ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3
வருடத்தின் இரண்டாவது மாதத்திற்குள் நம்மைப் பத்திரமாக நடத்திவந்து கர்த்தரை ஸ்தோத்திரிப்போமாக. நமது தேவன் உண்மையுள்ளவர் என்றால், அவருடைய வார்த்தைகளுக்கு நாம் உண்மைத்துவமாய் கீழ்ப்படிந்திருக்க வேண்டாமா! திரளான ஜனங்கள் கூடி வந்திருந்தபோதும், தம்மிடத்தில் வந்த சீஷர்களிடம் இயேசு பேச ஆரம்பிக்கிறார். ஆக, இயேசுவைப் பின்பற்றி நடக்கிற ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்தப் பாக்கியவசனங்கள் வாழ்வுக்கு உரமூட்டுகின்றனவாக இருக்கின்றன.
ஆவியில் எளிமை என்பது தரித்திரத்தைக் குறிக்கிறதா? இல்லை! “தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்” (மாற்.14:7) என்று இயேசு கூறினார். ஏனெனில், ஆண்டவர் அவர்கள்மீது மனதுருக்கம் கொண்டவர். ஆனால், இங்கே, பணம், பொருள் என்று உலக தேவைகளில் தரித்திரரை இயேசு குறிப்பிடவில்லை. மாறாக, ஆவியில் தரித்திரையே குறிப்பிடுகிறார். யாக்கோபு இதனை, “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ள வில்லையா?”(யாக்கோபு 2:5) என்று விளக்குகிறார்.
அப்படியானால் ஆவியில் எளிமை என்பது என்ன? சுய பெலத்தைச் சாராமல், தேவ கிருபையும், மனுஷர் தயவும் தேவை என்ற உணர்வுடன், இரட்சகர் இன்றி தான் ஒன்றுமில்லை என்கிற அறிவுடன், வாழ்வில் கிறிஸ்துவுக்கே முதலிடம் கொடுத்து, அவரை தனது ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, அவரையே சார்ந்து ஜீவித்து அவரையே தொழுதுகொள்ளும் இதயம் கொண்டவர்களே ஆவியில் எளிமையுள்ளவர்களாவர். இவர்கள் தேவனுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள். இதையே வேதத்திலும், “உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” (1கொரி.1:26-29) என்று பவுல் எழுதுகிறார்.
தான் தரித்திரனாக இருப்பதை உணராத லவோதிக்கேயா சபையைப்போல, “நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும் எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும்” (வெளி.3:7) கூறுவோர் பலர். இப்படிப்பட்டவர்களைத் தேவன் வாந்திபண்ணிப் போடுவார். நமது சுயபெலத்தில் சாராமல், கர்த்தரையே சார்ந்திருப்போம். ஆவியில் எளிமையாக வாழுவோம், அதுவே நமக்குப் பாக்கியம், அதுவே ஆசீர்வாதம்.
💫 இன்றைய சிந்தனைக்கு: நான் உலகத்தின் பார்வைக்கு ஏழையாகத் தெரிந்தாலும், என் ஆவியிலே நான் கர்த்தருக்குள் ஐசுவரியவானாக இருக்கிறேனா?
📘 அனுதினமும் தேவனுடன்.