என்னைப் பற்றி நான்….

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நானும் என் இரு சகோதரர்களும் ஒழுக்கத்திலும் பக்தி வழிகளிலும் தேவனை அறிந்துகொள்ளும் அறிவிலும் கிறிஸ்தவ திருச்சபை வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டோம்.

பெற்றோர்

இலங்கையில் நாற்சதுர சுவிசேஷ சபை  (Foursqure Gospel Church in Sri Lanka) போதகராகவும் Life Bible இறையியல் கல்லூரி ஆசிரியராகவும் கடமையாற்றிய போதகர் இன்பநாதன் இம்மானுவேல் – குளோரி அன்னபுஷ்பம் ஆகியோருக்கு மூத்த மகனாக ஆகஸ்ட் 2ம் திகதி 1982 இல் பிறந்தேன்.

தேடல்
நான் எனது மாணவ பருவத்திலேயே மரணத்தைக் குறித்து அதிகமாக பயந்ததோடு தேவனை அறிந்துகொள்ள வேண்டுமென்பதில் அதிக ஆர்வம் காட்டினேன். அந்த சிலாக்கியத்தை நான் என் பெற்றோரின் மூலமாக பெற்றுக்கொண்டேன். ஆம். நான் தேவனை தேடியமைக்கு முக்கியமான காரணமாக இருந்தது எனது பெற்றோரின் வளர்ப்புமுறைதான்.

வாழ்விடங்கள்
அவ்வாறு நான் பிறந்த வளர்ந்த நாட்களில், அநேகர் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இறந்தார்கள். ஊழியத்திற்கான பணி இடைமாற்றம் காரணமாக சில காலம் உள்நாட்டு அகதி முகாமொன்றில் வாழவும் நோிட்டது. அவ்வாறாக திருகோணமலை. முதுார். வவுனியா. கிளிநொச்சி. கொழும்பு. களுத்துறை பகுதிகளில் வாழ்ந்தோம்.

குறிப்பிடத்தக்க சம்பவங்கள்
ஒரு தடவை என் தலைக்கு மேலாக ஒரு ஹெலிகொப்டர் கீழே மக்களை நோக்கி வெடிகளைச் சுட்டபடி பறந்து சென்றபோதும், ஐந்தடி தூரத்தில் செல்குண்டுகள் வெடித்து சிதறியபோதும், என்னுடன் பாடசாலையில் ஒன்றாக கற்ற நண்பர்களில் சிலர் தவறான வழிநடத்தலின் கீழ், துப்பாக்கியை தூக்கவும் பழிவாங்கவும் சண்டையிடவும் தங்களை ஒப்புக்கொடுத்தபோதும் அதிசயமாய் ஆண்டவர் என் சிறுபிராயம்முதல் பாடசாலை நாட்களிலும் என்னைப் பாதுகாத்தார். அவர் ஒருவரே என்னையும் வழிநடத்தினார்.

மார்க்க நெறி
எனது 10 வது வயதில் முழு வேதாகமத்தையும் வாசித்து முடித்தேன். 1996ம் ஆண்டு எனது 14 வது வயதில் தண்ணீர் ஞானஸ்நானத்தை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருடைய நாமத்தில் பெற்றுக்கொண்டேன். அவ்வருடமே தூயஆவியானவர் தரும் அபிஷேகத்தையும் பெற்றேன். அப்போது நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. விரைவில் தபால்வழிக்கூடாக பல வேதபாடங்களை பல நிறுவனங்களில் பூர்த்தி செய்தேன்.

கல்வி
இலங்கையில் பல இடங்களில் பாடசாலை கல்வியை தொடர்ந்த நான் தென்னிந்தியாவின் சாயர்புரம் Pope Memorial மேற்படிப்பையும் (+2), பாளையங்கோட்டை துாய யோவான் கல்லூரிக்கூடாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பாடத்தில் இளங்கலைப் பட்டம் (B.Science) பெற்றுக்கொண்டேன்.

பக்தியும் பணியும்
அந்நாட்களில் திருநெல்வேலி கிறிஸ்துவுக்கு இளைஞர் இயக்கத்தில் உதவி தொண்டனாக சேவையாற்றியதோடு. மாணவர் மலர் – Youth Digest – வான்மலர் ஆகிய கிறிஸ்தவ சஞ்சிகைகளில் அடிக்கடி கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகளை எழுத தேவன் வழிநடத்தியிருந்தார். அத்துடன்  Indian YFC , FMPB, விஷ்வவாணி, Student for Jesus, Blessing Mission, Campus Cruside &  AG Church, Church of God ஆகிய கிறிஸ்தவ இயக்கங்களுடன் சேர்ந்து செயற்பட்டேன்.

மீண்டும் இலங்கையில்
தொழில் மீண்டும் இலங்கை திரும்பியதும், பணம் சம்பாதிப்பதற்காக மாத்திரம் வெளிநாடு செல்வதை பெற்றோர் தடுத்து நிறுத்திய காரணத்தால். இருவருட காலம் வியாபார தொழிலை மேற்கொண்டதோடு உள்ளுர் சிங்கள மொழியில் பேசவும் கற்றுக்கொண்டேன். இனிவரும் நாட்களில் நான் இலங்கையில் தொடர்ந்தும் இருப்பதே தேவ சித்தம் என்பதை உணர்ந்துகொள்வது எனக்குக் கடினமாக இருக்கவில்லை.

ஊழிய அழைப்பு
எனது வாழ்வின் அநாதி தேவ திட்டத்தின்படி வாழ்வின் திருப்புமுனை வந்தது. என் ஆண்டவரின் அழைப்பை உணர்ந்தேன். அந்தவகையில், என்னை மீண்டும் தேவ கரங்களில் ஒப்புக்கொடுத்ததோடு வாழ்வில் தேவ அழைப்பை உணர்ந்து 2005 ஒக்டோபரில் சத்தியவசனம் என்று அன்புடன் அழைக்கப்படும் Back to the bible ஊழியத்தில் இணைந்து கொண்டேன். அங்கு தமிழ்பணி சஞ்சிகை, புத்தக, தியானநுால் எழுத்தாளராகவும் தொகுப்பாளராகவும்  பணியாற்ற தொடங்கினேன்.

இறையியல் கல்வி
எழுத்து பணிக்கு என் ஆண்டவர் அழைத்திருந்தபடியினால் இறையியல் கல்வி அவசியமென உணர்ந்து பகுதிநேரமாக கற்க ஆரம்பித்தேன். 2015 ம் ஆண்டு கொழும்பு இறையியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (B.Theology)பெற்றுக் கொண்டேன். தொடர்ந்தம் ஈழத்து தமிழ்மொழி மூல எழுத்து ஊழியப் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.

திருமணம்
2012ம் ஆண்டு ஜனவரியில் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவந்த நியோமியை திருமணம் செய்து கொண்டேன். 2013 ம் ஆண்டு மகன் எலைஜா ஜகாசியேலும் 2016 ம் ஆண்டு மகள் கேசியா மிசேலும் பிறந்தார்கள். அவ்வருடம் நாற்சதுர சுவிசேஷ சபையில் போதகராக அபிஷேகம் பண்ணப்பட்டு உடன் ஊழியராக பணியாற்றுகின்றேன்.

ஊழியங்கள்
எனது முதன்மை ஊழியம் எழுத்துப்பணியாக இருந்தாலும். நான் கிறிஸ்தவ ஆலோசனை மற்றும் வேத பாடங்களை போதிக்கும் போதகராகவும் சிறுவர்கள் மத்தியில் சிறுவர் ஊழியத்தை மனைவியோடு இணைந்து செய்யும் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றேன்.

உறவு
தேவன் என்னுடன் இடைபட்டு என் பாவங்களை மன்னித்தார் என்ற நிச்சயம் பெற்றுக்கொண்ட நான், தேவனுடனான உறவுக்குள் இன்னும் பலரை வழிநடத்த வாஞ்சிக்கின்றேன். சிறுவயதிலிருந்து பல வகைகளில் என்னைப் பாதுகாத்து. என் விரல்களை பழக்குவித்த என்  தேவன் தொடர்ந்து என்னை கைவிடாமல் வழிநடத்தி வருகின்றபடியினால் நான் அவருக்கு நன்றியைச் செலுத்துகின்றேன்.  இதை வாசிக்கும் நீங்களும் வாழ்வு தரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே நன்றிகளை ஏறெடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

முடிவு
என்னை இரட்சித்து, வழிநடத்தி, இம்மட்டும் வாழ வைத்த என் தேவனுடைய சித்தத்தின்படி இனியும் வாழ என்னை அர்ப்பணித்து என் மிகுதி வருடங்களையும் என் ஆண்டவருக்குச் சமர்ப்பிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

அன்புடனும் ஜெபத்துடனும்
இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்

mobile/sms/whatsapp: +94771869710 | web: www.Christawan.com | e-mail: [email protected]