சங்கீதம் 103:3-5ஆம் வசனங்களில், ஆண்டவர் நமக்காக என்னென்ன செய்கின்றார் என்பதைக் குறித்து கவனிப்போம்.

1. அவர் நம் அக்கிரமங்களை மன்னிக்கிறார்:

நமது ஆண்டவர் மாத்திரம்தான் நம்முடைய தவறுகளை, மீறுதல்களை, பாவங்களை, அக்கிரமங்களை மன்னிக்கின்றார். மனிதர்களினால் செய்யமுடியாத மாபெரும் காரியத்தை இயேசு சிலுவையில் செய்தார். அதன் விளைவே மன்னிப்பு. பொதுவாக மனிதர்கள் சிறு தவறைக்கூட பிறரிடம் மன்னிக்காமல் இருப்பதுண்டு. இங்கே சங்கீதக்காரன் தன் ஆத்துமாவிடம் நினைவுபடுத்துகின்ற விஷயமானது, “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார்” என்பதாகும் (சங்.103:3).

பொதுவாக  நீதிமன்றங்களினால் செய்ய இயலாத ஒரு காரியத்தை இங்கே நமது ஆண்டவர் செய்கின்றார். நன்றாக கவனித்துப் பார்ப்பீர்களாயின், குற்றவாளிக்கு உரிய தண்டனை கொடுக்கின்ற நீதிமன்றங்கள் நிரபராதிக்கு வெகுமதிகளைக் கொடுப்பதில்லை. அப்படியானால் ஒரு விஷயத்தை விசாரித்து நீதி வழங்கும் நீதிமன்றங்கள் இன்று தண் டனை கொடுக்கும் இடங்களாகவேதான் உள்ளன. நீதிமன்றம் என்ற பெயர் இருந்த போதிலும், அவை மக்களுக்கு சிறைத் தண்டனையையோ, அபராதத்தையோ, ஆயுள் தண்டனையையோ அளிக்கின்றன. ஆனால், நமது ஆண்டவர் நமது செயல்களுக்குத் தக்கதாக நன்மைகளை, வெகுமதிகளை, பரிசுகளைத் தருவது மட்டுமின்றி, நமது அக்கிரமங்களை மன்னிப்பவராகவும் இருக்கின்றார்.

நிரபராதியையும் குற்றவாளியையும் ஏற்றுக் கொள்ளும் பணியை அவர் செய்கின்றார். அதனால்தான் நாம் ஆண்டவரை சர்வவல்லமையுள்ள “நீதிபதியாக” அன்புள்ள தந்தையாக, ஆண்டவராக, நமது ராஜாவாக காண்கிறோம். அவர் அன்புள்ளவர். நமது தனிப்பட்ட அக்கிரமங்கள் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் சரி, அதனை ஆண்டவர் மன்னிக்கிறார்.

இன்று உங்களில் யாராவது குற்ற மனப்பான்மையோடு இருப்பீர்களாயின், இன்றே ஆண்டவருடைய சமுகத்தண்டைக்கு வாருங்கள். அவர் உங்களுடைய குற்றங்களை மன்னிக்கிறார். ஆகவே, தேவன் தமது பிள்ளைகளின் குற்றங்களை மன்னிப்பதினால், இனியும் நீங்கள் குற்றமனப்பான்மைக்குள் சிக்கி அகப்பட்டுக் கொண்டிருக்க தேவையில்லை. குடிகாரனை திருத்துகின்றார். களவு செய்கிறவனையும் திருத்துகின்றார். முன்பு அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையை வைப்பதற்கூடாக நமது ஆண்டவர் தமது பிள்ளைகளாக அவர்களை மாற்றுகின்றார். அப்படியானால், எவ்வளவாய் அவர்களை அவர் மன்னிக்கின்றார் என எண்ணிப் பாருங்கள். இவர்களை இந்த உலகம் மன்னிக்காது.

நீதிமன்றங்கள் மன்னிக்காமற்போனாலும் கூட, நமது ஆண்டவர் இவர்களை மன்னிக்கிறார். உங்களுடைய பாவம், அக்கிரமம், மீறுதல் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் சரி, இன்றே ஆண்டவரிடம் வாருங்கள். அவர் தரும் மன்னிப்பை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள். அவர் மாத்திரமே பாவங்களை மன்னிக்கிறார். தமது சிலுவை கிரயத்திற்கூடாக அதை நிரூபித்துமுள்ளார். இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்த படியினால், அவருடைய தூய இரத்தம் சிந்தப்பட்டபடியினால் அவரை நம்புகின்ற நீ இன்றே அவரிடம் வருவாயா?

2. அவர் நம் நோய்களைக் குணமாக்குகிறார்:

“உன் நோய்களையெல்லாம் குணமாக்குபவர்” (சங்.103:3) என சங்கீதக்காரன் தனது ஆத்துமாவைப் பார்த்து இங்கே கூறுகின்றான். ஆண்டவரால் குணமாக்க முடியாத நோய்கள் எதுவுமே கிடையாது. அவர் அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லவர். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் தழும்புகளால் நாம் குணமடைகிறோம். நமது நோய்களை மாத்திரமல்ல, பிறரின் நோய்களையும் குணமாக்குபவர் அவரே. இது அவருக்கு லேசான காரியம். முழு உலகத்தையும் படைத்த ஆண்டவர் நமது நோய்களை குணமாக்கமாட்டாரா? முழு சரீரத்தையும் அழகாக சிருஷ்டித்த ஆண்டவரால் அதிலுள்ள நோய்களை சொஸ்தமாக்க முடியாதா? நிச்சயமாக அவரால் கூடும்.

மருத்துவமனைகள் எதற்காக இருக்கின்றன? அநேகமாக அவற்றினால் உயிரை பறிக்கமுடிகின்றதே தவிர, உயிரளிக்க இயலாத நிலையில்தான் உள்ளன. அங்கு கொடுக்கப்படுகின்ற மாத்திரை, மருந்துகள் நிரந்தர சுகத்தை தருபவையல்ல. ஒரு தற்காலிக நிவாரணியாக இருந்தாலும், எவ்வித பக்க பின் விளைவுகளுமற்ற மெய்யான சுகத்தை தருபவரோ ஆண்டவர் மாத்திரமே!

இன்று பல நோயாளிகள் ஆண்டவரிடம் வர விருப்பமின்றி, மருத்துவர்களை, மருந்தை தனியார் மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறார்கள். இவை ஒன்றுமே உங்களுக்கு பூரண சுகத்தை தர முடியாது. அவர்களால் உங்களை குணமாக்கவும் இயலாது. அறுவை சிகிச்சையோ, மருந்துகளோ நம்மை விடுவிக்காது. உண்மையில் அவற்றிற்கூடாகவும் நமக்கு சுகத்தை, சரீரத்திற்கு குணப்படுதலை கொடுப்பவர் ஆண்டவர் மாத்திரமே!

சிகிச்சை பலனளிக்காமல் மரித்தவர்கள், மருத்துவரால் கைவிடப்பட்டவர்களால் உலகம் நிறைந்துள்ளது. ஆனால், பரம வைத்தியரான நமது ஆண்டவரோ எல்லாவற்றின் மத்தியிலும் நம்மை சுகப்படுத்த வல்லவராக இருக்கின்றார். அவர் தரும் ஆராக்கியத்தை நாம் பெற்றுக் கொள்வதோடு, பிறரும் அதைப் பெறும்படிக்கு அவர்களுக்காக இன்றே நாம் ஜெபிக்கலாமே.

3. அவர் நம் ஆத்துமாவைக் காப்பாற்றுகிறார்:

சங்கீ.103:4இல், சங்கீதக்காரன், பிறருடைய பிராணனைக் காப்பாற்றுகின்ற அதே ஆண்டவர் எனது பிராணனையும் அழிவுக்கு விலக்கி மீட்கின்றார் என்பதை நினைவுபடுத்துகிறார். அதாவது கர்த்தர் என் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார். அவரால்மாத்திரமே நம்மை அழிவிலிருந்து, நரகத்தின் படுகுழியிலிருந்து நம்மை விலக்கி மீட்கமுடியும் என கூறுகிறார்.

அக்காலத்தில் அடிமைகளை சந்தையில் விற்கும் முறை இருந்தது; அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கப்படுவதில்லை. இங்கே குறிப்பிடப்படுகின்றபடி, நமது பிராணனை ஆண்டவர் அடிமைத் தனத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், உலக ஆசையிலிருந்தும் விடுவிப்பதோடு கூடவே, நரகத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நித்திய அழிவிலிருந்தும் நம்மை விடுவித்து காப்பாற்றுபவராக இருக்கின்றார்.

சிறுவயதில் என்னை இரட்சிப்பின் அனுபவத்திற்கு வழிநடத்தியவர்களில் ஒருவர் வீதி போக்குவரத்து போலீஸ்காரனாக பணியாற்றினார். ஒருநாள் வீதியில் நடக்கும்போது, என்னைக் கண்டு, என்னைப் பற்றி விசாரித்தார். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை அறிந்து பல கேள்விகளைக் கேட்டார். நானும் பதிலளித்தேன். சந்தோஷப்பட்ட அவர், “இரட்சிப்பு என்றால் என்ன?” என்று என்னிடம் கேட்டார். “இயேசுதான் இரட்சிப்பைத் தருகின்றார்” என சிறுபிள்ளையைப்போல பதிலளித்தேன். அப்போது இதை மறந்துவிடாதே என ஒரு சிறிய விஷயத்தைக் கூறினார். அது எனது மனதில் ஆழமாக பதிந்தது. அது இதுதான்: “கொடிய ஆக்கினை தண்டனையாகிய நரகத்திலிருந்து இயேசுகிறிஸ்துவுக்கூடாக தப்பித்துக்கொள்வதே இரட்சிப்பாகும்”. ஆம், நாம் பெறவேண்டிய கொடிய ஆக்கினை தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவித்து தப்புவிப்பவர் இயேசு மாத்திரமே. அவரிடத்தில் வருகின்றவர்களை அவர் புறம்பே தள்ளுவதில்லை. அவர்களை அவர் தீமையிலிருந்து காப்பாற்றுகிறார். நமது பிராணனை நித்திய மரணத்திலிருந்து, நித்திய அழிவிலிருந்து விலக்கி தப்புவிக்கிறார். உண்மையில் இந்த மேலான பாக்கியத்தை கிறிஸ்து இயேசுவுக் கூடாகவே நாம் பெற்றுக் கொள்கின்றோம்.

4. அவர் நம்மை முடிசூட்டுகிறார்:

நமது ஆண்டவர் மாத்திரம்தான் நம்மை அலங்கரிப்பவர். “அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்” என பொதுமொழிபெயர்ப்பு கூறுகிறது. ஆம், அவர் கிருபையினாலும் இரக்கத்தினாலும் நம்மை முடிசூட்டி மகிழுகின்றார் (சங்.103:4).

அலங்கார நிலையங்களுக்கு நீங்கள் சென்றிருக்கின்றீர்களா? அங்கு எது அழகுப் படுத்தப்படுகிறது? அழகுபடுத்த வேண்டியதன் அவசியம் என்ன? ஏன் அலங்கரிப்பிற்காக அத்தனையாய் செலவிடுகிறார்கள்? இப்படியாக பல கேள்விகளை நாம் கேட்கலாம். இந்த அலங்கார நிலையங்கள், ஒருபோதும் நிரந்தரமாய் மனிதனை அலங்கரித்துவிட இயலாது. அவை யாவும் தற்காலிகமானவையே. அவை நிரந்தர பேரழகை தருபவை அல்ல. அலங்கார நிலையங்களினால் செய்ய முடியாததை நமது ஆண்டவர் நம்மிடம் செய்கின்றார். அவர் நம்மை அலங்கரித்து, முடி சூட்டுகிறார். இது அலங்கரிப்பதைவிட மேலானது.

சத்தியத்தினாலும் உண்மையினாலும் நீதியினாலும் தினமும் நம்மை அலங்கரிக்கிறார். காலைதோறும் அவருடைய கிருபை பெரியது. அவருடைய இரக்கங்களுக்கு அளவேயில்லை. அவர் தமது கிருபையினாலும் தமது இரக்கத்தினாலும் நம்மை தினமும் முடி சூட்டுகின்றார். அதற்கு பாத்திரவான்களாக நாம் இருக்கின்றோமோ? சிந்திப்போம்.

5. நம்மை திருப்திப்படுத்துகிறார்:

“நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்” என சங்கீதக்காரன் தன் ஆத்துமாவைப் பார்த்து ஞாபகப்படுத்துகிறார். இதன் அர்த்தம் என்ன? எப்படி என் வாயை திருப்தியாக்க இயலும்? எந்த நன்மையினால் திருப்திப்படுத்த இயலும்? வசனம் கூறுகின்றபடி, அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார். அதாவது உங்கள் விருப்பங்களை அவர் பூர்த்தியாக்குகின்றார்.

சமையலறையில் நடைபெறுவது என்ன? உணவு சமைத்தல் மட்டுமா? ருசியான உணவினால் பிள்ளைகள் முழு திருப்தியைப் பெற கூடுமா? கணவன்மார் மனைவிமாருடைய சமையலினால் திருப்தியடைந்து விடுவார்களா? நிச்சயமாக இல்லை. எந்தவொரு நபரையும் எந்தவொரு விஷயத்தினாலும் திருப்தியடையச் செய்ய இயலாது. எதையாவது உண்டு வயிற்றை நிரப்பலாம். கொஞ்சநேரம் சந்தோஷப்படலாம். ஆனால் மெய்யான திருப்தி எந்தவொரு சமையலறையிலும் கிடைப்பதில்லை.

நமது ஆண்டவர், சமையலறையில் கிடைக்காத திருப்தியை நிறைவை, அதைவிட மேலான இருதயத்தின் வாஞ்சையை நிறை வேற்றுகின்ற ஆண்டவராக இருக்கின்றார். நமது வாழ்நாள் முழுவதும் தனது நலன்களை தந்து திருப்தியடையச் செய்கின்றார். நமது ஆசைகளை அவரே பூர்த்தியாக்குகின்றார்.

சங்கீதக்காரன் 103ஆம் சங்கீதத்தில் பாடிய படி, நம் கர்த்தராகிய ஆண்டவர் தாமே, நம் அக்கிரமங்களை மன்னிக்கிறார், நோய்களைக் குணமாக்குகிறார், ஆத்துமாவைக் காப்பாற்றுகிறார், நம்மை முடிசூட்டுகிறார், அத்துடன் நம்மை திருப்திப்படுத்துகின்றார்.

ஆகவே நாம் தைரியமாக, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங் களையும் மறவாதே” எனக் கூறுவோமாக.

கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • Bro.இ.வஷ்னி ஏர்னஸ்ட்

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *