அமெரிக்காவின் செவ்விந்தியன் ஒருவன் ஒரு வெள்ளை அமெரிக்கரை அணுகி, புகைப்பதற்கு கொஞ்சம் புகையிலை கேட்டான்.
அமெரிக்கர் தன் பாக்கெட்டினுள் கையைவிட்டு ஒரு கை நிறைய புகையிலை பொடியை அள்ளிக் கொடுத்தார்.
அடுத்தநாள் அந்த செவ்விந்தியன் அமெரிக்கரிடம் வந்து, “ஐயா நீங்கள் கொடுத்த புகையிலை பொடியினுள் ஒரு நாணயம் கிடைத்தது. அதைக் கொடுத்து விட்டுப் போக வந்தேன்” என்றான்.
அந்நாட்களில் சிறு நாணயத்துக்குக் கூட பெரிய மதிப்பு இருந்தது. ஆகையால் அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மனிதர், “ஏன் நீ அந்த நாணயத்தை உனக்காக வைத்துக்கொள்ளவில்லை” என்று கேட்டார்.
அந்த செவ்விந்தியன் தன் மார்பில் கைவைத்து, “இங்கே ஒரு நல்ல மனிதனும், ஒரு கெட்ட மனிதனும் தங்கியிருக்கிறார்கள். நல்ல மனிதன் என்னிடம், நீ புகையிலை மட்டும்தானே கேட்டாய், ஆகவே நாணயத்தை திருப்பிக் கொடுத்துவிடு என்றான். உடனே கெட்ட மனிதன், கவலைப்படாதே, அந்த மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ கொடுத்துவிட்டான்; இப்போது இது உன்னுடையது என்றான். நல்லமனிதன் மீண்டும் என்னிடம் நீ இதை வைத்துக்கொள்ளக் கூடாது என்றான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஆகவே உறங்கப்போனேன். நித்திரை வரவே இல்லை. இரவு முழுவதும் இந்த இரு மனிதர்களும் பேசிக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக நான் நல்ல மனிதனுடைய சத்தத்தைக் கேட்கத் தீர்மானித்தேன். ஆகவே இந்த நாணயத்தை அதன் உரிமையாளரிடம் சேர்க்கும்படி வந்தேன்” என்றான்.
இதை கேட்ட அந்த மனிதர் புகையிலை பிடிப்பதும் தவறு தானே அதை ஏன் உங்களுக்குள் இருக்கும் நல்ல மனிதன் சொல்லவில்லை என்றார். உடனே அந்த செவ்விந்தியர் வெட்கத்தால் தலை குனிந்தார்.
ஆம்! பிரியமானவர்களே, நமக்குள் இருக்கும் நம் மனசாட்சி சில வேளைகளில் நம்மை கண்டித்தாலும் பல வேளைகளில் அது உலக நீதிகளோடு ஒத்துவிடுகிறது.
நம் மனசாட்சியை வேதம் என்னும் கண்ணாடியில் பார்த்தால் தான் நிஜமாகவே நமக்குள் இருக்கும் நல்ல மனிதனின் நிலையை அறிந்துகொள்ள முடியும், பரிசுத்த ஆவியானவரின் மெல்லிய சத்தத்தை கேட்க முடியும். அவருக்கு கீழ்ப்படியும் போதுதான் நமக்குள் இருக்கும் நல்ல மனிதன் வெற்றி பெறுவான்.
“நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” -(ரோமர் 7:24)