குட்டிக் கதை
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால் ஏன் வைன் குடிக்கக்கூடாது?’
சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான்.
அவர் பழங்களைச் சாப்பிடும்போது அதை வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். சாது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.
‘என்னப்பா அப்படிப் பார்க்கிறாய், நீ இன்னும் சாப்பிடவில்லையா?’ என்றார்.
‘உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?’ என்றான் சீடன்.
‘நிச்சயமாக, சந்தேகம் பொல்லாதது, அதை உடனேயே நிவர்த்தி செய்துவிடவேண்டும், இல்லாவிட்டால் அது மனிதரையே அழித்துவிடும், கேள் மகனே’ என்றார் சாது.
‘நீங்கள் இந்த திராட்சைப் பழங்களைச் சாப்பிடுகிறீர்களே, அது மனிதருக்குத் தீங்கு விளைவிக்குமல்லவா?’ என்றான் சீடன்.
‘பழங்கள் சாப்பிடுவது எனக்குத் தவறாகத் தெரியவில்லையே’ என்றார் சாது.
‘அப்படி என்றால் திராட்சைப் பழத்தில் இருந்து வடித்தெடுக்கும் சாறுதானே வைன் என்னும் பானம், அதை அருந்தக்கூடாது என்று ஏன் எல்லோரும் உபதேசம் செய்கிறார்கள்.
அதை அருந்தினால் மட்டும் ஏன் தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள்?’ என்றான் சீடன்.
‘உண்மைதான், எதுவுமே வேறு உருவம் பெறும்போது, அல்லது அதன் தன்மை மாறும்போது அதனால் ஏற்படும் பலாபலனும் மாறிவிடும். திராட்சைப் பழத்தின் சாற்றைப் புளிப்படைய வைத்து அதன் தன்மையை மாற்றுவதால் அது மனிதரை வெறிக்கச் செய்து நிலை தடுமாற வைத்துவிடுகிறது. அதனால்தான் மதுபானம் தீமை விளைவிக்கும் என்கிறார்கள்’ என்றார் சாது.
‘அதெப்படி, பழம் சாப்பிடலாம் என்றால் அதன் சாற்றைக் குடிப்பதும் தவறில்லை என்றல்லவா எடுக்க வேண்டும். சாற்றைக்குடித்தால் வெறிக்கும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.’ என்று வாதாடினான் அந்த சீடன்.
சாது அருகே நின்ற மற்றைய சீடர்களைப் பார்த்தார். ஒரு சிலர் அந்தச் சீடன் சொல்வது சரியாய் இருக்குமோ என்பது போன்ற சந்தேகத்தோடு குருவைப் பார்த்தார்கள்.
நெருப்பு சுடும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நெருப்பைத் தொட்டுத்தான் பார்க்கவேண்டுமா?
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷமே போதுமே என்பதை உணர்ந்து கொண்ட சாது அவர்களை வெளியே அழைத்துச் சென்று ஒரு தண்ணீர் தொட்டியருகே அந்தச் சீடனை உட்காரச் சொன்னார். ஏனைய சீடர்களைப் பார்த்து அவனது தலையிலே ஒரு பிடி மண்ணை அள்ளி ஒவ்வொருவராகப் போடச் சொன்னார். அவர்கள் மண்ணைப் போடும்போது நோகிறதா என்று சாது கேட்டார். சீடனோ அலட்சியமாய் இல்லை என்று பதிலளித்தான்.
அதன் பின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரைக் கிண்ணத்தில் எடுத்து ஒவ்வொருவராக அவனது தலையிலே ஊற்றச் சொன்னார். அதற்கும் அந்தச் சீடன் நோகவில்லை என்றே அலட்சியமாகப் பதிலளித்தான்.
‘அடுத்து என்ன செய்வது?’ என்று சீடர்கள் குருவிடம் கேட்டார்கள்.
அருகே அடுக்கி இருந்த செங்கட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து அவனது தலையிலே போடச் சொன்னார். சீடர்கள் செங்கட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிக் கொண்டு அந்தச் சீடனுக்கு அருகே வந்தபோது அந்தச் சீடன் தலையிலே கையை வைத்துத் தடுத்தபடி பயந்துபோய் துடித்துப் பதைத்து எழுந்து ஓடிவந்து சாதுவிடம் ‘குருவே புரிந்து கொண்டேன்’ என்று மன்னிப்புக் கேட்டான்.
சாது சிரித்துவிட்டுச் சொன்னார், ‘மண்ணைத் தனியே போட்டபோது நோகவில்லை என்றாய் தண்ணீரைத் தனியே ஊற்றிய போதும் நோகவில்லை என்றாய், ஆனால் அந்த இரண்டையும் ஒன்றாய்க் கலந்த கலவைதானே செங்கட்டி, அதை உன்தலையிலை போட்டால் மட்டும் எப்படி நோகும் என்கிறாய்?’ என்றார்.
‘குருவே உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன், விதண்டா வாதத்திற்காக நான் அப்படி நடந்து கொண்டது தப்புத்தான், என்னை மன்னித்து விடுங்கள்’ என்றான் சீடன்.
‘நல்லது மகனே, தீயதைக் கண்டால் விலத்திக் கொள்வதும், நல்லதைத் தெரிந்து கொண்டு வாழப்பழகிக் கொள்வதும் உன்னைப் பொறுத்தது. ஏனென்றால் உன்னுடைய எதிர்காலம் உன்னில்தான் தங்கியிருக்கிறது’ என்று சீடனுக்குப் புத்திமதி சொன்னார் சாது.
என் அன்பு வாசகர்களே,
சந்தேகம் என்பது மிக்கொடிய நோய் ஒரு முறை அந்த நோய் தொற்றிக்கொண்டால் நாம் விட வேண்டும் என்று நினைத்தாலும் அது நம்மை விடாது. இந்த நோய் குடும்பத்தில் வந்ததென்றால் அந்த குடும்பத்தையே சீரழித்து விடும். வேலை ஸ்தலத்தில் இந்த நோய் ஏற்ப்பட்டால் அது நம் வேலையை மாத்திரமல்ல அங்கு பணிபுரிகின்ற அனைவரையும் நிச்சயம் பாதிக்கும்.
இவ்வாறு பாதிப்பை ஏற்ப்படுத்துகிற அந்த நோயை எவ்வாறு அழிப்பது???. அந்த சந்தேகத்திற்கு ஆளான மனிதனிடமே நேரடியாக சென்று அதை தீர்த்துக்கொள்வது தான். ஏனெனில் மற்ற மனிதர்களிடம் போய் விசாரிக்கும் பட்சத்தில் அது மேலும் சந்தேகத்தை ஏற்ப்படுத்துமே ஒழிய அதை நிவிர்த்தி செய்யாது.
இக்கதையில் அந்த சீடன் தனக்கு உண்டான சந்தேகத்தை கேட்டு அங்கேதானே அதை தீர்த்துக்கொண்டான். அநேகர் தங்களுக்கு இருக்கின்றன சந்தேகங்களை தீர்க்காமல் வைத்து வைத்து இறுதியில் அவர்களையே ஒரு நோயாளியாய் மாற்றி விடுகிறது.
இயேசு கிறிஸ்து ஒரு சமயம் உவமைகளை போதித்துக்கொண்டிருந்த போது பரிசேயரும், ஏரோதியரும் அவரிடத்தில் வந்து இராயனுக்கு வரி கொடுக்கலாமா? கூடாதா? என்று கேட்டனர். அவர்களுக்கு அவர் பிரதியுத்திரமாக இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள் என்று மாறுத்தரம் கூறினார். அதன் மூலம் அவர்கள் சந்தேகம் நீங்கி தெளிவுள்ளவர்களாய் சென்றார்கள்.
இன்றும் அநேகர் போதகர்களை தங்கள் கேள்விகளால் வளைக்க வேண்டும் என்று இக்கதையில் அந்த சீடன் கேட்ட கேள்வியை போன்று அநேக கேள்விகளை கேட்பார். அவ்வாறு கேட்பவர்களுக்கு நன்றாய் அவர்கள் மனதில் பதியும் வண்ணம் நன்றாய் யோசித்து பதிலளிக்க வேண்டும் இல்லையேல் மாட்டிக் கொள்வோம். அவர்கள் கேள்விகளுக்கு சந்தேகத்தோடு பதிலளித்தால் மறுபடியும் மறுபடியும் வந்து நம் பதிலை வைத்தே நம்மிடம் கேள்வி தொடுப்பர்.
எனவே நாம் கொடுக்கின்ற பதில் ஒரு வார்த்தையாயினும் சந்தேகம் நீங்கி அவர்கள் தெளிவோடு செல்ல வேண்டும்.
அதுபோலவே நாம் தேவனிடத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் தேவன் நமக்கு கொடுத்த வாக்குறுதியை விசுவாசித்தால் வேதம் சொல்கிறது,
23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மாற்கு 11:23
எனவே தேவனை சந்தேகப்படாமல் விசுவாசிப்போம் தேவ ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!