கூட்டத்தோடு நிற்பது மனிதத் தன்மை, தேவனுக்காகத் தனித்து நிற்பதோ தெய்வத் தன்மை.
சாதாரண மனிதர்கள் தமது சக மனிதர்களைப் பின்பற்றி, கடல் அலையைப்போல நிலையற்ற வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால், உலக வாழ்வுக்கு எதிர் நீச்சலிட்டு இறைக்கொள்கையை உறுதியாகப் பின்பற்றுபவர் தனித்து நிற்பவராவார். உலகம் தரும் இலாபத்திற்காகவும், சுகபோகத்திற்காகவும் மனச்சாட்சியை மழுக்கி, சமூக மற்றும் சமயப் பகட்டுகளைப் பின்பற்றுவது மனித இயல்பு. இவையனைத்தையும் உதறிவிட்டு சத்தியம் மற்றும் கடமை என்னும் பலிபீடத்தின் மேல் ஏற்றி பலியிடுவதே தேவ பக்திக்கான வாழ்வாகும்.
அன்று, பாடுகளின் தழும்புகளோடு அப்போஸ்தலனாகிய பவுல், ரோம சாம்ராஜ்யத்தின் போதனைகளுக்கு விரோதமாக, மன்னர் நீரோவுக்கு முன்பாக குரல் கொடுத்தபோது, “நான் முதல் விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை. எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்” (2 தீமோ 4:16) என்று தனது அனுபவத்தைக் கூறினார் அல்லவா!
மகிமையான வெளிச்சத்தில் நடப்பதற்குப் பதிலாக, மங்கிப்போகும் இலைகளை ஆடையாக என்று மனிதன் தெரிந்தெடுத்தானோ, அன்றிலிருந்து சத்தியம் தடம்புரண்டு போயிற்று. தேவனோடு நடப்பதன் தனித்துவம் தணிந்துபோயிற்று.
பின்புவந்த நோவா பேழையைக் கட்டி, தனித்து பயணித்தான். மழையையோ வெள்ளத்தையோ காணாத அவனைப் பார்த்து உற்றார் உறவினர்கள் நகைத்தனர், பரிகசித்தனர். முடிவிலோ அவர்களே மரித்துப் போனார்கள்.
ஊர் தேசத்தில் வாழந்த ஆபிரகாமோ, ஊரோடு சேராமல், அந்நியனாய் சஞ்சரித்து, தனித்து தேவனை ஆராதித்தான். ஆனால், கூட்டமாக வாழ்ந்த கொடிய சோதோம் கொமோரா மக்களோ அக்கினிக்கு இரையாகினார்கள்.
ராஜ அரண்மனையில் இருந்தாலும், தானியேல் தனித்தே ஜெபம் செய்து, தனியாய் உணவருந்தினான். ஜெயம் பெற்றான்.
பிற மத பொய்த் தீர்க்கதரிசிகளின் கூட்டத்தின் நடுவே, எலியா தனித்து பலியிட்டு ஜீவனுள்ள தேவனுக்கு சாட்சி பகிர்ந்தான்.
எரேமியா தனித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து தனிமையில் அழுது புலம்பினான். உயிர்தப்பினான். கூட்டத்தினரோ சிறைபிடிக்கப்பட்டு பட்டயத்திற்கு பலியானார்கள்.
முழு உலகத்தையும் அன்புகூர்ந்த இயேசு கிறிஸ்துவோ தனித்தே மரித்தார்.
இப்படிப்பட்ட தனிமையின் பாதையில்தான் தமது சீடர்கள் நடக்க வேண்டும் என்பதைக் கூறும் விதத்தில் இயேசுவானர், “கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்” (மத் 7:14) என்று கூறினார்.
விசாலமான பாதையில் நடப்பவர்கள் குறுகலான பாதையில் செல்பவர்களை நடத்தும் விதத்தைக் குறித்து விளக்கிய இயேசு, “நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்ட படியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” (யோவா 15:19) என்று கூறினார்.
வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேல் என்ற சபையானது அன்று ஆபிரகாமைப் போற்றிய போதிலும், மோசேயைத் துன்பப்படுத்தியது. இராஜாக்கள் காலத்தில் காணப்பட்ட சபையானது மோசேயைப் போற்றிய போதிலும் தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுத்தியது. காய்பா காலத்திலிருந்த சபையானது தீர்க்கதரிசிகளைப் போற்றிய போதிலும் இயேசு கிறிஸ்துவை துன்பப்படுத்தியது. போப்பாண்டவரின் காலத்து சபையானது இயேசு கிறிஸ்துவைப் போற்றிய போதிலும் மெய்யான சீடர்களான பரிசுத்தவான்களைத் துன்பப்படுத்தியது.
இன்றும் பல்லாயிரம் பேர் சபையிலும், உலகிலும் தீர்க்கதரிசிகளையும், முற்பிதாக்களையும், அப்போஸ்தலர்களையும், இரத்தசாட்சிகளையும் போற்றி வருகின்றனர், செயலிலோ, உண்மையுள்ள ஊழியரை அகங்காரி என்றும் அறிவில்லாதவன் என்றும் நியாயந்தீர்க்கின்றனர். பழித்துரைக்கின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். நியாயந்தீர்த்து அவர்களை அழித்துவிடவே முற்படுகின்றனர்.
தமது பணம், நண்பர்கள், ஏன் சொந்த வாழ்க்கையையும் வெறுத்து, சத்தியத்திற்காக தைரியமாய் தனித்து நிற்கும் பெரியவரே, வாலிபரே இன்றையத் தேவை!
தனித்து நிற்பாயா? தேவனோடு நடப்பாயா?