ஒரு இளம் பெண், தன் போதகரிடம் சென்று, “நான் எப்படி ஆடை அணிய வேண்டும்?” என்று கேட்டாள்.
அதற்கு அந்த போதகர், உன்னுடைய ஆடை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும். என்று சொல்ல நான் ஒரு தையல்காரன் அல்ல. நான் ஒரு தேவ ஊழியன்.
எனவே நான் கூறுவதை கேள், உன் வீட்டுக்கு அடுத்த தெருவில் இயேசு வசித்து வருகிறார் என்று வைத்துக்கொள். ஒரு நாள் தற்செயலாக இயேசு வழியில் உன்னை சந்தித்து “மகளே என் வீட்டிற்கு வா” என்கிறார் என்று வைத்துக்கொள்.
அவருடைய வீட்டிற்கு செல்ல எவ்வித ஆடை அணிவாயோ, அது போலவே ஒவ்வொரு நாளும் ஆடை அணி. இயேசுவோடு நடக்கும் போது எவ்வித ஆடையை அணியக்கூடாது என்று உன் மனசாட்சி உறுத்துமேயானால், அப்படிப்பட்ட ஆடையை எப்போதும் அணிய வேண்டாம் என்றார்.
நண்பர்களே! இது எவ்வளவு அறிவுபூர்வமான ஆலோசனை என்று பார்த்தீர்களா.
அனேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையிலும் இதை செய்யலாமா? இதை பார்க்கலாமா? என உங்கள் மனசாட்சியில் உறுத்துதல் வரும்பொழுது இந்த கேள்வியை கேளுங்கள்.
இயேசுவும் என் அருகே அமர்ந்து இந்த டிவி நிகழ்ச்சியை பார்க்க முடியுமா? இயேசுவும் என்னோடு கூட சேர்ந்து இந்த புத்தகத்தை வாசிக்க முடியுமா? ஒருவேளை முடியாவிட்டால், நானும் இதை பார்க்க மாட்டேன், இதை வாசிக்க மாட்டேன் என்று தீர்மானம் எடுங்கள்.
இயேசுவும் உங்களோடு கூட இருந்து பார்க்கவும், படிக்கவும் முடியும் என்றால், அது ஆபாசமானதாக இருக்காதல்லவா!
இயேசுவும் உங்களோடு சேர்ந்து இந்த செல்போனில் வரும் ஆபாச காட்சிகளை பார்க்க முடியாது என்றால், நானும் அதைப் பார்க்க மாட்டேன் என்று மனதில் ஒரு ஆழமான தீர்மானம் எடுங்கள்.
வேலை பார்க்கும் இடங்களில் இயேசுவும் உங்களோடு சேர்ந்து கோப்புகளில் கையெழுத்து இட முடியவில்லை என்றால், நானும் கையெழுத்திட மாட்டேன் என்று தீர்மானியுங்கள்! இயேசு தில்லுமுல்லு செய்த கோப்புகளில் கையெழுத்திடுவாரா?
நண்பர்களே, நம் சபையில் உள்ள ஒரு விசுவாசி நம்முடைய வீட்டிற்கு வருவாரேயானால், அவருக்கு முன்பாக மனைவியுடன் சண்டையிடுவோமா? இல்லையல்லவா.
ஆனால், நம்மோடு கூட இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை கவனித்து வருகிற ஆண்டவரை நாம் புறக்கணிப்பது ஏனோ?
ஒவ்வொரு நாளும் தேவ பிரசன்னத்தில் வாழும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொண்டோமேயானால், வேதத்தில் உள்ள அனைத்து கட்டளைகளையும் எளிதில் நிறைவேற்றிவிடலாம். ஆமென்!
நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. (ஆதியாகமம் 17:1)