ஒரு அழகான கிராமத்தில் ஆதவன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் அமைதியானவன். பள்ளிக்குச் செல்வான், நண்பர்களுடன் விளையாடுவான். ஆனால் அவன் மனதில் ஒரு சிறிய ஆசை இருந்தது.
“யாராவது என்னிடம், ‘உனக்கு என்ன பிடிக்கும்?’, ‘உனக்கு என்ன ஆசை?’, ‘நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?’ என்று கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று அவன் அடிக்கடி நினைப்பான்.
ஒரு நாள் பள்ளியில் அனைவரும் தங்கள் பிறந்தநாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் புதிய பொம்மைகள் கிடைத்ததாகச் சொன்னார்கள். சிலர் சுற்றுலா சென்றதாகச் சொன்னார்கள்.
ஆதவன் மட்டும் அமைதியாக இருந்தான்.
அவனுடைய ஆசிரியர் அதை கவனிக்கவில்லை. நண்பர்களும் கவனிக்கவில்லை.
அன்று மாலை வீட்டிற்கு வந்தபோது அவன் தோட்டத்தில் இருந்த சிறிய மரத்தின் கீழே அமர்ந்து மெதுவாக அழ ஆரம்பித்தான்.
“என்னை யாருக்கும் புரியவில்லையே…” என்று மனதில் நினைத்தான்.
அப்போது அவனுடைய பாட்டி அருகில் வந்து அமைதியாக அமர்ந்தார்.
“ஆதவா, ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்று மெதுவாகக் கேட்டார்.
அந்த ஒரு கேள்வியைக் கேட்டவுடன் ஆதவனின் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது.
“பாட்டி… யாராவது என்னைப் புரிந்துகொண்டால் போதும். நான் என்ன நினைக்கிறேன், என்ன உணர்கிறேன் என்று யாராவது கேட்டால் போதும்…” என்றான்.
பாட்டி சிரித்துக்கொண்டு அவன் தோளில் கை வைத்தார்.
“கண்ணா, உலகத்தில் எல்லோராலும் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. தலைவலி வந்தவனுக்குத்தான் அந்த வலி தெரியும். வயிற்று வலி வந்தவனுக்குத்தான் அதன் வேதனை தெரியும். அதுபோல நம் மனதில் இருக்கும் துக்கத்தையும் மற்றவர்கள் எல்லா நேரமும் புரிந்துகொள்ள முடியாது.”
நம்மை நன்றாய் புரிந்து கொள்வதற்கு, நம்முடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதற்கு, நமக்கு இது தேவை என்று சொல்லாமலேயே அவர்கள் தெரிந்து நமக்கு உதவுவதற்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினமே. ஆதவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
பாட்டி தொடர்ந்து சொன்னார்.
“ஆனால் ஒருவருக்கு எல்லாம் தெரியும்.”
“யார் பாட்டி?”
“நம்மைப் படைத்த தேவன்.”
“நீ பேசுவதற்கு முன்பே உன் மனதை அவர் அறிவார். நீ அழுவதற்கு முன்பே உன் கண்ணீரைப் பார்ப்பார். நீ சொல்லாமலேயே உனக்கு என்ன தேவை என்று தெரிந்திருப்பார். உன் அம்மாவின் கருவறையிலிருந்தே உன்னை அறிந்தவர் அவர்தான்.“
அந்த வார்த்தைகள் ஆதவனின் மனதை அமைதிப்படுத்தின.
அன்று இரவு அவன் முழங்காலிட்டு ஜெபித்தான்.
“இயேசுவே, என்னை எல்லாரும் புரிந்துகொள்ளாவிட்டாலும், நீர் என்னை முழுமையாக அறிந்திருக்கிறீர். என் மனதையும், என் ஆசைகளையும், என் கண்ணீரையும் அறிந்திருக்கிறீர். நன்றி.”
அந்த நாளிலிருந்து ஆதவன் தனியாக இருப்பதாக ஒருபோதும் உணரவில்லை.
ஏனெனில், அவனுக்கு எப்போதும் ஒரு சிறந்த நண்பர் இருந்தார் – தேவன்!
நம் வாழ்க்கையில் எல்லாராலும் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நம்மைப் படைத்த தேவன் நம்முடைய எண்ணங்களையும், ஆசைகளையும், கண்ணீரையும், துன்பங்களையும் முழுமையாக அறிந்திருக்கிறார்.
எந்தச் சூழ்நிலையிலும் அவரை நம்பி அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்.
“நான் உன்னைக் கைவிடுவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை.”
– எபிரெயர் 13:5
நினைவில் கொள்வோம்: ❤️
உலகத்தில் எல்லாராலும் நம்மைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆனால் தேவன் எப்போதும் நம்மை அறிந்திருக்கிறார்; அவர் நம்முடைய சிறந்த நண்பர்.

