தன் தந்தையை ஒரு உயர்தர உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் மகன்.அந்தப் பெரியவர் வயது முதிர்ந்தவர் மட்டுமல்ல கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சில பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டையிலும் வேஷ்டியிலும் மற்றும் தரையிலும் விழுந்து கொண்டிருந்தது. அருகிலிருந்து சாப்பிடுபவர்கள் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக்கொண்டனர்.மேலும் அந்தப் பெரியவரின் செயலைப் பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தனர்.
ஆனால் மகனோ மிகவும் அமைதியாக தன் தந்தை சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது தந்தையை ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டி இருந்த உணவுப்பருக்கைகளை துடைத்து, கழுவி, அவரது தலையை வாரி அவரது மூக்குக் கண்ணாடியைத் துடைத்து அவருக்கு அணிவித்தான்.
இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வர உணவகம் மிக அமைதியானது. மகன் கவுண்டருக்குச் சென்று பில்லுக்கு பணம் செலுத்தி தனது தந்தையை கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான். அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து “தம்பி எதையாவது விட்டு செல்கிறீர்களா” என்று கேட்டார்.
மகனோ “இல்லை! நான் எதையும் மிஸ் பண்ணவில்லை” என்றான். அதற்கு அந்த மனிதர் “இல்லை தம்பி! நீங்கள் இங்கு ஒன்றை விட்டு விட்டுச் செல்கிறீர்கள்; இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டு விட்டுச் செல்கிறீர்கள்….. அத்தோடு எல்லா பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டு விட்டுச் செல்கிறீர்கள்”என்றார். அப்பொழுது அந்த உணவகத்தில் இருந்த அனைவரும் எழுந்து கை தட்டி பாராட்டினர்…..
உன் வாழ்நாட்கள் நீடித்திருக்க உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.