அதிகம் அறியப்படாத பல வேதாகம பாத்திரங்களுக்கூடாக தேவன் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். அதிலே ஒருவன்தான் யகாசியேல். யகாசியேல் (יַחֲזִיאֵל) என்பதன் அர்த்தம் தேவன் நம்மை உற்றுநோக்குகிறார் (God Sees’/”Beheld by Jehovah God”) என்பதாகும். அப்படியிருக்க உலகத்தால் அதிகம் அறியப்படாத நம்மைக்கொண்டும் – தேவ பிள்ளைகளைக் கொண்டும் தேவன் பெரிய காரியங்களைச் செய்ய முடியுமல்லவா!

வேதாகமத்திலே யகாசியேல் என்ற பெயரில் 5 நபர்களைக் காணலாம்.

  1.         பென்யமீன் கோத்திரத்தானாகிய இவன் தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவனாக இருந்தவன் (1நாளாகமம் 12:4)
  1. ஒரு ஆசாரியன் (1நாளாகமம் 16:6)
  1. ஒரு லேவியன் (1நாளாகமம் 23:19)
  1. யோசபாத்தின் காலத்திலிருந்த ஒரு லேவியனாகிய தீர்க்கதாpசி (2நாளாகமம் 20:14)
  1. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவனின் தந்தை (எஸ்றா 8:5).

இந்த ஐந்து பேரில் நாம் யோசபாத் ராஜாவின் காலத்திலிருந்த ஒரு லேவியனாகிய யகாசியேலைக் குறித்து இக்கட்டுரையில் கவனிக்கப் போகின்றோம்.

இவன் வேதாகமத்தில் காணப்படும் மிகப் பிரசித்திபெற்ற நபரல்ல. மோசே, பவுல் போன்ற ஒரு பெரிய ஊழியத்தைச் செய்தவருமல்ல. அநேகருக்கு வேதாகமத்தில் இப்படியொரு பெயரில் ஒரு கதாபாத்திரம் இருக்கின்றதா என்றுகூட அறியப்பட்டிராத ஒரு நபரே யகாசியேல். இவன் சிறிதுநேரம் தனது ஜனத்திற்கு ஒரு வெளிச்சத்தைக் காண்பித்து பிரகாசித்தவன். சற்று நேரம் தோன்றினாலும் தன்னுடைய முத்திரையை மிக அழுத்தமாகப் பதித்து மறைந்தவன்.

இவனைப்போன்ற சாதாரண மக்களாகிய நம்மையும் தேவன் பயன்படுத்தமுடியும் என்பதற்கு யகாசியேல் ஒரு சிறந்த உதாரணமாக திகழுகின்றான். தேவன் நம்மைத் தமது  பெரிய நோக்கத்தில் பயன்படுத்துகிறார். நாம் செய்கின்ற காரியம் சிறியதாக இருந்தாலும், நாம் செய்கின்ற ஊழியம் அற்பமாக எண்ணப்பட்டாலும், தேவன் நம்மைக்கொண்டு செயற்பட சித்தமுள்ளவராக இருக்கின்றார் என்பதே மிகவும் ஆச்சரியமான காரியமாயுள்ளது.

யகாசியேலை தேவன் தெரிந்தெடுத்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் முக்கியமான ஒரு பாத்திரமாக அவனைப் பயன்படுத்துகின்றார். தமது ஒளியை அவன்மீது வீசி, அவனைத் தமது ஆவியால் நிரப்புகின்றார். இது குறிப்பிட்ட ஒரு சில மணித்தியாலமாகக்கூட இருக்கலாம். ஆனால், அந்த ஒரு நிமிடநேரத்தில் தேவன் கூறிய காரியத்தை ஜனங்கள் அவனுக்கூடாகக் கண்டுகொண்டனர். அந்த சொற்ப நேரத்திற்குள் அவன் தேவனுடைய செய்தியை உரத்த சத்தமாய் மக்கள் அனைவரும் கேட்கும்படி கூறி அறிவித்தான். யகாசியேல் தேவனுடைய செய்தியை யாருக்கு அறிவிக்கின்றான் என்பது இங்கு மிக முக்கியமானது. சகல யூதா கோத்திரத்தாருக்கும், எருசலேமிலுள்ள ஜனங்களுக்கும் தேவ செய்தியை அறிவிக்கின்றான். செய்தியை அவன் அறிவிப்பதற்கு முன்னரான சூழ்நிலையைக் கவனிப்பது அவசியமாகின்றது.

பொதுவாக, வீதிக் கடவையில் சிவப்பு விளக்குகளைக் காணும்போது, நாம் சலித்துக் கொள்வதுண்டு. பேரூந்தில் செல்லும்போது, சிவப்புவிளக்கு எரிவதினால், பேரூந்து ஓட்டுநரும் பயணிகளும் முறுமுறுப்பதுண்டு. வாகனம் ஓட்டுபவர்கள் அநேகமாக இவ்வாறான சோதனைக்கு முகங்கொடுப்பார்கள். எமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இப்படித்தான். சிலநேரங்களில் கர்த்தர் எமக்கு முன்பாக, “பச்சை விளக்கை” வைத்திருப்பார். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்து முன்னோக்கிச் செல்லும்படி வழிநடத்துவார். இன்னும் சிலநேரங்களில் “சிவப்பு விளக்கை” எரியவிடுவதுண்டு. அதாவது, முன்னோக்கி செல்லாதபடி தடுத்து  நிறுத்துவார். இன்னும் சில நேரங்களில் “மஞ்சள் விளக்கை” எரியவிடுவதுண்டு. அதாவது குறிப்பிட்ட காரியத்தைச் செய்துமுடிப்பதற்கு ஆயத்தமாகும்படி எச்சரிப்பார். இந்த மூன்றுவிதமான நடவடிக்கைகளையும் எமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கவேண்டியிருக்கும்.

மோவாபியரும், அம்மோனியரும் வேறுசில ராஜாக்களும் சேர்ந்து ஒரு பெரிய இராணுவத்துடன் எருசலேம் மீது யுத்தம்பண்ண வந்தார்கள். இவ்வேளையில் எருசலேமிலிருந்தவர்கள் நம்பிக்கையிழந்த ஒரு சூழ்நிலை உருவாகி இருந்ததை உணர்ந்தனர். இதனால் ராஜாவாகிய யோசபாத் பயந்து, ஜனங்களோடு கர்த்தரைத் தேடுவதற்காக ஒருமுகப்பட்டவனாக, யூதா தேசமெங்கும் ஜனங்கள் அனைவரும் உபவாசம் இருக்க வேண்டும் என்று அறிவித்தான். அவ்வாறே ஜனங்கள் யாவரும் கர்த்தரிடத்தில் சகாயம்தேடி கூடிவந்தார்கள்.

ஏறத்தாள சிவப்பு விளக்கு எரிகின்ற நிலையில், யுத்தம்பண்ணாத நிலையில், ஜனங்கள் யாவரும் கர்த்தரைத் தேடி எருசலேம் ஆலயத்திற்கு முன்பாகக் கூடிவந்த நேரத்தில், யோசபாத் தேவனிடத்தில் ஜெபிக்கின்றான். இப்படி இன்று ஜெபிக்கின்ற தலைவர்கள் எத்தனைபேர்? துன்பம் வந்தநிலையில், தேவ பயத்துடன் ஜெபிக்கின்ற, தேவனிடத்தில் ஆலோசனைப்பெற முற்படுகின்ற ராஜாவைப் பெற்றுள்ள யூதா ஜனங்கள் பாக்கிய முள்ளவர்கள்தான். இப்படிப்பட்ட ஒரு தேசத் தலைவன் எமது நாட்டில் இருந்தால் எவ்வளவு சிறப்பாக தேசம் மாறும்? யோசபாத்துடன்கூட யூதா கோத்திரத்து மக்கள் அனைவரும் தேவனுக்குப் பயந்தவர்களாய் தேவாலயத்திற்கு முன்பாக வந்தார்கள்.

செய்வதறியாத நிலையில் யூதா கோத்திரத்தார் அனைவரும் அவர்களின் பெண்ஜாதிகளும் அவர்களின் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள் என 2நாளாகமம் 20:13ல் வாசிக்கிறோம். திகிலடைந்து, தவித்திருந்த அந்நேரத்தில், கர்த்தர் ஒரு மனிதனைத் தொpந்தெடுத்து அவனுக்கூடாகப் பேசினார். இச்சபையின் நடுவிலிருந்த யகாசியேல் என்ற ஆசாப்பின் புத்திரில் ஒருவனான லேவியன்மீது கர்த்தரின் ஆவியானவர் இறங்கி, ஜனங்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்.

சபையின் நடுவே நின்றுகொண்டிருந்த ஒரு சாதாரண லேவியனுக்கூடாக தேவன் தமது செய்தியை தெளிவாக அறிவித்தார். அது பச்சை விளக்கை எரியவிடுவதற்கு முந்திய ‘மஞ்சள் விளக்காக” இருந்தது. யூதா கோத்திரத்து மக்கள் இனிமேல் அமைதியாயிராமல், அடுத்தக்கட்ட நிலைக்குள் கடந்து செல்லவேண்டிய நிலைமையை தேவன் யகாசியேலுக்கூடாக தெளிவுபடுத்தினார்.

யகாசியேல் சபையை பார்த்து சத்தமாகக் கூறுகின்றான், “சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்” (வச 15) “யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தாpத்து நின்று கர்த்தர்உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்”(வச 17). அத்தோடு அவன் நிறுத்திவிட வில்லை, “நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்” (வச 15) “பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்” (வச 17). இதனை அவன் தனது சுயத்தில் அறிவிக்கவில்லை.

ஒருபெரிய ராணுவத்திற்கு எதிராக யுத்தம்பண்ண வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை யகாசியேல் அறிந்தவனாக இதைக் கூறுகின்றான். இனி, பச்சை விளக்கு எரியப்போகின்றது. ஜனங்களை அவன் யுத்தத்திற்கு ஆயத்தப்படுத்துகின்றான். “இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.” (வச 15) “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்” (வச 17). என்று தேவன் அருளிய செய்தியைக் கூறி, தேசத்திலுள்ள சகல மக்களையும், இராஜாவாகிய யோசபாத்தையும், அவனுடைய யுத்த வீரர்களையும் இராணுவத்தையும் யுத்தத்துக்குத் தைரியமாகச் செல்லும்படி தூண்டினான். அதுமட்டுமல்ல, எவ்வாறு போரிடவேண்டுமென்பதையும் எங்கே எதிரிகளைச் சந்திக்கவேண்டும் என்பதையும் அவன் முன்னறிவித்தான். “நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்.” (வச 16) “நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்.” (வச 17) என அறிவுரை கூறி நாளைய தினத்திற்குக் காத்திருக்குமாறு யகாசியேல் மக்களுக்கு அறிவுறுத்துகின்றான்.

யூதா கோத்திரத்து ராஜா தேவன்பேரில் நம்பிக்கை உள்ளவனாய் இருந்தபடியால் முதலாவது என்ன செய்ய வேண்டும் என்று யகாசியேல் அவனுக்கு அறிவிக்கின்றான். எதிரிகள் எவ்வாறு வருகின்றார்கள், எங்கே அவர்களோடு போரிட்டால் ஜெயிக்கமுடியும் என்பதையும் அறியத்தருகின்றான். “இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டு வழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத் தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.” (வச 16). என்றான்.

யகாசியேலின்மூலம் தேவன் பேசிய வார்த்தைகளுக்கு யூதா கோத்திரத்தார் செவிகொடுத்தார்கள். யோசபாத் இராஜா தரைமட்டும் குனிந்து வணங்கி உரத்த சத்தமாய், “யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள்” (2நாளா. 20:20) என்றான். அவ்வாறே, லேவியர்களும் மற்றவர் களும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதிக்க எழும்பினார்கள். ஜனங்கள் யாவரும் அதிகாலையில் விழித்தெழுந்து, அம்மோனியர், மோவாபியர், ஏதோமியரின் சேனையை எதிர்க்க அணிவகுத்துச் சென்றனர்.

யகாசியேலின் தீர்க்கதாpசனத்தின்படி, இறுதியில், கர்த்தர் யூதாவுக்காக யுத்தம்பண்ணினார். “அம்மோன் புத்திரரும் மோவாபியரும் …சேயீர் குடிகளை அழித்து தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்க விதமாய்க் கைகலந்தார்கள். யூதா மனுஷர்… அந்த ஏராளமான கூட்டம் இருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்து கிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை. தேவ மக்கள் உண்மையிலேயே தேவனுடைய இரட்சிப்பைக் கண்டார்கள்” (2நாளாகமம் 20:23,24) இதற்கெல்லாம் காரணம், கர்த்தரின் ஞானமும் வழிநடத்துதலும் நிறைந்த வார்த்தைகள் யகாசியேலுக்கூடாக யூதா கோத்திரத்தாருக்கு தெரிவிக்கப்பட்டமையே. அவர்களின் பயமும் மனக்கலக்கமும் நீங்கி தைரியத்தையும் நம்பிக்கையுமடைந்தனர்.

யகாசியேலினூடாக வெளிப்பட்ட தேவனின் வார்த்தைகள், தேவ மக்களை தைரியப்படுத்தியது. இவனைக்குறித்து வேதாகமத்தில் இதற்குமுன் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு பின்பும் அவனது பெயர் புகழப்படவில்லை. யோசபாத் ராஜாவின் வெற்றியின் பின்னர் அவன் பாராட்டப்பட்டதாகக்கூட எழுதப்படவில்லை. எனினும் சபையிலிருந்த முகமறியாத லேவியனுக்கூடாக கர்த்தர் மிக முக்கியமான ஒரு அத்தியாவசியமான தேவ செய்தியை யூதா கோத்திரத்தாருக்கு அறிவிக்க அவனைப் பயன்படுத்தினார். தேவ செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் ஒரு தாசனாக செயற்பட்டான்.

இன்றும் பிரசித்திபெறாத அநேக தேவ பிள்ளைகளுக்கூடாகவும், விசுவாசிகளுக்கூடாகவும், தேவன் பல அற்புதங்களை நடப்பித்து வருகின்றார். இன்று நமக்கூடாகவும் தேவராஜ்யத்திற்கு மகிமைகொண்டுவரத் தக்க காரியங்களைச் செய்யவே அவர் வாஞ்சிக்கிறார். அதற்கு நாம் ஆயத்தமா! பரிசுத்தஆவியானவர் நம்முடைய வாழ்வில் செயற்படத்தக்கதாக, கர்த்தருடைய கையிலே நமது வாழ்வை அர்ப்பணித்திருப்போமாயின், அவரது நாமம் மகிமைப்படத்தக்க விதத்தில் நம்மையும் அவரே உபயோகிப்பார். யகாசியேலைப்போல உரிய நேரத்தில் மிகப் பிரயோஜனமான செயலை, தேவ ராஜ்யத்திற்குரிய பணியில் செய்து முடிக்க தேவன்தாமே உங்களையும் பயன்படுத்துவாராக!

நன்றி :சத்தியவசனம் சஞ்சிகை (ஜுன் – ஜூலை 2013, இ.வஷ்னீ)

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *