செத்த ஈக்கள் ஜாக்கிரதை!

வேதாகமம் கூறுகிறது: செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். (பிரசங்கி 10:1)

தேவ பிள்ளைகளின் வாழ்க்கை மிகவும் வாசனையுள்ளவை. அது மிக விலையுயர்ந்த வியாபாரப் பொருள். பல கோடி மதிப்புள்ளவை. அக்காலத்தின் ராஜாக்களுக்கு பரிசளிப்பதற்கு வாசனை பொருள் பயன்படுத்தப்பட்டன. எப்பேர்ப்பட்ட நாற்றம் நிறைந்த இடத்தையும் தன் வாசனையால் நிரப்பிவிடும்.  அருமையான தேவ பிள்ளையே அத்தனை விலையுயர்ந்த, வாசனை நிறைந்த அந்த திரவியம் நாற்றமெடுத்துப் போய் பயன்படாமல் தூக்கி வீசப்படுமாம். ஏன் தெரியுமா?

பிறரைக் குறித்து தவறாக பொய்களைக் கூறுபவர்கள் சபைக்குள் பெண் பித்தர்களாக, குழுவிற்குள் வம்பு இழுப்பவர்களாக, செத்த ஈக்களாக அவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் நிச்சயமாக தங்களுடைய நறுமணமிக்க தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணுவார்கள்.

பாருங்கள்,  எத்தனை கனம் பெற்றவராக இருந்தாலும், எத்தனை டாக்டர் பட்டம் பெற்றவராக இருந்தாலும் முற்கோபம் இருக்கும் என்றால் அவர் தனது மதிப்பை இழந்துபோவார். மனநல நோய்களை பரப்புபவராகவே இருப்பார். வன்மம் மிக்க சொற்களை பேசும் டொக்டர்கள் அரசியலிலும் கிறிஸ்தவ உலகிலும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட  சொற்ப மதியீனம் அல்லது பாவம் அவன் வாழ்க்கையை நிச்சயம் கெடுத்து நாறிப் போகப்பண்ணும்.  தேவ பயமுள்ள மனிதர்களை பொய்க்கு பிதாவின் பேச்சுக்களால் வீழ்த்துவார்கள். பாருங்கள் பூவோட சேர்ந்த வேரும் வாசம் வீச வேண்டியிருக்க, செத்த ஈக்களோடு சேரும் மனிதர்களும் கிறிஸ்தவ இலக்கிய சமுதாயத்திற்கு நாற்றத்தை வீசச் செய்வார்கள். அந்த பிறருடைய குப்பை லாறி குழுக்களில் கொட்டப்படும் குப்பைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

இன்றைய  இலத்திரனியல் உலகில் கிறிஸ்தவ எழுத்தாளர்களின் வட்டம் பெரிது. இந்த உலகில் நீங்கள் பிறருக்கு அன்பைக் காட்டுங்கள். அன்பைப் பெறுவீர்கள். புத்தகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பல புத்தகங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். குற்றங்களை மன்னிக்க தெரியாதவர்கள் நிச்சயமாக தங்களிலுள்ள பரிசுத்த வாசனையை கெடுத்துப் போடுகிறார்கள்.

நல்ல ஊற்றுக் கிணற்றிலிருந்து நல்ல தண்ணீரே புறப்பட்டு வரும். அதனால் அநேகர் பயனடைவார்கள். தித்திப்பும் கசப்புமிக்க இருதயமுள்ளவர்களிடமிருந்து கசப்பும் வைராக்கியமுமே வெளிவரும். நல்ல தண்ணீரும் ஒரே ஊற்றிலிருந்து சுரக்க முடியாது. கீழ்தரமான நோய்களை பரப்புகிறவர்கள் ஆவிக்குரிய எழுத்தாளர்கள் அல்ல. பிற ஆங்கில மொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து தங்கள் பெயரில் புத்தகம் வெளியிடுபவர்கள் சிறந்த எழுத்தாளர்களும் அல்ல. இப்படிப்பட்டவர்கள் செத்த ஈக்களாகத்தான் இருக்கிறார்கள்.

அசூர பலமுள்ள மனிதன் தான் சிம்சோன். (நியா. 16:1-3). எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தான். ஒரு கழுதை தாடை எழும்பைக் கொண்டு ஆயிரம் பேரை அசாத்தியமாய் அடித்து துவம்சம் பண்ணினான். இப்படிப்பட்ட விசேஷமான மனிதன் வாழ்வில், கண்களின் இச்சை என்ற ஒரு செத்த ஈ விழுந்தது. அந்த செத்த ஈ, அவனுடைய விலையேறப்பெற்ற வாழ்க்கையை கெட்டு நாறிப் போகப் பண்ணினது. கடைசியில் கண்கள் பிடுங்கப்பட்டு, பிச்சைக்காரனைப் போல மாவரைத்துக் கொண்டிருந்தான். ஒரு ஈ தானே என்று அசதியாயிருந்ததால்தான், தைலம் முழுவதும் கெட்டுப் போகிறது. ஒரு பெண்தானே என்று அசட்டையாய் கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்ததால் தான் சிம்சோன் வாழ்க்கை முழுவதும் பாழாய் போனது. உங்கள் வாழ்க்கையில் விழுந்துள்ள செத்த ஈ எது?

தேவையற்ற பேச்சுக்கள், அவமானப்படுத்தும் வார்த்தைகள், தங்கள் குணத்தை வெளிப்படுத்தும் முற்கோபங்கள், பொய்யான ஊகங்கள், அசுத்தமான நட்பு, ஆபாசப்படங்களின் அடிமைத்தனம், சமூக வலைதளங்களில் ஏற்படும் சறுக்கல், தேவையற்ற நபர்களின் சகவாசம்,  சபைக்குள் குழப்பம் விளைவித்தல் போதைப்பழக்கத்தின் நெடி, பண ஆசை பிறருடைய பாவ செயல்களை வர்ணிக்கும் மோசமான எழுத்துக்கள் போன்றவை ஆரம்பத்தில் சிறியது போலத்தான் தெரியும். இவை சிறிய செத்த ஈ, அது அவர்கள் வாழ்க்கையையும் பிறருடைய நன்மதிப்பையும் நாறடித்துவிடும்.
.
எந்த இடத்தில் கவுரவமாக வாழ்ந்தோமோ, அந்த இடத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்கு நம்மைச் சுற்றி ஆயிரம் உதாரணங்கள் உள்ளனர். உங்கள் வாழ்க்கையில் உள்ள செத்த ஈக்களை கண்டுபிடியுங்கள்.

அருமையான தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கை வாசனை வீசி ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்றால் செத்த ஈக்களை கண்டுபிடியுங்கள். அவைகளை தூக்கி தூர எறியுங்கள். அவை உங்கள் மனதிற்கு எத்தனை பிடித்தமானதாக இருந்தாலும், அவற்றை விட்டுவிடுங்கள். இப்பொழுது விட்டுவிடாவிட்டால், அது உங்கள் வாழ்வையே நாறடித்துவிடும் என்பதை மறந்து போகாதிருங்கள். கர்த்தர் உங்களை உணர்த்துவாராக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *