ஒரு காட்டில் சிங்க ராஜாவின் பிறந்த நாள் . எங்கும் அலங்காரங்கள்,
ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகள். அதிகாலை விருந்து துவங்கி விட்டது . அன்று காட்டு மிருகங்கள் எல்லாமே குதூகலமாகத் திரிந்தன.
ஆனாலும். சிங்க ராஜா அதிகமாய் விரும்புவது அந்த நாளில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைத்தான் . ஓட்டப் பந்தயம் என்றால் ராஜாவுக்குக் கொள்ளைப் பிரியம் . ஒவ்வொரு மிருகத்துக்குமே ஓடுகிற திறன் அவசியம் என்பதை சிங்க ராஜா வலியுறுத்தியது .
ஓட்ட பந்தயத்தில் பல மிருகங்கள் கலந்து கொண்டாலும் , வழக்கமாய் முதல் பரிசு பெறுவது மான்தான் . மிகுந்த கவனத்துடன் புயல் காற்றைப் போல ஓடி முதல் பரிசை வென்றுவிடும் .
இந்த முறை முதல் பரிசு பெறுகிற மிருகத்துக்கு ‘ஓட்டத்தின் ராஜா ‘ என்ற சிறப்புப் பெயரும் சூட்டி ஒரு கிரீடத்தையும் அணிவிக்கப் போவதாக சிங்க ராஜா அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பைக் கேட்டதும் எல்லா மிருகங்களுக்குமே ஆசை வந்துவிட்டது . பின்னே ராஜாவால் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டு , முடிசூட்டப்பட வாய்ப்புக் கிடைப்பது எத்தனை பெரிய பாக்கியம் ?
வருடா வருடம் மான் ஜெயிப்பதையிட்டு நரிக்கு வயிறெல்லாம் எரிந்தது . இந்த வருடமும் மான் ஜெயித்தால் கிரீடம், பட்டம் எல்லாம் அதற்கே சொந்தமாகிவிடும் . “நான் ஜெயிக்கிறோனோ இல்லையோ மான் தோற்க வேண்டும் . அதற்கு இந்த ஆண்டில் ராஜா கொடுக்கும் பரிசு கிடைக்கவே கூடாது. ஏதாவது செய்து இம்முறை மானுக்கு வெற்றி கிடைக்காதபடி செய்துவிடவேண்டும் ” என்று சதித்திட்டம் ஒன்றைத் தீட்டியது .
கடந்த ஆண்டில் மானைத் தோற்கடிக்க அதன் ஓடுபாதையில் முள்ளைப் போட்டது. வழியில் கல்லை வீசி வைத்துப்பார்த்தது . ஒரு தேளை வழியில் காத்திருந்து கொட்டச் சொன்னது . என்ன செய்தும் பயனில்லை. மானின் கால் வேகமாக துள்ளி ஒடியது. எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தும் மானிடம் அது எடுபடவில்லை. இம்முறை வேறொரு வகையில் யோசித்தது நரி.
போட்டிக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது . திடீரென்று நரிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது . உடனே ஓடிப்போய்த் தன் நண்பன் பாம்பை சந்தித்தது . பாம்பும் நரியைப் போலவே வஞ்சக புத்தி கொண்டதுதான் . நரி , பாம்பிடம் தனது திட்டத்தை விவரித்தது. பாம்பும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டது . மான் போட்டிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இடத்துக்குப் பாம்பு சென்று மானிடம் பேச்சுக் கொடுத்தது. ” நண்பா வழக்கம் போல இந்த வருஷமும் நீதான் ஜெயிக்கப் போற. ராஜா கொடுக்கிற பரிசு உனக்குத்தான் ” என்றது. மானுக்கோ சந்தோஷம் .
“நன்றி நண்பா” என்றது. பாம்பு சொன்னது, “நீ ஓடுற அழகைப் பார்க்க தான் நான் வந்தேன். கால் தரையில படாம , காத்துல பறக்குற மாதிரி நீ ஓடுற ஓட்டம் இருக்கே! அதுக்கே ஒரு தனிப் பரிசு கொடுக்கணும் . ஒட்டகச்சிவிங்கி ஓடும் பாரு பப்பரப்பான்னு காலைப் பரப்பிக்கிட்டு . கழுதை ஓடுறதைப் பாரேன் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை தலையைத் தூக்கி காள் காள்னு கத்திக்கிட்டு . நீர்யானை பத்தி சொல்லவே வேண்டாம் . நாலு பேரு ஓட வேண்டிய இடத்துல அது மட்டுமே ஆட்டி ஆட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு கிடக்கும் . உன்னை மாதிரி விதிமுறையை மதிச்சு, அழகா யாருமே ஓடுறதே இல்லை . நீ வேணா கவனிச்சுப் பாரேன் . சரி. நண்பா போட்டி ஆரம்பிக்கப் போகுது . வாழ்த்துக்கள் ” என்று சொல்விட்டுக் கிளம்பியது .
மானுக்கு ரொம்பப் பெருமையாக இருந்ததுடன் , புதிய செய்தியாகவும் இருந்தது. “பாம்பு சொன்ன மாதிரி மற்றைய மிருகங்கள் எப்படி ஓடுதுன்னு பாக்கணும் ” என்று நினைத்துக் கொண்டது .
பந்தயம் துவங்குவதற்கான மணி ஒலித்தது . மிருகங்களெல்லாம் பரபரப்பாக மைதானத்தில் கூடின . நரி இந்த முறை ஓடுதளத்தில் எந்த சூழ்ச்சியும் செய்யாததால் மானுக்கு அடுத்த ஓடுதளத்தில் நிற்காமல் இரண்டு இடங்கள் தள்ளியே நின்றது . ஓட்டப் பந்தய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிங்க ராஜாவும் கொஞ்ச தூரம் அவைகளுடன் ஓடுவதற்காக வந்தார். யானை பிளிறி ஓட்டப் பந்தயத்தைத் துவக்கி வைத்தது .
மின்னலைப் போலவும் , வில்லில் இருந்து புறப்படும் அம்பு போலவும் மிருகங்கள் பாய்ந்து ஓடின . மானும் தன்னுடைய வழக்கமான வேகத்தை ஆரம்பித்தது. சிறிது நேரம் ஓடிய பின் பாம்பு சொன்னது நினைவுக்கு வந்தது . சொல்லி வைத்தாற்போல அதற்கு இந்தப் பக்கம் காண்டா மிருகமும், அந்தப் பக்கம் ஒட்டகச்சிவிங்கியும் ஓடிக் கொண்டிருந்தன. பாம்பு சொன்னது சரிதான் . இரண்டுமே ஓடுவது ஒரு ஒழுங்கே இல்லாமல் வேடிக்கையாகத்தான் இருந்தது . சற்று தொலைவில் கழுதையும் கண்ணில் பட்டது . அதுவும் பாம்பு சொல்லியிருந்தபடியே அவ்வப்போது கனைத்தபடியேதான் ஓடிக் கொண்டிருந்தது . மானுக்கு இவற்றையெல்லாம் பார்த்து அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது .
இப்போது மான் , ஓடிக் கொண்டிருந்த எல்லா மிருகங்களையும் நோட்டமிட்டது . எதுவுமே ஒழுங்காகவே ஓடவில்லை . திடீரென்று மானுக்குத் தான் ஓட்டத்தில் பின்தங்கி இருக்கிறோமென்ற உணர்வு வந்தது . பதறியடித்து வேகத்தை துரிதப்படுத்தியது . அதற்குள் சிறுத்தை வெற்றி இலக்கை எட்டிவிட்டது .
மானுக்குக் கண்கள் எல்லாம் இருண்டுவிட்டது . இத்தனை வருடமாய்க் காத்து வந்த வெற்றிக் கோப்பை பறிபோய்விட்டது . அத்துடன் சிறப்பாய்க் கிடைக்க வேண்டிய கிரீடமும் , விருதும் கிடைக்கவில்லை.
பாம்பும் , நரியும் நகைத்தன. அதை மான் பார்த்தது. “பாம்போட பேச்சைக் கேட்டு மத்தவங்க எப்படி ஓடுறாங்கன்னு பார்த்து இப்ப என்னோட ஓட்டத்துல தோத்துப் போயிட்டேனே ! ” என்று அழுதபடி , அவமானம் தாளாமல் அந்த இடத்தை விட்டே ஓடிப்போனது .
என் அன்பு செல்லமே!
மற்றவர்களின் ஓட்டத்தை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டால் உனக்கான ஓட்டத்தில் தோற்றுபோவாய். இந்த உத்தியைத்தான் சத்துரு கையாண்டு நல்ல ஓட்டக்காரர்களையும் விழத்தள்ளி விடுகிறான்.
கலாத்தியர் 6 : 1 கூறுகிறது. ” சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு “.
நம்மைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
“சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார் “. யாக்கோபு 5 :9