கூட திருச்சபையில் சேர்ந்தனர். இரேனியஸ் அனைவரையும் சரிசமமாக நடத்துவதில் கவனமாக இருந்து வந்தார். காலத்தின் போக்குகளை ஊன்றிக் கவனித்த இரேனியஸ் தீர்க்கதரிசனத்துடனும் மக்கள் பால் பரிவுடனும் செயல்பட்டார். நெல்லையில் முன்னூற்றுக்குமதிகமான கிறிஸ்தவக் குடியேற்றங்கள் தோன்றின. கோயிலோடு பள்ளியும் தொடங்கியது. 1822ல் வேதாமக துண்டுப்பிரசுர சங்கம் தொடங்கினார். 10 ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. இவை தொடக்கக் கல்வி பெற்றவரி7ன் வாசிப்புத் தேவையை நிறைவேற்றின. பெண்களும் அவற்றை வாசித்தனர்.

இரேனியஸ் சென்னையில் இருக்கும்போது சித்தாம்பூர், செடிப்பேடு ஆகிய ஊர்களிலிருந்த சமண பண்டிதர்களுடன் வேதாகமம் குறித்து உரையாடியிருந்தார். அந்தணர், பௌத்தர் ஆகியோருடன் கலந்துரையாடும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். இப்போது நெல்லையில் தொடக்கக்கல்வி கற்ற புதுக்கிறிஸ்தவர்களின் தேவையையும் கண்டறிந்தார். இவர்களை எல்லாம் மனத்தில் கொண்டே அவர் தமது வேதாகம மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுத்தார். இவை குறித்து ஒரு நூலும் எழுதியிருக்கிறார். 58 பக்கங்கள் கொண்ட அதன் தலைப்பு An Essay on the Principles of Translating the Holy Scriptures, with critical remarks on Various Passages, Particularly in reference to the Tamul Language. (1827) என்பது, இந்நூல் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு அடிப்படை நூலாக இன்றும் பயன்படக்கூடியது.

பண்டிதர்களுக்குங்கூட பப்ரிஷியஸ் வேதாகமம் புரியக் கடினமாகவே இருந்தது. வேதத்தில் கண்ட கிறிஸ்தவக் கருத்துக்கள் புதியவை என்பது மட்டுமல்லாமல், வேதம் சொல்மட்டத்தில் (Literal) மொழி பெயர்க்கப்பட்டிருந்ததும் முக்கியக் காரணம் என்பதை இரேனியஸ் அறிந்தார். மூலமொழிகளான எபிரேயமும் கிரேக்கமும் முற்றிலும் வேற்றுக் குடும்ப மொழிகளாதலால், அவை தமிழினின்றும் மிகவும் வேறுபட்டிருந்தன. அப்பண்பாடுகளும் வித்தியாசமானவை. எனவே வேதத்தை சொல்மட்டத்தில் மொழிபெயர்க்காமல், கருத்துக்களைக் கிரகித்து, பின்பு தமிழ் மரபு வழக்குகளில் வெளியிடல் அவசியம் என உணர்ந்தார். வேதாகமத்தின் முதல் பிரிவான பழைய ஏற்பாட்டின் நூல்கள் இன்றைக்கு சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பழைய எபிரேய மொழியில் எழுதப்பட்டவை. இரண்டாவது பிரிவான புதிய ஏற்பாடு கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாகும். வேதமொழிகளுக்கும் தமிழுக்கும் சொல் வரிசையிலேயே வேறுபாடு உண்டு. பின்வரும் எபிரேய வசனம் அதன் மரபு வரிசையில் ஆங்கிலத்தில் தரப்படுகிறது.

My son, do not reject your mother”s teaching இதை இந்த வரிசையிலேயே தமிழாக்கினால் என் மகனே தள்ளாதே உன் தாயின் போதகத்தை என்று வரும். இவ்வரிசை தமிழுக்கு இயல்பானதல்ல.

என் மகனே உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே என்பதே சரியாக இருக்கும்.

எந்தமொழிக்கும் இயல்பாக ஒரு சொல்வரிசை இருக்கும். மொழிக்கு மொழி இலக்கணங்கள் வேறானவை. ஆதலாலும், பண்பாட்டை ஒட்டியே மொழிகள் வளர்வதாலும் அந்தந்த மொழிக்கென்று தனியான மரபு வழக்குகளும் மாறும். இது ஆங்கிலத்தில் இடியம் எனப்படுகிறது. எனவே ஒரு மொழிபெயர்ப்பாளன், மூலம், இலக்கு இரண்டின் இடியம்களையும் கவனமாக ஆராய்வது அவசியம். தமது மொழிபெயர்ப்புக் கொள்கைகள் என்ற நூலில் இரேனியஸ் இக்கருத்தை வலியுறுத்துகிறார். இக்கட்டுரையில் சொல்லப்படும் எடுத்துக்காட்டுகள் எல்லாமே அந்நூலினின்று பெறப்பட்டவைதான்.

முதலாவதாக அவர் தமிழின் தொன்மை பற்றிக் கூறுகிறார். தமிழின் பழமைக்கு இணையாக ஐரோப்பாவில் மொழிகள் இல்லை என்கிறார். இலக்கியம், இலக்கணம், நிகண்டுகள் கண்டதும், நாள்பட்ட வழக்குகளை உடையதுமான தமிழில் சொல்வழி மொழிபெயர்ப்பு செய்வது சரி ஆகாது. ஆனால் வளர்ச்சி பெறாத மொழிகளில் சொல்வழி மொழிபெயர்ப்புச் செய்யலாமென அவர் கருதுகிறார். ஆங்கிலம், ஜெர்மானியம் ஆகிய மொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்பட்ட காலத்தில் இந்த மொழிகள் அதிக வளர்ச்சி அடையாமல் இருந்தமையால் சொல்வழி மொழிபெயர்ப்பு நன்கு எடுபட்டுக் கொண்டது. பழம்பெரும் மொழியாகிய தமிழில் சொல்வழி மொழி பெயர்த்தால், வேதம் புரிந்து கொள்ளப்படாது என்பது மட்டுமல்ல, தவறாகவும் புரிந்து கொள்ளப்படலாம்.

கருத்து மொழிபெயர்ப்பில் சொற்களையும் சொற்றொடர்களையும் மட்டுமல்ல, வாக்கியங்களையும் முன்னும் பின்னுமாய் மாற்றியமைக்க வேண்டிவரும். எபிரேயத்தில் ஒரு நிகழ்ச்சியின் முடிவை முதலில் சொல்லிவிட்டு, அதற்குக் காரணமான நிகழ்ச்சிகளைப் பின்னால் சொல்வது மரபு. உதாரணம். மத். 6:20,21

20: பரலோகத்தில் உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.

21: உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கின்றதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (இது எபிரேய வரிசை) தமிழ் மரபுப்படி

21: உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (ஆதலால்)

20: பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். என்று வரும்

இன்னுமொரு உதாரணம். மாற்கு. 8:33.

எனக்குப் பின்னாகப் போக சாத்தானே நீ தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்குக்கேற்றவைகளைச் சிந்திக்கிறாய். இது எபிரேய மரபு – தமிழ் மரபு வரிசைப்படி சொல்வதானால் வாக்கியங்கள் மாற வேண்டும்.

நீ தேவனுக்கேற்றறவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கேற்றவைகளைச் சிந்திக்கிறாய். (ஆதலால்)
எனக்குப் பின்னாகப் போ சாத்தானே என்றிருக்கவேண்டும்.

அடுத்ததாக கிரேக்க மொழியில் Paranthesis எனப்படுவது. இதைத் தமிழில் இடைக்கூற்று என்று சொல்லலாம்.

யோ: 2:9 ஏசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நிகழ்ச்சியில் திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்பது தண்ணிரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததே அன்றி என்பது இடைக்கூற்று எபிரேய வரிசைப்படி இது 9 ஆம் வசனத்தொடக்கத்தில் சொல்லப்பட்டு விட்டது. அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 10 ம் வசனத்தில் வரும் ஆனால் நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்று கூற்றுக்குப் பின்னரே “திராட்சைரசம் எங்கேயிருந்து வந்ததென்பது…” வரவேண்டும். அப்போது தெளிவு கூடும். மூலவரிசைகளை மாற்றத் தயங்கினால் தெளிவு கிடைக்காது.

எபிரேயம் வளம் மிகுந்த மொழி என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக மாமிசம், உடல், உணவுக்குப் பயன்படும் இறைச்சி, மனிதர், மனுக்குலம், உடலெடுத்த அனைத்து உயிரிகள், ஆன்மிகம் என்ற சொல்லுக்கு எதிர்பதமாக இப்படிப் பலவற்றைக் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. சந்தர்ப்பத்தை கவனியாமல் மாமிசம் என்ற ஒரே சமன்பாட்டைப் பயன்படுத்தியிருப்பது சரியல்ல.

எபிரேயத்தில் இன்னொரு சொல் பிள்ளை, மகன், புத்திரன் பேரப்பிள்ளைகள், வழித்தோன்றிய சந்ததியார், பெற்றோரின் குணாதிசயங்களைக் கொண்டவர் என்று பல அர்த்தங்களைத் தரும். சந்தர்ப்பத்தை கவனித்துப் பொருத்தமான சமன்பாடுகளைப் போட வேண்டும். தமிழ் வேதாகமத்தில் காணப்படும் இருட்டின் புத்திரன், கேட்டின் மகன் எகிப்தின் புத்திரர், இடிமுழக்கத்தின் மக்கள் ஆகியன தமிழ் வழக்குகளுக்கு ஒத்துவருவன அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார்.

தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் என்றிருப்பது இஸ்ரவேல் வம்சத்தாரில் ஒருவன் என்றிருப்பதே தமிழ் வழக்காகும். “ஊராரின் மனிதருடைய குமாரத்திகள்” என்றிருந்ததை இரேனியஸ் “ஊராரின் பெண்கள்” என்று மாற்றினார்.

“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்பது “உம்முடைய ஆளுகை வருவதாக” என்றிருக்க வேண்டும். ஏனெனில் இவ்விடத்தில் ராஜ்யம் பூகோள ராச்சியத்தைக் குறிப்பதல்ல. (சங் 145:13 ல் உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது என்பது சரியாகவே இருக்கிறது)

லூக். 13:13 “தேவனை மகிமைப்படுத்துகிறது” என்பது சரி அல்ல. தேவனை மகிமைப்படுத்த கேவலம். மனிதன் யார்? எனவே தேவனைத் துதிக்க அல்லது அவர் மகிமையை விளங்கப்பண்ண என்றிருக்க வேண்டும். மத் 2:2 “அவருடைய நட்சத்திரம்” என்பது “அவரிடம் வழிநடத்திச் செல்லத் தோன்றிய நட்சத்திரம்” என்றிருக்க வேண்டும். இல்லையெனில் “ஜென்ம நட்சத்திரம்” என்று தமிழர்கள் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும்.

ரோ. 1:17, 3:21 தேவநீதி என்பது சரி அல்ல. தேவன் ஒப்புக் கொள்ளக்கூடிய நீதி? என்றிருக்க வேண்டும். இல்லையெனில் தேவனுடைய குணங்களில் நீதி ஒன்று என்று தவறாக அர்த்தப்படுத்தப்படலாம். (மத். 6:33 “முதலாவது தேவனுடைய நீதியைத் தேடுங்கள்” என்பது சரியாக இருக்கிறது) மற்றும் சங். 45:7 ஆனந்த தைலம் என்பது ஆனந்தமென்னும் தைலம் என்றும்., யோ. 6:58 ஜீவ அப்பம் என்பது ஜீவனைக் கொடுக்கிற அப்பம் என்றும் இருக்க வேண்டும் என்கிறார்.

a, the என்ற இடைச்சொற்கள், “articles, தமிழில் கிடையாது. யோ. 7:40 ஆங்கில வேதாகமத்தில் (A.V) This is the Prophet என்பதை அழுத்தம் தருவதற்காக “மெய்யாகவே இவர் தீர்க்கதரிசி” என்று மொழி பெயர்த்திருப்பது சரி அல்ல; குறிக்கப்பட்ட அல்லது முன்னறிவிக்கப் பட்ட தீர்க்கதரிசி என்றிருக்க வேண்டும் என்கிறார். இப்படியாக உருபு மயக்கம், முக்கிய வினைச்சொல்லைக் கண்டுபிடிக்க இயலாததால் விளைகின்ற குழப்பம், மூல மொழியில் தொக்கி நிற்பனவற்றை தமிழில் போதிய அளவு விளக்காமல் விடுவது, கடந்தகால, நிகழ்கால, வருங்கால குழப்பங்கள் என்று ஏராளமான குழப்பங்களை அவர் காட்டுகிறார். உதாரணமாக, யோவ: 10:8ல் “எனக்கு முன்னே வந்தவர்கள் எல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறீர்கள்” என்று நிகழ்காலத்திலிருப்பது “இருந்தார்கள்” என்று இறந்த காலத்தில் இருக்க வேண்டும். இவையெல்லாம் சொல்வழி மொழிபெயர்த்திருப்பதால் ஏற்படுகின்ற விளைவுகளே. மூலமொழியின் கருத்தை உள்வாங்கி இலக்கு மொழியின் மரபு வழக்குகளில் வெளியிடுகின்ற கருத்துமொழிபெயர்ப்பே புரிவதற்கு எளிதாகும் என விளக்குகிறார்.

தமக்கு தமிழ் மரபுவழக்குகள் எளிதில் அத்துபடியான காரணத்தையும் கூறுகிறார். ஆங்கிலம் அறவே அறியாத தமிழ்ப் பண்டிதர் நெல்லை திருப்பாற்கடல் நாதனிடம் தாம் தமிழ் பயின்றமையால் தான் மரபுவழக்குகள் படிந்தன எனச் சொல்லுகிறார். அவர் எழுதிய 300 பக்கங்கள் கொண்ட இலக்கண நூலில் அவர் சொல்லிலக்கணம், எழுத்திலக்கணம் இரண்டிலும் ஐரோப்பிய இலக்கண முறையைப் பின்பற்றாமல் தமிழ் இலக்கண முறையைப் பின்பற்றினார். எனவே அதைக் கற்ற ஐரோப்பிய மாணவர் தமிழைத் தமிழ் மரபிலேயே படித்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.

“கிறிஸ்தவத் தமிழ்” என்றொரு கேலிச் சொல் உண்டு. எபிரேய, கிரேக்க சொல்வரிசைகள், சொற் சேர்க்கைகள், சொற்றொடர்கள், வாக்கிய அமைப்புக்கள் முதலியவற்றைத் தமிழிலும் பயன்படுத்துவதுதான் கிறிஸ்தவத் தமிழ். வேதாகமம் அத்தகைய தமிழில் இருப்பதால் அதை ஊன்றிப் படிக்கின்ற கிறிஸ்தவர்களுக்கும் அந்தத் தமிழ் வந்துவிடுகிறது. சொல்வழி மொழிபெயர்ப்பில் அமைந்த பப்ரிஷியஸின் வேதாமகமே கிறிஸ்தவத் தமிழுக்குக் காரணம் என சபாபதி குலேந்திரன், 12. திலியாண்டர் ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

சபாபதி குலேந்திரனுக்குத் தமது தமிழ் வேதாகமத்தின் வரலாறு என்ற அரிய ஆராய்ச்சி நூலை கிறிஸ்தவத் தமிழில் தான் எழுத முடிந்திருக்கிறது. “வேதாகமத்தின் வரலாறு” என்ற தலைப்பே கிறிஸ்தவத் தமிழாக உள்ளது. தமிழ் வேதாகம வரலாறு என்பது தான் தமிழ் மரபு வழக்கு. History of the Tamil Bible என்ற சொற்றொடரில் உள்ள of the என்ற உருபு “இன்” என்று மொழிபெயர்க்கப்பட்டு “வேதாகமத்தின்” என்று ஆகியிருக்கிறது.

இரேனியஸின் மற்றொரு முக்கிய கொள்கை நடை பற்றியது. தமிழ் உடைநடைக்கு இலக்கிய அந்தஸ்து இல்லாததாலும், அது போதிய வளர்ச்சியடைந்திராததாலும், கல்வி ஒரு சிலரின் ஏகபோகமாக இருந்தாலும் உரைநடை பற்றிய குழப்பம் அவர் காலத்தில் மிகுந்திருந்தது. இதுபோதாதென்று வீரமாமுனிவர் 10ம் நூற்றாண்டு உரைகாரர் உரைநடையை 18ம் நூற்றாண்டில் பழக்கத்துக்குக்கொண்டு வந்திருந்தார். பண்டிதர் சிலர் அதை விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டனர். அந்நடை வேதாகமன மொழிபெயர்ப்புக்கு ஏற்றதல்ல என இரேனியஸ் முடிவு செய்தார். ஆனால் பேசுந்தமிழை அப்படியே எடுத்துக் கொண்டால் அதுவும் நல்லநடையாகாது என உணர்ந்தார். எனவே இலக்கணப்படுத்தப்பட்டதும், கொச்சை நிக்கப்பட்டதும், சந்தி பிரிக்கப்பட்டதும், மரபுத் தமிழ் வழக்குகள் பாதுகாக்கப்பட்டதுமான ஒரு பேச்சு நடையில் அவர் வேதமொழிபெயர்ப்புச் செய்தார். கற்றோர் களிக்கும் வகையிலும் மற்றோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் நடை அமையவேண்டும் என்பது அவர் கருத்து. இத்தகைய நடையில் தான் படைப்பிலக்கியமும் சாத்தியமாகும்.

இரேனியஸ் சொந்தமாகவும் இந்நடையில் பல நூல்கள் எழுதினார். பிரித்தானிய ஆட்சியில் அப்போது ஆங்கிலத்தைப் புகுத்துவதும், இந்திய மொழிகளைப் புறக்கணிப்பதும் நடக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் இரேனியஸ் கல்வியின் பயிற்றுமொழி தாய் மொழியாக இருக்க வேண்டுமெனக் கருத்துக் கொண்டிருந்தார். பல பாடநூல்கள் தமிழில் எழுதினார். முதன்முறையாக தமிழில் பாடநூல்கள் எழுதியது அவர் தான். அதுபோல சந்திபிரிக்கப்பட்ட சொற்றொடர்களை முதன் முதலாக பரவலாக அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.

இரேனிஸின் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொன்று மரியாதைப் பன்மைப் பிரயோகம் ஆகும். அதாவது வேதாகமத்தில் சொல்லப்படுகிற பெரியோரை ஏகவசனமாய் ஒருமையில் குறிப்பிடாமல் தமிழ் மரபுப்படி மரியாதைப் பன்மையில் குறிப்பிடுவதாகும். ஆனால் அவர் மொழிபெயர்ப்பைப் பரிசோதித்த ஆங்கிலிக்கன் குருமார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழின் மரியாதைக் குறியீடுகள் அச்சமுதாயத்துப் பெருந்தலைகளின் ஆணவ அகம்பாவத்தின விளைவுகள்தாம்; அவற்றை வேதாகம பாத்திரங்கள் மீது சுமத்தினால் அவற்றை நிரந்தரப்படுத்துவது போலாகும் என குழுவினர் வாதிட்டனர். ஆணவ அகம்பாவம் பற்றி அவர்கள் கூறியது உண்மையே. அவர்கள் கூற்றில் தார்மீக வலு உள்ளது என்பது மறுக்கமுடியாதது. மேல்சாதியினர் கீழ்சாதியினருக்கு இழைத்த கொடுமைகளை மொழியின்மீதும் ஏற்றினர். தேவையற்ற மரியாதைப் பன்மைகள் மொழியைக் காயப்படுத்திய நிரந்தரவடுக்கள். வடக்கன் குளத்துப் திருச்சபையில் 19 ம் நூற்றாண்டில் நடந்த சாதியப் போராட்டத்தைக் குறித்து ஜே.எஸ். தேவசகாயம் பிள்ளை பின்வருமாறு எழுதுகிறார். “வெள்ளாளரில் எந்தப் பையனுங்கூட சாணாரில் எந்தச் சிமானையும் பார்த்து ஏகவசனமாய்ப் பேசுவதே இயல்பு” இதுதான் அன்றைய நிலைமை. இந்தப் பழக்கம் ஏற்பட்டு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் அப்பழக்கத்தைப் பேச்சிலும், எழுத்திலும், இலக்கியத்திலும் ஒப்புக்கொண்டு சிரணித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

ஆயினும் மரியாதைக் குறியீடுகளைச் சேர்ப்பதே சரியாகும் என இரேனியஸ் கருதினார். எழுதப்படுவது எதுவும் புரிந்து கொள்ளப் படுவதற்காகத் தான், சரியோ, தவறே ஒரு சமுதாயத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் வழக்குகளை நீக்கினால் புரிதல் முற்றாக நிகழாது என்பது அவரது வாதம். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் ஹென்ரி பவர் வேதாகமம் மோசேயை “அவன், இவ்ன, என்று தான் குறிப்பிடுகிறது. “கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்? என்று மோசே கேட்டான்” என்று ஏகவசனத்தில் இருக்கிறது. “எகிப்து நாட்டில் பலதலைமுறைகளாக அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர் என்ற பெரும் மக்கட்தொகுதியை விடுவித்து அவர்களை 40 வருஷமாய் வனாந்தரத்தில் நடத்தி வந்த ஒரு பெருந்தலைவர் மோசே. அவரை ஒருமையில் குறிப்பிட்டால் தமிழர்கள் அந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியையும் மோசேயின் தீரச்செயலையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகும் அல்லவா?

அடுத்து வேதாகமம் மூலமொழிகளினின்றே மொழியாக்கம் பெறவேண்டும் என்பதும் இரேனியஸின் கொள்கையாகும். பிரித்தானிய சாம்ராச்சியத்துக்குட்பட்ட நாடுகளிலெல்லாம் அப்போது வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழிகளான எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் அறிவு இல்லையானால் அவர்கள் பெரும்பாலும் ஆங்கில வேதாகமத்தினின்று மொழிபெயர்ப்பு நடத்தினர். இது நேரடி மொழிபெயர்ப்பு அல்ல. ஒரு மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாகும். ஒரு மொழிபெயர்ப்பு ஒரு நாளும் மூலத்துக்குச் சமமாகாது. எந்த ஒரு மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு கூடுதல் குறைபாடுகள் உள்ளதாகிவிடும். ஆயினும் வேறுவழி இல்லாத பட்சத்தில் துணைநூல்கள், வேதவிளக்க நூல்கள், அகராதிகள் ஆகியவற்றின் துணையோடு வேதவாஞ்சை மிக்க ஒரு அறிவாளி நல்ல மொழிபெயர்ப்பைச் செய்வதும் சாத்தியமே என்கிறார்.

இப்போது சாகித்திய அகாதமி முதலிய நிறுவனங்களில் இந்திய மாநில மொழிகளுக்கிடையே கூட நேரடி மொழிபெயர்ப்பு எப்போதும் நடப்பதில்லை. இடைப்பட்ட, பெரும்பாலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து செய்யும் மொழிபெயர்ப்பாகவே மாநில மொழியாக்கங்கள் அமைய நேர்கிறது.

அடுத்ததாக, பிழைதிருத்தம் பற்றிய கொள்கை, ஜேம்ஸ் அரசன் (1611) ஆங்கில ஆக்கம், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மானிய ஆக்கம் முதலியவற்றில் பிழைகளும், பாடபேதங்களும் மலிந்திருந்தன. இரேனியஸின் காலத்தில் பல பழைய தோல்பிரதிகளும், பாப்பிரஸீகளும் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, வேத அறிஞர்கள் அந்த வேதங்களில் கண்ட பிழைகளைச் சுட்டிக் காட்டத் தொடங்கினர். தமிழில் செய்யப்பட்டு வருகிற வேதாகமம் பிழைகள் திருத்தப்பட்ட வாசகங்களை உடையனவாக இருக்கவேண்டுமென இரேனியஸ் விரும்பினார். அல்லவெனில் ஒளியை மறைப்பது போலாகும் என எடுத்துக்கூறினார். ஆனால் குழுவினர் அவர் சொல்லை ஏற்கவில்லை.

இரேனியஸின் வேதம் பொழிப்புரையாக உள்ளது எனவும் குழுவினர் கூறினர். வேறு பண்பாட்டைச் சேர்ந்த இலக்கு மொழியில் பெயர்க்கும்போது சில வாசகங்களை விரித்துரைக்க வேண்டி வந்திருக்கலாம்; ஆனால் தாம் பொழிப்புரை செய்யவில்லை என இரேனியஸ் பதில் கூறினார். தமது கருத்தை நிலைநாட்ட சில உதாரணங்களும் தருகிறார்.

எபிரேய மூலத்திலிருந்து தமிழுக்கு:

சொல்வழி மொழிபெயர்ப்பு : ஈசாக்கு அன்பு காட்டினான் ஏசா. ஏனெனில் மானிறைச்சி அவன் வாயில்.

கருத்து மொழிபெயர்ப்பு : ஈசாக்கு ஏசாவிடம் அன்பு காட்டினான். ஏனெனில் ஈசாக்கு உண்பதற்கு ஏசா மானிறைச்சி கொணர்ந்தான்.

பொழிப்புரை : ஈசாக்கு யாக்கோபைப் பார்க்கிலும் ஏசாவிடம் அதிக அன்பு கொண்டிருந்தான். ஏனெனில் வேட்டைக்காரனான ஏசா ஈசாக்குவுக்கு மிகப் பிடித்தமான மானிறைச்சி கொணர்ந்து தந்து கொண்டிருந்தான். இப்படியாக சரியான மொழிபெயர்ப்புக்கும் பொழிப்புரைக்கும் உள்ள வேறுபாட்டை அவர் குழுவினருக்கு எடுத்துக் காட்ட வேண்டியதிருந்தது.

இரேனியசுக்கும் அவரது நண்பர் பெர்னார்டு ஷ்மிட்டுக்கும் தூய தமிழ் பற்றிய கருத்துகள் இருந்தன என்றே தோன்றுகிறது. பப்ரிஷியஸின் மொழிபெயர்ப்பில் காணப்படும் சில சொற்களை இரேனியஸ் திருத்தியிருப்பதைக் குறிப்பிடவேண்டும். உதாரணமாக

பப்ரிஷியஸ் இரேனியஸ்
இந்தலோகம் இவ்வுலகம்
பஷா பஸ்கா
வெளிச்சம் ஒளி
இரகசிய அறிவிப்பு வெளிப்படுத்தினவிசேஷம்

ஜெர்மானியரான ஷ்மிட் இரேனியசோடு இணைந்து பத்தாண்டுகள் நெல்லையில் பணிபுரிந்தார். ஜெர்மானியில் அப்போது மொழியியல் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வம் தொடங்கியிருந்தது. ஷ்மிட் தென்னிந்தியா எங்கும் சுற்றிப் பார்த்தவர். நடந்தும், குதிரை மீதும் பயணித்த அவர் மக்களோடு பேசிப்பழகி அவர்கள் மொழிகளை அறிந்து கொண்டார். தமிழர் குறித்தும் தமிழ்மொழி குறித்தும் அவர் சில கருத்துகளை வெளியிட்டார்.

இரேனியஸ் ஒரு நாட்குறிப்பேடு எழுதி வந்தார் அவர் காலமான பின்பு அவர் மகன் அதில் கண்ட பல தகவல்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். நூலின் தலைப்பு Memoir of C.T.E. Rhenius by His son என்பது. அந்நூலில் பெர்னார்ட் ஷ்மிட்டின் மொழி குறித்த கண்டுபிடிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஷ்மிட் கூறியது. தென்னிந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அவை சமஸ்கிருதத்தினின்று வேறுபட்டவை. தமிழ் சமஸ்கிருதத்தைச் சார்ந்த ஒரு மொழி அல்ல. அதன் சொற்களும், இலக்கணமும், வாக்கிய அமைப்பும், சமஸ்கிருதத்தினின்று முற்றிலும் மாறுபடுவது. தமிழ்மொழி காகேசியன் மற்றும் இமாலய மக்களின் மொழியிலிருந்தே வந்திருக்க வேண்டும். இக்கருக்களை கால்டுவெல் தமது Comparative Grammer (ஒப்பிலக்கணம்) என்ற புகழ்மிக்க நூலை வெளியிடுவதற்கு முன்பே சொல்லப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலத்தீனுக்கும் தமிழுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும், தமிழர்கள் ஆதியில் பௌத்தர்களாக இருந்தனர் என்றும் ஷ்மிட் கூறியுள்ளதாக அந்த நாட்குறிப்பு நூல் தெரிவிக்கின்றது.

இரேனியஸின் மொழிபெயர்ப்பை அடுத்து இலங்கை ஆறுமுக நாவலரின் உதவியுடன் வெளியிடப்பட்ட பரிசோதனைப் பதிப்பு என்று வழங்கப்பட்ட ஒரு வேதாகமதிருத்தம் வெளிவந்தது. இதில் ஆறுமுக நாவலர் மிகுதியாக சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்திருக்கிறார் என்ற காரணத்தைக் கூறி சென்னை வேதாகம சங்கம் அந்த திருத்தத்தையும் நிராகரித்துவிட்டது. தமிழ் நாட்டில் தனித்தமிழ் இயக்கத்தின் நதிமூலம் இதுவேயாகும்.

மொழி என்பது ஒரு மாபெரும் சக்தி. மூலமொழிக்கும் இலக்கு மொழிக்கும் மிகுதியான வேறுபாடுகள் இருந்தாலும்கூட, இதற்கு முன்பு இலக்கு மொழியில்இல்லாத புதுமையான படிமங்களாயினும் குறியீடுகளாயினும் அவற்றையும் துல்லியமாகக் கொணர்ந்துவிடக்கூடிய திறன் மொழிக்கு உண்டு. மொழி என்பதன் மேதாவிலாசம் அது என மொழி பெயர்ப்பு வல்லுனர் டாக்டர் E.A. நைடா கூறுகிறார். 16 மூலமொழி, இலக்குமொழி இரண்டிலும் நல்ல புலமையும் தேர்ச்சியும் உடையவர்கள் மொழிபெயர்த்தால், மொழிபெயர்ப்பு மூலம் போலவே அமையக்கூடும். ஒரு வேத மொழிபெயர்ப்பாளருக்குரிய திறமைகள் இரேனியஸிக்கு இயல்பாகவே வாய்த்திருந்தன. மொழிபெயர்ப்புக் கலையை ஒரு வரமாகப் பெற்றிருந்தார். பப்ரிஷியசின் வேதாகமத்தைத் திருத்தியமைத்தபோது, அவர் ஒரு சிறந்த தமிழ் உரைநடையை தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்தார். முந்தைய மொழிபெயர்ப்பை அவர் திருத்தினார் என்பதை விடவும். ஒரு புதிய மொழிபெயர்ப்பை அவர் செய்தார் என்பதே பொருத்தமாக இருக்கும். எபிரேயம், கிரேக்கம், லத்தீன், ஆகிய வேத மொழிகளுடன் நவீன ஐரோப்பிய மொழிகளிலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது. தமிழில் சொந்தமாக நூல்கள் எழுதிய தேர்ச்சியும் இருந்தது. உலகின் பலவிடங்களில் நடந்து வந்த வேதாகம மொழிபெயர்ப்புகள் குறித்து வேதாகம சங்கங்கள் வெயிட்ட அறிக்கைகள் மூலம் அறிந்து வந்தார். இறையியல் ஞானமும் இருந்தது. மொழிபெயர்க்க எடுத்துக் கொள்ளும் நூல்மீது மொழிபெயர்ப்பாளனுக்கு தீவிரப்பற்றுவேண்டும். இரேனியசுக்கு வேதவாஞ்சை அதிகம். வேதத்தை ஒளி, ஜீவவார்த்தை என்று வலவிடங்களில் குறிப்பிடுகிறார். நான்கு சுவிசேடங்களும், அப்போஸ்தலர் நடபடிகளும் கொண்டிருந்த அவரது புதிய ஏற்பாடு மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டது. 1825ல் 10000 பிரதிகளும் 1827 ல் மீண்டும் 5000 பிரதிகளும் அச்சடிக்கப்பட்டன. சுமார் 20 ஆண்டுகள் கழித்து மறுபதிப்புகளும் வந்தன.

இரேனியஸ் 1838ம் ஆண்டு ஜூன் மாதம் 5 ம் நாள் தமது 48வது வயதில் உயிர் நீத்தார். அவர் இறக்கும் முன் எழுதிய கடைசிக் கடிதம் வேதாகமப் பிரசுரிப்புக்கு நிதியுதவி கேட்டு எழுதியது தான்.

 

குறிப்புகள் :

1. ஆசிரியர் வைத்த தலைப்பு அழிந்துவிட்டதால் அண்டிறிக்ஸ் அடிகளார் இயற்றிய Flos Sanctorum என்ற நூல் “அடியார் வரலாறு” என்ற தலைப்பில் ச. இராசமாணிக்கம் சே.ச. அவர்கள் மீண்டும் பதிப்பித்தது. தமிழ் இலக்கியக் கழகம். 1967.

2. E. Arno Lehmann, It began at Tranquebar (translated from German) CLS 1956. ch XV.

3. Bror. Tiliander : Christian and Hindu Terminology. Uppasala 1974 Almqvist & Wiksell Tryckeri AB. P. 31.

4. The State of Christianity in India during the early nineteenth century, Letters by Abbe. A.J. Dubois, Ed. Shada Paul, New Delhi, Assoicated publishing HOusoer. pp. 21, 22, 40-42, 95-112.

5. மயிலை சினி வேங்கடசாமி : கிறிஸ்தவமும் தமிழும் பக். 103.

6. சபாபதி குலேந்திரன்: கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு. இந்திய வேதாகம சங்கம் A/1, மகாத்மா காந்தி ரோடு, பங்களூர் 1967, அத்தியாயம்.7.

7. டி.ஏ. கிறிஸ்து தாஸ்: இரேனியஸ் பக். 42, 43.

8. Frenz Albrecht : Hermann Gundert, Life and work Sudduetsche Verlogsgesellschaft Ulm 1991. (German).

9. R.E. Fryksenberg and P.V. Pierard, Rhenius unpublished article.

10. Memoir of the Rev. C.T.E. Rhenius. by his son London, James Nisbet & Co Berners Street & John Johnstone, Edinburgh Ch VIII P. 232.

11. An Essay on the Principles of Translating the Holy Scriptures, with critical remarks on Various Passages, Particularly in reference to the Tamul Language, by C.T.E. Rhenius, Nagercoil, printed at the Mission Press 1827.

12. சபாபதி குலேந்திரன் கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு. இந்திய வேதாகம சங்கம், பங்களூர். பக். 85.

13. Bror Tiliander : Christian and Hindu Terminology, Uppsala 1974. p. 113

14. An Essay on the Principles of Translating etc., C.T.E. Rhenius 1827. PP. 46/48.

15. சவரிராயபிள்ளை சர்னலும் காகிதங்களும் பதிப்பு ஜே. எஸ். தேவசகாயம் பிள்ளை 1899. மூன்றாவது வால்யூம் பக். 291.

16. Dr. E.A. Nida : The Bible Translator. Vol. 25 No. 3 July 74, Words and Thoughts P. 343.

17. சரோஜினி பாக்கியமுத்து : விவிலியமும் தமிழும் 90. (The Dept of Research & Publications, Gurukul Lutheran Theological College & Research Institute, Madras – 10 & APATS – India ) அத்தியாயங்கள் 11-17.

Authorதமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *