இலங்கைக்கு புத்தர் விஜயம் செய்தாரா?

ஐதீகம் – புனைவு – மாயை – கற்பிதம் – கட்டுடைப்பு
-என்.சரவணன்

மகாவம்சத்தில் இடம்பெறும் இரு வருகைகள் பற்றிய புனைவுகளை பகிரங்கமாக விவாதிக்க வேண்டிய தருணம் இது. ஒன்று விஜயனின் வருகை; மற்றது புத்தரின் வருகை. இவை இரண்டும் “சிங்கள பௌத்த” பூர்வீக உரிமைகோரலுடன் எவ்வாறு பிணைந்திருக்கின்றன, எங்கே முரண்படுகின்றன என்பதை ஆராயாமல், இலங்கையின் இனவரலாற்றை புரிந்துகொள்ள முடியாது. இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும், ஏனையோர் வந்தேறு குடிகள், அந்நியர், கள்ளத் தோணிகள் என்றும் நிறுவப்பட்டுள்ள ஐதீகத்திற்கும் இக்கதையாடல்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மண்ணின் மைந்தர் யார், அந்நியர் யார் என்ற கருத்தாக்கம் இன்றும் அரசியல் மொழியில் உலாவருகிறது என்பதால், இதை தர்க்க ரீதியில் கேள்விக்குள்ளாக்குவது ஒரு வரலாற்று அவசியமாகிறது.

கௌதம புத்தர் தமது வாழ்நாளில் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார் என்ற கதையாடல், பல நூற்றாண்டுகளாக இலங்கையின் மத அடையாளத்தின் முதன்மைத் தூணாக நிலைநிறுத்தப்பட்டு வந்துள்ளது. மகாவம்சம், தீபவம்சம் ஆகிய பாலி மொழி வம்ச நூல்களிலும், பூஜாவலிய, சமந்தபாசாதிகா, பூத்சரண போன்ற பிற்கால நூல்களிலும் இடம்பெறும் இந்த மூன்று விஜயங்களும் மஹியங்கனை, நாககதீபம், களனி உள்ளிட்ட பதினாறு புனித தலங்களுடன் (சொலஸ்மஸ்தான) பிணைக்கப்பட்டுள்ளன. ஆயினும், நவீன வரலாற்று ஆய்வியல், தொல்லியல் தரவுகள், புவியியல் யதார்த்தம், பௌத்த மூல நூல்களின் தர்க்க ரீதியில் பரிசீலிக்கும்போது, புத்தர் இலங்கைக்கு ஒருபோதும் வரவில்லை என்ற முடிவே மிகத் தெளிவாக முன்வைக்கப்படுகிறது. இந்த முரண்பாட்டை வெளிக்கொணர்வதும், அது எந்த அரசியல்-மத நோக்கத்திற்காகக் கட்டமைக்கப்பட்டது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திரிபிடகத்தில் கூட சான்றில்லை

புத்தரின் வருகை குறித்த வாதத்தில் மையமான இடத்தைப் பெறவேண்டியது திரிபிடகமே. பௌத்த தர்மத்தின் மிகப் பழமையான, முதன்மையான மூல நூலாகக் கருதப்படுவது பாலி திரிபிடகம் ஆகும். புத்தர் காலமான உடனேயே கூடிய முதலாவது சங்காயனாவிலும், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது சங்காயனாவிலும் வாய்மொழியாகத் தொகுக்கப்பட்டு, பிற்காலத்தில் இலங்கையின் மாத்தளை அலுவிஹாரையில் ஏட்டுப் பிரதியாக எழுதப்பட்ட இந்நூல்தொகுப்பு, விநயப் பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. இதில் புத்தரின் 45 ஆண்டுகால தர்ம பிரசார வாழ்க்கையின் நாளாந்த நடமாட்டங்கள் வியப்பூட்டும் அளவு நுணுக்கமாகப் பதிவாகியுள்ளன.

திரிபிடகத்தில் என்கிற இந்த தர்க்கம் மிக முக்கியமானது, ஆனால் பெரும்பாலும் மத ஐதீக மோகத்தால் புறக்கணிக்கப்படும் சான்று.

சுத்த பிடகத்தின் நிகாயங்களில், புத்தர் தங்கியிருந்த விகாரைகள், சாவத்தியில் ஜேதவனம், அனாதபிண்டிகனின் ஆராமம், ராஜகிரகத்தில் வேளுவனம், வேசாலியில் மகாவனம் என பெயர் குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் சந்தித்த மன்னர்கள் (பிம்பிசாரன், பசேனதி), அவர் உரையாடிய தத்துவவாதிகள் பற்றி மட்டுமல்லாது பயணங்களின் காலமும் பருவமும் கூட சூத்திரங்களில் விவரிக்கப்படுகின்றன. குறிப்பாக மகாபரிநிப்பான சுத்தத்தில், புத்தரின் இறுதி எட்டு மாத பயணம் ராஜகிரகத்திலிருந்து வேசாலி, பாவா வழியாக குசிநாரா வரை நாளாந்த நடைபாதையாக, தங்கும் இடங்கள் உட்பட விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விரிவான, நுணுக்கமான பயணப் பதிவு வைத்திருக்கும் ஒரு மூல நூல், இலங்கைக்கு மூன்று முறை கடல் கடந்து சென்ற ஒரு பயணத்தை மட்டும் எப்படி தவிர்த்திருக்க முடியும். அவ்வாறு முற்றிலும் தவிர்க்கும் என்பது வரலாற்று ஆய்வியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது வெறும் ‘குறிப்பிடப்படவில்லை’ என்று எளிதாக கடந்துவிடக் கூடிய விடயமல்ல; விரிவான பதிவுக்கு நடுவே காணப்படுகிற குறிப்பிடத்தக்க வெற்றிடம் என்பதே இதன் ஆய்வியல் முக்கியத்துவம்.

மேலும், விநயப் பிடகத்தில் ‘மஜ்ஜிமதேச’ (நடுநாடு) என்ற எல்லைக்கோடு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. புத்தர் பிரசாரம் செய்த மஜ்ஜிமதேச எல்லைக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களை ‘பச்சந்திம ஜனபத’ (எல்லைப்புற நாடுகள்) என விநயம் தனியாகக் குறிப்பிட்டு, அங்கு பிக்குகள் ஒப்பந்த ஏற்படுத்தும் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கிறது. ஏனெனில் அப்பகுதிகளுக்குச் செல்வதே அரிதான, கடினமான ஒன்றாகக் கருதப்பட்டது. இலங்கை தீவு இந்த மஜ்ஜிமதேச எல்லைக்கு முற்றிலும் வெளியே, கடல் கடந்த தொலைவில் அமைந்திருந்தது. புத்தர் தமது சொந்த சங்கத்தின் விநய விதிகளே எல்லைப்புறமாகக் கருதிய ஒரு நிலப்பரப்பிற்கு மூன்று முறை தானே நேரடியாகச் சென்றார் என்பது, திரிபிடகம் தன்னளவில் கட்டமைக்கும் புவியியல் உலகத்திற்கு நேர் முரணானது. திரிபிடகத்தை உரையாடலின் மூல சான்றாக கொள்ளாமல் இக்கேள்வியை அணுகுவதே பிழை எனலாம்.

பாலி திரிபிடகத்தையும், சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தொடக்ககால பௌத்த ஆகமங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புத்தரின் நடவடிக்கைகள் அனைத்தும் வடஇந்தியப் பகுதிகளுக்குள்ளேயே அமைந்திருந்தன என்பது தெளிவாகிறது.

திரிபிடகத்தில் இல்லாத ஒரு செய்தி, 800 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் மட்டும் இடம்பெறுகிறது என்றால், அது முழுக்க முழுக்க இலங்கையில் உருவாக்கப்பட்ட பிற்காலப் புனைவு என்பதை வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பயண எல்லையும் புவியியல் யதார்த்தமும்

புத்தர் தமது 35வது வயதில் ஞானமடைந்து 80வது வயதில் பரிநிர்வாணம் அடையும் வரையிலான 45 ஆண்டுகால தம்ம போதனை வாழ்க்கையில், வடஇந்திய கங்கைச் சமவெளியில் அமைந்த மகத, கோசல, வஜ்ஜி, வத்ஸ முதலிய பதினாறு மகாஜனபதங்களை மட்டுமே சுற்றி வந்தார் என்பதை திரிபிடகமும் நவீன வரலாற்று ஆய்வுகளும் ஒருமித்து உறுதிப்படுத்துகின்றன. அக்காலத்தில் நீண்டதூரப் பயணங்கள் அனைத்தும் பாதயாத்திரையாகவே அமைந்தன; கடல் கடந்த பயணங்களுக்கான வழிமுறைகளோ அவசியமோ புத்தரின் பிரசார நோக்கத்திலோ இருந்ததாக எந்த மூலமும் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் வட இந்தியாவைவிட்டு வேறெங்கும் பயணித்ததோ, ஏன் கடல்கடந்ததோ கூட கிடையாது. பரந்த இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியை மட்டுமே சுற்றிய ஒருவர், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள, கடல் கடந்த ஒரு தீவுக்கு மூன்று முறை பயணித்தார் எனக் கூறுவது, அக்கால புவியியல் மற்றும் பயணச் சாத்தியக்கூறுகளுக்கு முற்றிலும் முரணானது.

அறிஞர்களின் மறுப்பு

புத்தரின் இலங்கை வருகை ஒரு புராணப் புனைவு என்பதை நிறுவுவதில் தொல்லியலாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. இலங்கை தொல்லியல் துறையின் பிதாமகரும், 1940 முதல் 1956 வரை தொல்லியல் ஆணையராகவும் பணியாற்றிய பேராசிரியர் சேனரத் பரணவிதான, புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார் என்றும் ஸ்ரீபாத மலையில் பாதம் பதித்தார் என்றும் கூறப்படும் கதைகளுக்கு எந்தவிதமான தொல்லியல் அல்லது கல்வெட்டுச் சான்றும் இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டார். தாய்லாந்து, மியான்மர் போன்ற பிற பௌத்த நாடுகளிலும் புத்தர் தங்கள் நாட்டிற்கு விஜயம் செய்து பாதம் பதித்தார் என்ற இதே வடிவிலான புராணக் கதைகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் கதைகளும் அத்தகைய மத நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் ஒரு பகுதியே தவிர, வரலாற்று உண்மைகள் அல்ல எனத் துணிச்சலாக வெளிப்படுத்தினார். அதனால் அவர் இப்புனைவை வரட்டுத்தனமாக நம்பும் பெருவாரி பௌத்தமக்களின் அதிருப்தியாளராக இன்னமும் நீடித்து வருகிறார்.

இதற்கு இணையான வலுவான சான்று அசோக சக்கரவர்த்தியின் பாறைக் கல்வெட்டுகளையும் தூண் கல்வெட்டுகளையும் குறிப்பிட முடியும். அசோகர் தமது ஆட்சிக் காலத்தில் பல தேசங்களுக்கு பௌத்த தூதுக்குழுக்களை அனுப்பியது பற்றியும், இலங்கைக்குத் தம் மகன் மஹிந்த தேரரை அனுப்பியது பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அசோகரின் எந்தவொரு கல்வெட்டிலும் புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்ற செய்தி இடம்பெற்றதில்லை. தீவிர பௌத்தராகவும் பௌத்த வரலாற்றைப் பேணுவதில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் இருந்த அசோகர், அத்தகைய ஒரு முக்கிய நிகழ்வை தம் கல்வெட்டுகளில் பதிவு செய்யாமல் விட்டிருப்பார் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

மகாவம்சமும் ‘தம்மதீப’ கருத்தாக்கமும்

மகாவம்சத்தின் தொடக்கத்தில் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வந்ததாகக் பதிவு செய்கிறது.

1. மஹியங்கனை வருகை: இயக்கர் (Yakkhas) பழங்குடியினரை விரட்டியடித்தல்.
2.
3. நாகதீபம் (யாழ்ப்பாணம்) வருகை: நாகர்களிடையே (Nagas) ஏற்பட்ட மணியாசனம் தொடர்பான முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதற்குத்தல்.
4.
5. கல்யாணி (களனி) & ஸ்ரீபாத வருகை: நாக அரசனின் அழைப்பை ஏற்று வந்து பாதச்சுவடைப் பதித்தல்.
6.
அதுவும் புத்தர் ஆகாயத்தில் பறந்து வந்தார் என்பது போன்ற மாயாஜாலக் தன்மைகொண்ட சித்தரிப்புகளையும் அறிவியல் வரலாறு நிராகரிக்கிறது.

அவர் அவ்வாறு வரவில்லை எனில், மகாவம்சத்தில் இக்கதைகள் ஏன் சேர்க்கப்பட்டன என்ற கேள்வி இயல்பாக நமக்கு எழும். இதற்கான விடை இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலிலும், ‘தம்மதீப’ (பௌத்தத்தைப் பாதுகாக்கும் புனித பூமி) எனும் கருத்தியல் கட்டமைப்பிலும் உள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், அனுராதபுரம் மகாவிகாரையில் மகாநாம தேரரால் எழுதப்பட்ட “மகாவம்சம்”, தென்னிந்தியப் படையெடுப்புகளும் உள்நாட்டு அரசியல் சீர்குலைவும் நிலவிய ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் தோன்றியது. அக்காலத்தில் ஆட்சியிலிருந்த பௌத்த அரசுகளின் அதிகாரத்தை நியாயப்படுத்தவும், மக்களிடையே ஒரு ஒருங்கிணைந்த மதத்தேசியவாத அடையாளத்தை உருவாக்கவும், வரலாற்றுடன் புராணங்களைக் கலந்து கட்டமைக்க வேண்டிய அரசியல் தேவை இருந்தது.

இலங்கையை ஒரு “தர்மதீவாக”, அதாவது பௌத்தத்தைப் பாதுகாக்கும் புனித பூமியாகக் கட்டியெழுப்ப வேண்டிய அரசியல், சித்தாந்தத் தேவை ஆளும் வர்க்கத்திற்கும் சங்க சமூகத்திற்கும் இருந்தது. இதற்காகவே, புத்தரே நேரில் வந்து இந்த மண்ணைப் புனிதப்படுத்தினார் என்ற கதையாடல் உருவாக்கப்பட்டது. இது பௌத்த அரசுகளின் அரசியல் ஆதிக்கத்திற்கும், ஆட்சி நியாயத்திற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு அரசியல் கருத்தியலாக நிறுவப்பட்டது. எனவே, இயக்கர்களை நாகரிகமற்றவர்களாகவும், பௌத்தத்தை ஏற்பவர்களை நாகரிகமடைந்தவர்களாகவும் பிரித்துக் காட்டியதன் மூலம், அக்காலகட்ட சமூகத்தில் நிலவிய முரண்பாடுகள் மத ரீதியான கதையாடல்களாக உருமாற்றப்பட்டன.

புத்தர் பரிநிர்வாணம் அடையும் தருவாயில், தேவேந்திரனிடம் (சக்ர தெவியோ) இலங்கையைப் பாதுகாக்குமாறு கோரியதாகவும், பௌத்த தர்மம் நிலைத்து நிற்கும் புனித பூமியாக இலங்கையைத் தேர்ந்தெடுத்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. பௌத்தத்தை ஐயாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்போகும் நாடு இலங்கை என்று புத்தர் அறிவித்ததாகவும் அதனைத் பேணுமுகமாக விஜயனையும் அவனது பரிவாரங்களையும் பாதுகாக்கும் படி சக்ர பகவானிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதே மகாவம்சத்தில் கூறப்படுகிறது. இதன் மூலம் ‘சிங்கள இனம் – பௌத்த மதம் – இலங்கைத் தீவு’ ஆகிய மூன்றும் பிரிக்க முடியாதவாறு இணைக்கப்பட்டன. தர்மத்தை (தம்ம) பாதுகாக்கும் கடமை ஒப்படைக்கப்பட்ட நாடு என்பதால் “தம்மதீப” (தர்மத் தீவு) என்று அழைக்கப்படுவதுடன் அதுவே “தம்மதீப” கோட்பாடாகவும் நாம் வரைவிலக்கணப்படுத்துகிறோம்.

அதன்படி புத்தரே நேரடியாக வந்து ஆசீர்வதித்த நிலம் என்பதால், இலங்கையின் மீதான பூர்வாதிக்கம் பௌத்தர்களுக்கே உரியது என்ற அரசியல் நியாயப்படுத்தல் சாத்தியமானது. பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி போன்ற நவீன வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவது போல, புத்தர் இலங்கைக்கு வந்தாரா இல்லையா என்பதைவிட, ‘புத்தர் இலங்கைக்கு வந்தார்’ என்ற கதையாடல் ஐந்தாம் நூற்றாண்டில் ஏன், யாருடைய அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதே முதன்மையான ஆய்வுக் கேள்வியாக இருக்க வேண்டும். தொல்லியலாளர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்தனவும், ‘தி பீப்பிள் ஒஃப் தி லயன்’ எனும் தமது ஆய்வுரையில், சிங்கள அடையாள வரலாறு எவ்வாறு பிற்கால அரசியல் தேவைகளால் மறுவடிவமைக்கப்பட்டது என்பதை விளக்குகிறார்.

மகாவம்சத்தின் கதையாடலில் இயக்கர்கள் நாகரிகமற்றவர்களாகவும் புத்தரின் வல்லமையால் விரட்டியடிக்கப்பட்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இது உண்மையான இயக்கர்களைப் பற்றிய நடுநிலைக் கதையல்ல; மாறாக, இலங்கையில் ஏற்கெனவே வாழ்ந்த சுதேசியப் பழங்குடி சமூகங்களை விளிம்புநிலைப்படுத்தி, வடஇந்தியாவிலிருந்து வந்த குடியேற்றவாசிகளின் மேலாதிக்கத்துக்கு வலு சேர்ப்பதற்காக எழுதப்பட்ட ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகும். அதிகாரத்தில் உள்ள வெற்றியாளர்களின் பார்வையில் எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகள் எப்போதும் தமது ஆதிக்கத்தை நியாயப்படுத்த மதப் புனிதத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இயக்கர் பற்றிய வரலாற்றுப் புனைவு ஏன்?

மகாவம்சத்தில் புத்தர் விரட்டியடித்ததாகக் கூறப்படும் ‘இயக்கர்’ யார் என்ற கேள்வி வெறும் புராணவியல் ஆர்வத்தின் அடிப்படையிலானதல்ல; அது இன்றைய இலங்கை அரசியலின் மையத்திலேயே அமர்ந்திருக்கும் ஒரு கேள்வி. மகாவம்சம் இயக்கர்களை நாகரிகமற்ற, மனிதத் தன்மையற்ற உயிரினங்களாகச் சித்தரிக்கிறது; புத்தர் தமது ஆன்மிக வல்லமையால் அவர்களை அச்சுறுத்தி, மந்திரப்படி விரட்டி, கடலுக்கு அப்பாலுள்ள கிரி என்னும் தீவிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒப்பீட்டு தொல்குடி ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது என்னவெனில், ‘இயக்க’, ‘நாக’ என்பன புராண உயிரினங்கள் அல்ல; இலங்கையிலும் தென்னிந்தியப் பகுதிகளிலும் பரவலாக வழிபடப்பட்ட, விவசாயத்திற்கு முந்திய அல்லது ஆரம்பகால விவசாய சமூகங்களைக் குறிக்கும் பழந்தமிழ்/திராவிட வழிபாட்டு அடையாளங்களே.

நாகதீபம், நயினாதீவு உள்ளிட்ட வடஇலங்கைப் பகுதிகளில் இன்றும் தொடரும் நாக வழிபாடு மரபுகள், தமிழ்ப் பாரம்பரியத்துடன் நேரடித் தொடர்புடையவை என்பதை மானுடவியலாளர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மகாவம்சம் இப்பழங்குடி/முன்னோடி சமூகங்களை ‘அரக்கத்தன்மையுடையோர்’ என சித்தரித்து, புத்தர் அவர்களை வெற்றி கொண்டதாகக் கூறுவது, வடஇந்தியாவிலிருந்து வந்த குடியேறிகளின் (விஜயன் பரம்பரையினர்) மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் ஒரு பிற்கால இலக்கிய உத்தியே தவிர, அக்கால இனவரைவியல் உண்மையைப் பிரதிபலிப்பதல்ல.

இந்தச் சித்தரிப்பு இன்றைய ‘மண்ணின் மைந்தர்’ அரசியலுடன் நேரடியாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதே இதன் தீவிரத்தன்மையின் நீட்சி எனலாம். இயக்கர்/நாகர் ஆகியோரை புத்தர் வருகைக்கு முன் ‘வெறும் விலங்குகளுக்கு நிகரானவர்கள்’ எனச் சித்தரிக்கும் அதே கட்டமைப்பு, சிங்கள பௌத்தரே இலங்கையின் ‘உண்மையான’, ‘முதன்மை’ வாரிசுகள் என்றும், ஏனையோர் பிற்காலத்தில் வந்தேறியவர்கள் என்றும் நிலைநிறுத்த பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தொல்லியல் – மொழியியல் சான்றுகள் காட்டுவது வேறு: இலங்கையின் மிகப் பழைய குடியேற்ற அடுக்குகளில் திராவிட மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய தொல்குடி இருப்பு உண்டு என்பதை பல தொல்லியலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இயக்கர்/நாகர் கதையை அரசியல் நோக்கிலிருந்து விடுவித்து, ஒரு தொல்குடி வரலாற்று ஆய்வுப் பொருளாகப் புதிதாக அணுகுவதே, தமிழில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முக்கிய ஆய்வுத் திசையாகும்.

மகாவம்சம் : உரை மாறுபாடுகள்

மகாவம்சம் என்பது ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு நிலையான நூலல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் தொடங்கப்பட்ட மூல மகாவம்சத்தைத் தொடர்ந்து, பன்னிரண்டாம், பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சூளவம்சம் என்ற பெயரில் தொடர் பகுதிகள் சேர்க்கப்பட்டன. வில்ஹெல்ம் கைகர் (Wilhelm Geiger) 1912இல் மேற்கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பு இன்றும் கல்விப் புலத்தில் நியமப் பதிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது ஒரு குறிப்பிட்ட பாலி கையெழுத்துப் பிரதி மரபை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு பிரதிகளுக்கிடையே மூன்று வருகைக் கதையின் விவரணையில் சிறு வேறுபாடுகள் இருப்பதை பாலி இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இக்கதை எந்தப் பிரதியில் முதன்முதலில் தோன்றுகிறது, எக்காலகட்டத்தில் அது கூடுதலாக விவரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது என்பதை உரை-விமர்சன முறையில் காலவரிசைப்படுத்தும் ஆய்வு இதுவரை நம் மத்தியில் மேற்கொள்ளப்பட்டதில்லை.

தர்க்கரீதியான முரண்பாடு

மகாவம்சத்தின் கூற்றுப்படி, புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்து பதினாறு புனித இடங்களுக்குச் சென்று, அங்கிருந்த இயக்கர்களையும் நாகர்களையும் சந்தித்துப் பிரசாரம் செய்தார். ஆனால் வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, புத்தர் மறைந்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகே, அசோக சக்கரவர்த்தியின் புதல்வரான அரஹத் மஹிந்த தேரர் இலங்கை வந்து தேவநம்பியதீசன் மன்னனுக்குப் பௌத்தத்தைப் போதித்து, இலங்கையில் பௌத்த சாசனத்தை நிறுவினார். ஞானமும் ஒப்பற்ற பிரசார ஆற்றலும் கொண்ட புத்தர் தாமே மூன்று முறை நேரில் வந்து பிரசாரம் செய்தும் பௌத்த சங்கத்தை நிறுவ முடியாமல் போனார்; ஆனால் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த மஹிந்த தேரரால் அதை உடனடியாகச் செய்ய முடிந்தது என்று ஏற்றுக்கொள்வது, ஒரு தர்ம பிரசாரகராகப் புத்தரின் ஆற்றலையே கேள்விக்குள்ளாக்குகிறது. புத்தர் இலங்கைக்கு வந்து பிரசாரத்தில் தோற்றார் எனச் சித்தரிப்பதைவிட, அவர் ஒருபோதும் வரவேயில்லை என்பதை ஏற்றுக்கொள்வதே அவரது தத்துவத்திற்கும் ஆளுமைக்கும் செய்யப்படும் உண்மையான கௌரவம் என்பேன்.

பௌத்த தத்துவம் என்பது பகுத்தறிவையும், காரிய, காரணத் தொடர்பையும், சான்றுகளையும் முதன்மைப்படுத்தும் ஒரு வாழ்வியல் நெறி. புத்தரின் போதனைகளே தர்க்கத்திற்குப் பொருந்தாத நம்பிக்கைகளை அப்படியே ஏற்காதீர் எனக் கூறுகின்றன.

திரிபிடகத்தின் நுணுக்கமான மவுனம், விநயத்தின் மஜ்ஜிமதேச எல்லைவரையறை, அசோகரின் கல்வெட்டு மவுனம், தொல்லியல் ஆதாரமின்மை, பயணப் புவியியல் முரண்பாடு, இயக்கர்/நாகர் சித்தரிப்பின் பின்னணியிலுள்ள அரசியல் நோக்கம், மகாவம்சப் பதிப்புகளுக்கிடையேயான உரை வேறுபாடுகள், மூன்று வருகைக்குப் பின்னரும் மஹிந்த தேரரின் பணி தேவைப்பட்டதன் தர்க்க முரண்பாடு இந்த எட்டு தர்க்கங்களையும் ஒருங்கே நோக்கும்போது, கௌதம புத்தர் இலங்கைக்கு ஒருபோதும் விஜயம் செய்யவில்லை என்பதும், மகாவம்சத்தில் கூறப்படும் வருகைக் கதைகள் ஐந்தாம் நூற்றாண்டில் உருவான ‘தம்மதீப’ எனும் அரசியல்-மத சித்தாந்தத்தின் ஒரு பகுதியே என்பதும் தெளிவாகின்றன.

புராணங்களையும் மதநம்பிக்கைகளையும் வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்துப் பார்ப்பதே ஒரு வரலாற்று அறிஞருக்கும், சிந்தனை தெளிவுள்ள சமூகத்திற்கும் அழகாகும். புத்தர் இலங்கைக்கு வரவில்லை என்பதை ஒப்புக்கொள்வது பௌத்த தர்மத்தின் மேன்மையைக் குறைக்காது; மாறாக, அது வரலாற்று உண்மையையும் புத்தரின் உண்மையான தத்துவத்தையும் கௌரவிக்கும் செயலாக அமையும்.

கடந்த காலத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தையும் கட்டமைக்கிறோம். நாம் இலங்கையின் உண்மையான வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால், “புத்தர் இலங்கைக்கு வந்தார்” என்ற கதையை முதலில் முற்றிலுமாக தவிர்த்தல் முன்நிபந்தனை ஆகிறது.

courtesy தினகரன் – (சாளரம்) 09.08.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *