வில்லியம் பூத் 1829ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டார். தன் அன்பு தந்தையை கொடிய விபத்தின் மூலம் சிறுவயதிலேயே இழந்தார். இதனால் சிறுவயது முதலே வறுமையில் வாடலானார். அப்போது இங்கிலாந்து தேசத்தின் பிரசித்திபெற்ற தேவஊழியரான ஜேம்ஸ் கெளகேயின் செய்தி பூத்தின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. இதனால் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டுமென்ற ஆவலும் உண்டாயிற்று.
தன் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்து இரவு 7 மணி வரையிலும் கடினமாக உழைத்துவிட்டு எஞ்சிய நேரத்தை மருத்துவமனைகளில் ஆதரவற்று இருப்போருக்கு தொண்டாற்ற செலவிட்டார். 1852ம் ஆண்டு கேத்தரின் அம்மையாரை மணந்து கொண்டார். பின்னர் வில்லியம் பூத் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் நற்செய்தியை அறிவிப்பதிலும் சமூகத்தொண்டாற்றுவதிலுமே செலவிட்டார்.
1861ம் ஆண்டு தமது 32ம் வயதில் சுவிசேஷ ஊழியத்தில் முழு ஆர்வத்துடன் இறங்கினார். உயிர்மீட்ச்சிக் கூட்டங்கள் நடத்தி அதன்மூலம் அநேகரை கிறிஸ்துவுக்காய் ஆதாயப்படுத்தினார். 1865ம் ஆண்டு லண்டனில் ஒரு சிறு கூட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கம், பிறகு அது இரட்சண்ய சேனை என்ற பெரிய இயக்கமாக மாறியது. 1877ல் வில்லியம் பூத் அவர்கள் இப்பெயரினை சூட்டினார்கள்.
இரட்சண்ய சேனை இயக்கம் நாளடைவில் வளர்ந்து அதன் கொடிகளை 55 தேசங்களில் ஏற்றியது. வில்லியம் பூத் பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார். இதனால் திக்கற்றோருக்கு உடனடி நிவாரணம் கிடைத்தது.
வில்லியம் பூத் திறந்தவெளி ஊழியம், குடிசைப்பகுதி ஊழியம், தொழிற்சாலை ஊழியம் என்ற பலவகை ஊழியங்களில் ஈடுபட்டார்.
ஆன்மீகப் பணியோடு சமூகப்பணியும் செய்து வந்த வில்லியம் பூத் 20.07.1912ம் ஆண்டு தன் 83வது வயதில் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
சிலருடைய வாஞ்சை புகழ் மீது!
வேறு பலரது நாட்டம் செல்வத்தின் மீது!
இன்னும் சிலரது ஆசை உல்லாசம், கேளிக்கை மீது!
ஆனால், என் வாஞ்சையோ ஆத்துமாக்களை சம்பாதிப்பதே!
more detail: https://en.wikipedia.org/wiki/William_Booth