”தன் குடும்பம் ஏன் முன்னேறவில்லை; தன் சபை ஏன் எழுப்புதலடையவில்லை?” என்று சோர்வோடு அமர்ந்திருந்த ஒரு பக்தன், தன் அருகில் ஒரு எறும்புக் கூட்டத்தைக் கண்டார்.
ஒரு சிறு சர்க்கரைக் கட்டியை ஏழு, எட்டு, எறும்புகள் ஒன்று சேர்ந்து இழுத்துச் செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தன. ஆனால் சர்க்கரைக் கட்டியோ முன்னேறவில்லை.
சர்க்கரைக் கட்டி சிறியதுதான். எறும்புகளின் பெலமோ மகா அதிகம். ஏன் சர்க்கரைக் கட்டி, நகரவில்லை? காரணத்தை அவர் கண்டுபிடித்தார். ஆம் , எட்டு எறும்புகளும், எட்டு இடத்திலிருந்து, எட்டுபக்கம் இழுத்துக் கொண்டிருந்ததால் முன்னேற முடியாமற் போய்விட்டது.
இந்த எட்டு எறும்பும் ஒன்று சேர்ந்து ஒரே திசையில் இழுத்துச் சென்றால், எவ்வளவு வேகமாக சர்க்கரை நகரும். இப்பொழுது அவருக்குப் புரிந்தது. தன் குடும்பத்திலும் ஒருமனப் பாடு இல்லாமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் செலவு செய்து, ஒருவரை ஒருவர் எதிர்ப்பாய் நிற்பதால்தான், முன்னேறவில்லை. தன் திருச்சபையில் எழுப்புதல் தாழ்ச்சிக்கு காரணமும் அதுவே, என்று கண்டுபிடித்தார்.
ஒருமனம் தேவை . குடும்ப ஜெபத்தில், தேவ பக்தியில், கர்த்தருக் கென்று கொடுப்பதில், ஒரு மனமும், ஏக சிந்தையும் தேவை. அன்று சீஷர்கள் ஒருமனமாய் கூடி வந்தபடியால், எருசலேமில் ஒரு பெரிய எழுப்புதலை ஏற்படுத்தினார்கள் (அப் 2:1).
ஒருமனமாய் ஜெபியுங்கள், அதோடு ஒருமனப்பாட்டிற்காக ஜெபியுங்கள்.
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுவது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? … அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்” (#சங்கீதம்133:1-3)