8000 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915) மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 கிழமைகளில் தன் கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த வந்த ஃபென்னி க்ரொஸ்பி சிறு வயதிலிருந்து நான்கு சுவிஷேசப் புத்தகங்களையும், பழைய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களின் பெரும்பாலான பகுதிகளையும் மனனம் செய்திருந்தாள்.
14 வது வயதில் நியூயோர்க் நகரிலுள்ள குருடர் பாடசாலையில் பயில தொடங்கிய ஃபென்னி க்ரொஸ்பி அங்கு 8 வருடங்களாக மாணவியாகவும் பின்னர் 15 வருடங்களாக ஆசிரியையாகவும் இருந்தாள். இவள் தனது 8 வது வயதில் எழுதிய கவிதை “என்னால் பார்க்க முடியாவிட்டாலும் நான் எவ்வளவு சந்தோஷமானவள்’ என்று ஆரம்பமாகியது.
ஒரு தடவை கிறிஸ்தவப் பிரசங்கி ஒருவர் ஃபென்னி க்ரொஸ்பியிடம் “தேவன் உனக்குப் பல வரங்களைக் கொடுத்திருந்தாலும் பார்வையைக் கொடுக்காமலிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே” என்றார்.
ஃபென்னி க்ரொஸ்பியோ உடனடியாக “ நான் பிறந்த உடன் தேவனிடம் ஒரு கோண்டுகோள் விடுக்கக்கூடியதாயிருந்தால், நான் பிறவிக் குருடியாகவே இருக்க விரும்புகிறேன் என்றே கேட்டிருப்பேன்’ என்றாள்.
ஃபென்னி க்ரொஸ்பியின் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டு ”ஏன்?” என்று கேட்ட பிரசங்கியிடம் அவள் “நான் பரலோகத்திற்குச் செல்லும்போது என் இரட்சகர் இயேசுவைப் பார்ப்பதே என்னை முதலில் மகிழ்விக்கும் காட்சியாக இருக்கும்” என்று பதிலளித்தாள்.
குறைவுகளை நினைத்து கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஏதோ ஒரு குறைவு இருக்கின்றது. குறைவிலும் நாம் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்தது. 95 வருடங்களாகக் கண்பார்வையற்றவளாக வாழ்ந்த ஃபென்னி க்ரொஸ்பிதே தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கும் பாடல்களை எழுதுவதில் மனமகிழ்வுடன் ஈடுபட்டாள். சங்கீதக்காரனைப் போல, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே அவளது பெலனாயிருந்தது (சங் 34.4) நாமும் எத்தகைய நிலையில் இருந்தாலும் எப்போதும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். (பிலி 4.11)